For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓரினச் சேர்க்கைக்கு பச்சைக் கொடி காட்டுவதா? சோனியா, ப.சிக்கு வைகோ கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஓரினச் சேர்க்கைக்கு சோனியாகாந்தி பச்சைக்கொடி காட்டுகிறார், நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனிமனித சுதந்திரம் என்கிறார். இது இழிவான செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கை குறித்து உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை வரவேற்று இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கூறியுள்ளதாவது:

"டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை எனும் அருவருக்கத் தக்க பண்பாட்டு விரோதச் செயலை அங்கீகரித்தும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லுபடியாகாது என்றும் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்து, டிசம்பர் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான நீதியரசர் சிங்வி அவர்களும், நீதியரசர் முகோபாத்தியாய அவர்களும் தந்த தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான தீர்ப்பாகும்.

Vaiko slams Sonia Gandhi express verdict of SC for gay

மனித குலத்தின் மாண்பைக் காக்கவும், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட புராதன நாகரிகம் தழைத்த மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் கருத்தில் கொண்டு, மேலை நாட்டு கலாச்சாரச் சீரழிவுகள் நமது மக்களின் எதிர்கால வாழ்வை நாசமாக்கும் அபாயத்தை ஆராய்ந்தும் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

உலகத்தில் மனிதர்கள் மட்டுமல்ல, பல்வேறு ஜீவராசிகளின் படைப்பிலும் ஆண்பால், பெண்பால் என்ற இருதரப்பின் உணர்வுகளில் ஏற்படும் ஈர்ப்பு இனக் கலப்பு உயிரினங்களை உற்பத்தி செய்கின்றன. மிருகங்கள், பறவைகள்கூட ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது இல்லை.

காங்கிரஸ் அரசு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்துக்கே அறத்தைப் போதிக்கும் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் அறநூல்களில் வகுக்கப்பட்ட ஒழுக்கமும், கற்பும், பண்பாடும் தான் தமிழ் இனம் பாதுகாக்க வேண்டிய கருவூலமாகும். அப்பண்பாட்டை அடியோடு சிதைத்து, கலாச்சாரத்தை வேறோடு பிடுங்கி எறிய இன்றை காங்கிரஸ் மத்திய அரசும், முற்போக்குப் போர்வையில் இருக்கின்ற வக்கரித்த புத்தி உடையவர்களும் ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும் மனதுக்கு வேதனையையும் தருகிறது.

சட்ட அனுமதி

தமிழர்கள் நாகரிகத்தோடு வாழ்ந்த காலத்தில் அந்தப் பண்பாடு அறியாது வாழ்ந்து வந்த மேலை நாடுகளில் ஒழுக்கச் சிதைவுகள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை ஆனதால் ஓரினச் சேர்க்கை எனும் இழிவான பழக்கத்துக்கு இரகசியமாக ஆளானவர்கள், பின்னர் வெளிப்படையாகச் சங்கங்கள் அமைத்து, அதற்கு சட்ட அனுமதி நாடி ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள். அதைக் கேள்விப்பட்டு, மனம் பதை பதைத்தது.

நல்லவேளையாக இத்தகைய ஈனத்தனமான கேடுகள் இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழகத்தில் தலைகாட்ட முடியவில்லை என்று நிம்மதி ஏற்பட்டது. ஆனால், சமீப காலமாக ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தியாவிலும், ஏன் தமிழ்நாட்டிலும் கூட சங்கம் அமைத்து ஊர்வலம் நடத்துகிற அளவுக்கு நிலைமை பாழ்பட்டதை எண்ணி மனம் வேதனையால் துடித்தது.

சோனியா காந்தி

தனி மனித சுதந்திரம் என்ற மாய்மால கருத்தை மத்திய அரசும், பலரும் முன் வைக்கிறார்கள். இத்தாலிய சோனியா காந்தி ஓரினச் சேர்க்கைக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். அவரது மகன் ராகுல் காந்தி ஓரினச் சேர்க்கை தனிமனித சுதந்திரம் என்கிறார். அப்படியானால், மேலை நாடுகளில் நிர்வாணச் சங்கங்கள் அமைத்து உள்ளார்கள்.

இனிமேல் நிர்வாணமாகவே மக்கள் மத்தியில் உலவுவதும் தனிமனித சுதந்திரம் என்று இந்தப் போலி முற்போக்குவாதிகள் அதற்கும் வக்காலத்து வாங்கக்கூடும். திருமணத்துக்கு முன்பே ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு பெண்கள் கருத்தரிப்பதும், ஒருவன் ஒருத்தி என்ற தமிழர் வாழ்வு நெறியையே அழித்துவிட்டு, காமக் கேளிக்கைகளின் கூட்டமாகவே களியாட்டம் போடலாம் என்ற கேவலச் செயலைக்கூட தனி மனித சுதந்திரம் என்று இவர்கள் வாதிடக்கூடும்.

சிதம்பரத்திற்கு கண்டனம்

இந்தியத் தண்டணைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவை நீக்குவதற்கும் தயாராகிவிட்ட மத்திய அரசின் நிதி அமைச்சர் சிதம்பரம் தனது அதிமேதாவித்தனத்தை அறிவிப்பதாகக் கருதிக்கொண்டு, நாம் என்ன 1860 ஆம் ஆண்டு சட்டத்துக்குப் போக முடியுமா? என்று அரைவேக்காட்டுத் தனமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். அப்படியானால், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் எண்ணற்ற பிரிவுகள் ஆங்கிலேயர் ஆட்சியின்போதுதான் ஏற்படுத்தப்பட்டவை. அந்தச் சட்டப் பிரிவுகளை எல்லாம் சிதம்பரம் நீக்கச் சொல்வாரா? ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக ஒருசிலர் எழுப்புகின்ற கருத்துகளை ஏடுகளும், ஊடகங்களும் பெரிதுபடுத்தி பிரசுரிப்பது பத்திரிகை தர்மத்துக்கே எதிரானது ஆகும்.

இழிசெயல்

நாட்டின் கோடான கோடி மக்களும், அறநெறியாளர்களும் ஓரினச் சேர்க்கையை கடுமையாக வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும்.

உச்ச நீதிமன்றம் டிசம்பர் 11 ஆம் தேதி தந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முற்படுவது வெட்கக்கேடான இழி செயல் என கண்டனம் தெரிவிக்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK chief secretary Vaiko condemned to Congress leader Sonia Gandhi express to SC Verdict of Gay sex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X