For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைய எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது ஏன்?

By BBC News தமிழ்
|
கூடன்குளம்
Getty Images
கூடன்குளம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலையின் வளாகத்திற்கு உள்ளேயே அணுக் கழிவுகளை சேகரிக்கும் மையத்தை அமைப்பதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணுவுலைகள் இயங்கி வருகின்றன. மேலும் நான்கு அணு உலைகளை அமைக்கும் பணியை தேசிய அணுமின் சக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த அணு உலைகளில் இருந்து உற்பத்தியாகும் கழிவுகளை அணுமின் நிலைய வளாகத்திற்கு உள்ளேயே சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான அனுமதியை (Siting Clearance) கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அளித்திருக்கிறது.

இந்த அணுக் கழிவு சேமிப்பு மையம் நிலையானதா அல்லது தற்காலிகமானதா என்பது அந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அணு உலை வளாகத்திற்கு உள்ளே அமைக்கப்படும் இந்த மையத்தில் நிரந்தரமாக அணுக் கழிவுகள் சேமிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கூடங்குளம் அணு உலையைப் பொருத்தவரை தற்போது அங்கு செயல்படும் இரண்டு அணு உலைகளிலும் உருவாகும் கழிவுகள் உலைக்குக் கீழேயே சேமிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான், வளாகத்திற்குள் கழிவுகளைச் சேமிக்கும் மையத்தைத் துவங்க இந்திய அணு சக்தி ஒழுங்காற்று வாரியம் முடிவெடுத்துள்ளது.

கூடங்குளம் அணு உலையின் அணுக் கழிவு பிரச்னை

கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தியாகும் கழிவுகள் எங்கே சேகரிக்கப்படும் என்பது நீண்ட நாட்களாகவே விவாதத்திற்கு உரிய ஒன்றாக இருந்து வருகிறது. கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கூடங்குளம் அணு உலை செயல்பட 15 நிபந்தனைகளை விதித்தது.

அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான (away from reactor) வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்றும் நிரந்தரமாக அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான ஆழ் நில கழிவு மையம் (Deep Geological Repository) ஒன்றும் உருவாக்க வேண்டும் என்றும் இதில் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது.

5 ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதம் முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்தி கழகம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பது தொடர்பான தொழில்நுட்பம் முழுவதுமாக உருவாக்கப்படாத நிலையில் அந்தக் கட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கல் இருப்பதாகவும் அதனால் மேலும் 5ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 2022வரைக்கும் கால அவகாசம் அளித்திருக்கிறது.

கூடன்குளம்
Getty Images
கூடன்குளம்

முதல் இரண்டு உலைகளின் கழிவுகளை, உலைக்கு வெளியே சேமித்து வைப்பதற்கான AFR மையத்தை அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் 2019ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி நடக்குமென தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், இத்திட்டத்திற்கு கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தக் கூட்டம் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த அனுமதி அறிவிப்பு வெளியானதும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்திருந்த அணுசக்தித் துறை இந்தியாவில் அணுக் கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்கும் ஆழ்நில கழிவு மையம் அமைப்பதற்கான அவசியம் தற்போது எழவில்லை எனத் தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு முற்றிலும் எதிரான இந்த நிலைப்பாடு கூடங்குளத்தில் உருவாக்கப்படும் கழிவுகள் அனைத்தும் நிரந்தரமாக அந்த வளாகத்திற்குள்ளாகவே வைக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தை உண்டாக்குகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிரந்தரமாக அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்கும் இடத்தை கண்டறியும் வரை கூடங்குளம் அணுவுலையிலிருந்து மேற்கொண்டு மின்னுற்பத்தி செய்யக் கூடாது மற்றும் தற்போது நடந்து வரும் நான்கு உலைகள் அமைக்கும் பணிகளையும் நிறுத்த வேண்டும்" என்றும் கோரியுள்ளது.

"இந்தத் திட்டத்தின் மதிப்பு 538 கோடி ரூபாய். ஒட்டுமொத்தமாக இந்த மையத்தில் 4328 உருளைகளை வைக்க முடியும் என்கிறார்கள். அப்படியானால், எந்த அளவுக்கு இதிலிருந்து கதிர்வீச்சும் வெப்பமும் இருக்கும் என்று புரிந்துகொள்ளலாம். தற்போது அணு உலைக்குக் கீழேயே வைத்திருப்பதால், கண்காணிப்பும் பாதுகாப்பும் இருக்கும்.

ஆனால், உலைக்கு வெளியே அதே அளவு கண்காணிப்பு இருக்குமா என்பதைச் சொல்ல முடியாது. அதனால், கதிர்வீச்சு தண்ணீரிலும் காற்றிலும் பரவலாம்" என்கிறார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணப்பாளரான சுப. உதயகுமார்.

உதயகுமார்
Getty Images
உதயகுமார்

கூடங்குளம் அணு உலை வளாகத்தின் மொத்தப் பரப்பே 13 சதுர கிலோ மீட்டர்தான். அதற்குள் ஆறு அணு உலைகள், கடல்நீரை நன்னீராக்கும் ஆலை, அணுக் கழிவை மறுசுழற்சி செய்யும் ஆலை ஆகியவை போக, இப்போது அணுக் கழிவு மையத்தையும் அமைப்பது ஆபத்தானது என்கிறார் அவர். ஆழ்நிலக் கழிவு மையம் ஒன்றை அமைத்தே அங்கு கழிவுகளைச் சேமிக்க வேண்டுமென்கிறார் அவர்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவரும் ராதாபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, "இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டபோதே அணுக்கழிவுகளை ரஷ்யாவிற்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு சோவியத் ரஷ்யா உடைந்ததால் திட்டம் நின்று போனது. இதற்குப் பிறகு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தில் அணுக்கழிவுகளை எங்கு சேமிப்பது என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் வசிக்காத பகுதியான பொக்ரான் போன்ற இடங்களில்தான் வெடிகுண்டு சோதனையை செய்தார். அதேபோல, மக்கள் வாழாத இடங்களில்தான் அணுக்கழிவு மையத்தை அமைக்க வேண்டும்." என்று தெரிவித்திருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இந்த அணுக் கழிவு மையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கூடன்குளம்
Getty Images
கூடன்குளம்

ஆழ் நில கழிவு மையம் (Deep Geological Repository) அமைக்கப்படுமா?

உலகம் முழுவதும் அணு உலைகளில் உருவாகும் கழிவுகள், மிக ஆழமாக தோண்டப்பட்ட குழிகளில் போடப்பட்டு அதன் மீது கான்க்ரீட் கலவை ஊற்றப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அம்மாதிரியான இடங்கள் பல நூறு வருடங்களுக்கு மனிதர்கள் நெருங்காமல் பாதுகாக்கப்படுகின்றன.

2012ஆம் ஆண்டு கூடங்குளம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றை இதுபோன்ற ஆழ்நில கழிவு மையமாக மாற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு கோலாரில் வசித்த மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், இந்தியா ஆழ்நில கழிவு மையம் அமைக்கப்போகிறதா, அணுக் கழிவுகளை என்ன செய்யப் போகிறது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியாவிற்கு ஆழ்நில கழிவு மையம் தேவையில்லையெனத் தெரிவித்தார்.

"இந்தியாவில் பயன்படுத்தப்படும் அணு உலைத் தொழில்நுட்பத்தால், உருவாகும் அணுக் கழிவு மிகக் குறைவு. அவற்றை பிரித்தெடுப்பதாலும், எரித்துவிடுவதாலும் கழிவின் அளவு மிகவும் குறைகிறது. ஆகவே, உடனடியாக ஆழ்நில அணுக் கழிவு மையம் தேவையில்லை" என அவர் கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில்தான் அணு உலை வளாகத்திற்குள்ளேயே AFR முறையில் அமைக்கப்படும் இந்த அணுக் கழிவு மையம் பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
"The total area of the Koodankulam nuclear reactor complex is 13 square kilometers. Within that, six nuclear reactors, a seawater desalination plant and a nuclear waste recycling plant, it is dangerous to set up a nuclear waste disposal center now," say environmental activists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X