'ஒன்னு பாகிஸ்தானுடன் சேருங்க.. இல்லைன்னா தனி நாடுதான்..' காஷ்மீர் பற்றி இம்ரான் கான் சர்ச்சை பேச்சு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா அல்லது தனி நாடாக வேண்டுமா என்பதை வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்து கொள்ளலாம் எனப் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.
Recommended Video
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுதந்திரம் அடைந்தது முதலே காஷ்மீர் விவகாரத்தில் மோதல் தொடர்கிறது. காஷ்மீர் தங்கள் நாட்டிற்கே சொந்தம் எனப் பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது.
காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான இந்தப் பகுதியில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சிகள்
தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் பிரிவின் தலைவர் மரியம் நவாஸ், காஷ்மீரில் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) தற்போது இருக்கும் நிலைப்பாட்டை மாற்றி, காஷ்மீரை பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாநிலமாக மாற்றுவது குறித்து பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

திட்டமில்லை
இந்நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "காஷ்மீரை (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணமாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. சொல்லப்போனால் இதுபோன்ற பேச்சு கூட எப்படி எழுந்தது எனத் தெரியவில்லை. ஐநா முன்மொழிந்ததைப் போலக் காஷ்மீர் மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடத்தும் நாள் விரைவில் வரும்.

பாகிஸ்தான் அல்லது தனி நாடு
ஐநா முன்மொழிந்த வாக்கெடுப்பிற்குப் பிறகு, மீண்டும் பாகிஸ்தான் அரசும் ஒரு வாக்கெடுப்பை நடத்தும். அதில் அவர்கள் பாகிஸ்தானுடன் சேர வேண்டுமா அல்லது தனி நாடாக வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்கலாம். அப்போது காஷ்மீர் மக்கள் எங்களுடன் இருப்பார்கள் என்றே நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

ஐநா திட்டம்
காஷ்மீர் விவகாரத்தில் ஐநா முன்மொழிந்த திட்டப்படி காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதில் காஷ்மீர் மக்கள் இந்தியாவில் இணைய வேண்டுமா அல்லது பாகிஸ்தான் நாட்டுடன் இணைய வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம். ஐநா திட்டப்படி தனிநாடு என்ற திட்டமே இல்லை. இருந்தபோதிலும் பாகிஸ்தான் பிரதமர் தனிநாடு எனப் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மத்திய அரசு
இதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தும் வெளியிடப்படவில்லை. ஆனால், கடந்த காலங்களில் காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதை மத்திய அரசு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. சட்டப்பிரிவு 360 நீக்கப்பட்ட போது, அதைப் பாகிஸ்தான் ஐநாவில் எழுப்ப முயன்றது. ஆனால், இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும் இதைத் தீர்க்கும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது என்றும் இந்தியா தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications