• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன செய்து கொண்டிருக்கிறது அதானி குழுமம்? ஆஸ்திரேலியா நோக்கி ஒரு பயணம்

By BBC News தமிழ்
|

அதானியின் நிலக்கரி திட்டம் ஆஸ்திரேலியாவில் கடந்த பல மாதங்களாக மோசமான எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

கெளதம் அதானி
SAM PANTHAKY/AFP/Getty Images
கெளதம் அதானி

இத்திட்டம் சூழலியலை சிதைக்கும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், பசுமை இல்ல வாயுவை அதிகப்படுத்தும் என்று இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறி வருகிறார்கள்.

இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள், இத்திட்டத்தால் அதிகளவில் வேலை வாய்ப்பு உருவாகும் என்கிறார்கள்.

சரி , அங்கு என்னதான் நடக்கிறது?

உண்மையை கண்டறிய நேரில் சென்றோம்.

நீண்ட பயணம்

திட்டமிடப்பட்டுள்ள இந்த நிலக்கரி சுரங்கம் வடக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்த் மாகாணத்தில் உள்ளது.

வழுவழுப்பான சாலை, தூசுப்படிந்த பாதை என ஏறத்தாழ 400 கி.மீ பயணித்தோம். வேகமாக செல்வதை தவிர வேறு வழியில்லை.

செல்லும் வழியெல்லாம் அலங்காரமான பெயரைக் கொண்ட வேளாண் பண்ணைகளையும், கங்காருகளையும் காண முடிந்தது. ஆனால், அந்த பாதையில் எந்த குடியிருப்புகளையும் காண முடியவில்லை.

அதானி எதிர்ப்பு குழுவினர்
Getty Images
அதானி எதிர்ப்பு குழுவினர்

அந்த பெரும்பாதையிலிருந்து கொஞ்சம் தள்ளி அதானி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ரகசியமாக முகாம் இட்டு இருந்தார்கள்.

ஏன் இந்த ரகசியம் என்ற நம் கேள்விக்கு "தங்களை அதானி ஆதரவு கும்பலிடமிருந்து காத்துக் கொள்ளதான் " என்கிறார்கள் அவர்கள்.

வனாந்திரத்தில் உள்ள அந்த முகாமிலும் வைஃபை சிறப்பாக வேலை செய்கிறது.

நிலக்கரி சுரங்கத்திற்காக திட்டமிடப்பட்டிருக்கும் பகுதியில் கங்காரு
BBC
நிலக்கரி சுரங்கத்திற்காக திட்டமிடப்பட்டிருக்கும் பகுதியில் கங்காரு

இத்திட்டத்தை எதிர்க்கும் ஸ்காட் டைனஸ், "இங்கு தான் எங்கள் திட்டங்களை விவாதிப்போம். நன்கொடையின் மூலம் நாங்கள் செயல்படுகிறோம். எங்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் யாரும் பணக்காரர்கள் இல்லை. இந்த திட்டத்தை நிறுத்துவதால், எங்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்க போவதில்லை" என்கிறார்.

நிலக்கரி நிலத்தில் இருக்க வேண்டும் என்று அறிவியல் சொல்கிறது. அந்த அறிவியலுக்காக நாங்கள் இங்கு இருக்கிறோம் என்கிறார் ஸ்காட்.

இந்திய நிறுவனம் என்பதால் எதிர்கிறீர்களா?

மேற்கத்திய நிறுவனமாக இருந்தால் அதானி குழுமம் இந்த எதிர்ப்பை சந்தித்து இருக்காது. இந்திய நிறுவனம் என்பதால்தானே எதிர்க்கிறீர்கள். இது அதானி குழும ஆதரவாளர்கள் முன் வைக்கும் வாதம். இதையே நாமும் அவர்களிடம் கேட்டோம்.

அதற்கு ஸ்காட், "இது ஆஸ்திரேலியா நிறுவனமாக இருந்தாலும், நாங்கள் எதிர்ப்போம்" என்கிறார்.

நிலக்கரி சுரங்கம்
BBC
நிலக்கரி சுரங்கம்

இதே கேள்வியை ஆஸ்திரேலியா வளங்களுக்கான அமைச்சர் மேத்யூ கேனவனிடம் பின்னர் கேட்ட போது, அவர்,"மற்ற நாடுகளை போல, பிறநாட்டினர் தங்கள் நாட்டுக்குள் வருவதை விரும்பாத சிறு குழு இங்கும் உள்ளது." என்றார்.

கென் பீட்டர் டோட், உள்ளூர் பிர்ரி- வைடி சமூகத்தைச் சேர்ந்த முதியவர், போராட்டம் நடக்கும் இடம் அருகே வசிக்கிறார்.

அடர்த்தியான தோப்புகள், மரங்களுக்கு நடுவே இயற்கையின் மடியில் அவர் வீடு சொர்க்கம் போல உள்ளது. அவர் வீட்டில் எங்கும் சூழலியல் காப்பு பிரச்சார தட்டிகள் காணப்படுகிறது.

அந்த வீட்டின் பின் அறையில் ஆண், பெண், குழந்தைகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன.

கென் பீட்டர், "எங்களுடைய பாரம்பரிய நிலங்கள், ஆறு, நீர் நிலைகள் அனைத்தும் விவசாயத்திற்காக, சுரங்க தொழிலுக்காக அழிக்கப்பட்டதற்கு நாங்கள் சாட்சியாக இருந்திருக்கிறோம். இப்போது நிலக்கரி சுரங்கத்திற்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. அது மீண்டும் உருவாக பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும். இது மிகவும் கவலை தரும் விஷயம்." என்கிறார்.

பின் தொடந்த வாகனம்

நாங்கள் நிலக்கரி சுரங்கத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள இடத்தை நெருங்கிய போது, எங்களை ஒரு வாகனம் பின் தொடர்வதை கண்டோம்.

பின் தொடர்ந்த வாகனம்
BBC
பின் தொடர்ந்த வாகனம்

பின்னர் அந்த வாகனம் எங்களை நெருங்கி வந்து நின்றது. அந்த வாகனத்திலிருந்து வெளியே வந்த ஒரு நபர், அவரது மொபைலில் எங்களை புகைப்படம் எடுத்தார்.

நாங்கள் அவரை யாரென்று விசாரித்த போது, அவர் திரும்பிக் கொண்டார். அவரை நாங்கள் படம் எடுத்ததும் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலக்கரி சுரங்கத்திறக்கான இடம், மாடுகளும்... கங்காருகளும் வாழும் மிகப்பெரிய வனாந்திரம்.

12.5 பில்லியன் டாலர் மதிப்பிலான நிலக்கரி சுரங்கம் அமைப்பது மட்டும் நிலக்கரி சுரங்கத்திற்கான சவால் இல்லை. நிலக்கரி சுரங்கத்திலிருந்து துறைமுகம் வரை 400 கி.மீ நீளத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதற்காக ரயில் பாதை அமைப்பதற்கு வேளாண் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். இதுவும் அவர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.

இருப்புப் பாதை போட்டால் என்ன நிகழும்?

இருப்புப் பாதை போடப்பட்டால், அந்தப் பகுதியில் செயல்படாமல் முடங்கி இருக்கும் நிலக்கரி சுரங்கங்கள் மீண்டும் செயல்பட தொடங்கும். அதிக அளவில் நிலக்கரி எடுக்கப்படும் அதற்காக ஆற்றல் பயன்படுத்தப்படும். இது மோசமான விளைவுகளை கொண்டு வரும். முற்றும் முழுவதுமாக சூழலியல் கெடும். அதுமட்டுமல்ல, நிலத்தடி நீர் இதனால் பாழாகும். மேலும், ஆஸ்திரேலியாவின் எழில்மிகு கடற்கரைகள் தமது பொலிவை இழக்கும்.

நிலக்கரியை சுத்திகரிக்க அதிகளவில் நீர் தேவைப்படும்
BBC
நிலக்கரியை சுத்திகரிக்க அதிகளவில் நீர் தேவைப்படும்

அதானியின் ஆஸ்திரேலிய இணையதளம், "இருப்புப் பாதை போடப்பட்டால், அதற்கு ஆண்டுக்கு 100 மில்லியன டன் பொருட்களை கையாளும் திறன் இருக்கும்."என்கிறது.

அழுக்கான நிலக்கரிகளை சுத்திகரிக்க அதிகளவில் தண்ணீர் தேவைப்படும்.

கடன் மறுப்பு

பின்தங்கிய பகுதியான குயின்ஸ்லாந்துக்கு இந்த திட்டம் அதிக அளவு வேலை வாய்ப்புகளை கொண்டு வரும் என்கிறார்கள் இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள்.

பிபிசிக்கு அதானி அளித்த ஓர் அறிக்கையில், "இத்திட்டத்திற்காக 112 அனுமதிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 நீதிமன்றங்களில், இந்த 112 அனுமதிகளும் பரிசோதனை செய்யப்பட்டது." என்கிறார்.

கடுமையான எதிர்ப்பை இத்திட்டம் சந்திப்பதால், இத்திட்டத்திற்கு வங்கிகள் கடன் கொடுக்க தயங்குகின்றன.குயின்ஸ்லாந்த் அரசு கூட கடன் கொடுக்க மறுத்துவிட்டது.

நிதி ஒரு பக்கம் என்றால், உலக சூழல்களும் அதானியின் நிலைமையை மோசமாக்கி உள்ளது.

இப்போது மக்கள் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். பியூஸ் கோயல், இந்தியாவிடம் போதுமான நிலக்கரி உள்ளது. இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறி உள்ளார். சர்வதேச முதலீடு நிறுவனமான பிளாக்ராக் முதலீடு நிறுவனம், இனி நிலக்கரி எதிர்காலம் இல்லை என்று கூறி உள்ளது.

சூழலியலாளர் லான்ஸ் பேணி,"குயின்ஸ்லாந்தில் அதிகளவில் பவளப்பாறைகள் உள்ளன. நிலக்கரியை கையாளும் துறைமுகம் அங்கு வந்தால், நிலக்கரி அங்கு கொட்டப்படும். இதனால் கடல் சூழலியல் முற்றும் முழுவதுமாக கெடும்."

இந்தியாவில், வங்காள புலிகள் உள்ளன தானே. அதை நீங்கள் கொல்வீர்களா? இந்தப் பகுதியில் நிலக்கரியை துறைமுகம் அமைப்பது. வங்காள புலிகளை கொல்வதற்கு சமம் என்கிறார் அவர்.

இந்தியாவும், சீனாவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளன. அதானி இங்கு உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எங்கு ஏற்றுமதி செய்வார்? நிலக்கரி ஆற்றலின் எதிர்காலமே கேள்வி குறியாக இருக்கும் போது இதில் இந்தளவு முதலீடு செய்வது எப்படி அறிவார்ந்த செயலாக இருக்கும்? என்கிறார்கள் இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள்.

முதலீடு குறித்து அந்நிறுவனத்திடம் பேசிய போது, "அதானி இத்திட்டத்தில் உறுதியாக இருக்கிறார். இத்திட்டத்திற்கு உறுதியாக நிதி கிடைத்துவிடும்" என்கிறார்கள்.

வளங்களுக்கான மத்திய அமைச்சர் மேத்யூ கேனவன் பிபிசியிடம், "கடந்த காலத்தை ஆய்வு செய்து பார்க்கும் போது, அதானியின் செயல்திறன் மகிழ்ச்சிகரமான ஒன்றாக உள்ளது. நான் அவரை ஆஸ்திரேலியாவிற்கு வரவேற்கிறேன். பலன்கள் இரண்டு நாடுகளுக்கும் கிடைக்கும்படி செயல்பட வேண்டும்." என்கிறார்.

ஆற்றல் குறித்து ஆய்வு செய்யும், டிம் பக்லே, "இந்த ஆண்டு இத்திட்டம் தொடங்கப்படவில்லை என்றால், இனி எப்போதும் தொடங்கப்படாது என்றுதான் நினைக்கிறேன்." என்கிறார்.

ஆனால், டவுன்ஸ்வில்லே மக்கள் இத்திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

மக்கள் ஆதரவு

சூழலியல் பிரச்சனைகளை எல்லாம் கடந்து, இப்பகுதியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது.

இந்தப் பகுதியில் வேலையில்லா திண்டாட்டத்தால், கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம்.

எங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும். அதனால் நாங்கள் அதானியை ஆதரிக்கிறோம் என்கிறார்கள் டவுன்ஸ்வில்லே மக்கள்.

இதே கருத்தைதான் குயின்ஸ்லாந்த் பகுதியில் உள்ள பெரும்பாலான டாக்ஸி ஓட்டுநர்களும், மக்களும் எதிரொலிக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய பெருநகரங்களில் வசிக்கும் மக்களுக்கு எங்களின் பிரச்சனைகள் எதுவும் புரிவதில்லை. நாங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை விவரிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

பலர் இத்திட்டத்தை எதிர்ப்பவர்களை புறக்கணிக்கிறார்கள். அவர்கள், "ஓ... அந்த சூழலியல்வாதிகளா...?" என்று கூறி அவர்களை பொருட்படுத்தாமல் கடந்து சென்று விடுகிறார்கள்.

"போராட்டக்காரர்களின் சில சூழலியல் சார்ந்த வாதங்கள் ஏற்றுக் கொள்வது போலதான் உள்ளது. ஆனால், அவர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும், வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு நிலக்கரி ஆற்றல் அவசியம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டும் அவர்கள் நம்பி இருக்க முடியாது. அவர்கள் ஆஸ்திரேலியாவிடம் நிலக்கரி வாங்கவில்லை என்றால், வேறு எங்காவது வாங்கிக் கொள்வார்கள்" என்று இத்திட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறார் டவுன்ஸ்வில்லே நிறுவனத்தைச் சேர்ந்த மிக்கேல் மேக்மில்லன்.

'ஸ்டாப் அதானி'

ஸ்டாப் அதானி இயக்கம்
BBC
ஸ்டாப் அதானி இயக்கம்

இக்கருத்திலிருந்து முரண்படும், 'ஸ்டாப் அதானி' பிரசாரத்தை முன்வைக்கும் ஜான்ஸ்டன் சொல்கிறார், "நான் அதானிக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் ஒருவர் சில நெறி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்." என்கிறார்.

நிலக்கரி ஒரு டைனாசர். அது நிலத்திற்கு அடியில்தான் இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

அதானி குழுமம், "வெளிநாட்டினர் தரும் பணத்தால் இயங்கும் நிலக்கரிக்கு எதிரான ஒரு குழு, இத்திட்டத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பெரும்பான்மை மக்களின் கருத்துகளுக்கு எதிராக செயல்படுகிறது." என்கிறது.

இந்த திட்டம் பலகாலமாக தடைப்பட்டு வருவதால், வேறு ஏதேனும் வழிகள் உள்ளதா என்று அந்நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது என்கிறார் ஓர் ஆய்வாளர்.

எந்த முடிவு எடுத்தாலும், அது இங்கு நிச்சயம் விவாதப் பொருளாகும்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
ஆஸ்திரேலிய பெருநகரங்களில் வசிக்கும் மக்களுக்கு எங்களின் பிரச்சனைகள் எதுவும் புரிவதில்லை. நாங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை விவரிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X