மும்பையில் கனமழை... சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி- 5 பேர் படுகாயம்
மும்பை: மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தெற்கு மும்பையில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த டார்டியோ பகுதியில் உள்ள ரத்தன் டாடா காலனியில் உள்ள கட்டிடத்தின் சுவர் திடீரென சரிந்து விழுந்தது.
இதில் கட்டிடத்தின் இடிபாடுகளில் 7 பேர் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களில் இரண்டு பேர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிகிச்சைப் பெற்று வரும் ஐந்து பேரில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.