என்ன பண்ணச் சொல்றீங்க, கொன்னு போட்றவா.. மீடியாக்களிடம் எகிறிய மமதா பானர்ஜி!
கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று திமிர்த்தனமாக பேசிய திரினமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி தபஸ் பாலின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு கோபம் அடைந்த கட்சித் தலைவரும், முதல்வருமான மமதா பானர்ஜி, இப்ப என்ன செய்யச் சொல்றீங்க, அவரைக் கொன்று போட்டு விடவா என்று கோபம் காட்டினார்.
முன்னதாக தனது பேச்சு குறித்து கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார் தபஸ் பால். மமதாவும் கூட தபஸ் பாலின் பேச்சுக்கு கடும் வருத்தமும், ஆதங்கமும் தெரிவித்திருந்தார்.

இது கண்டனத்துக்குரிய பேச்சு, வெறுக்கத்தக்க பேச்சு என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேட்டபோது, பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமாறு அவரை நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார். அப்போது சில செய்தியாளர்கள் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டனர்.
இதைக் கேட்டதும் கோபமடைத மமதா, அவர் தவறு செய்து விட்டார். கட்சி அவரை எச்சரித்துள்ளது. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க உத்தரவிட்டுள்ளேன். இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள். அவரைக் கொலை செய்ய வேண்டுமா என்று கேட்டார்.