பல வருட வீட்டு சிறை! ராணுவத்திற்கு பயந்து ஓடியவர்! பாகிஸ்தானின் புதிய பிரதமராகும் ஷேபாஸ்? யார் இவர்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் அங்கு பதவியை இழந்துள்ளார். இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடைந்த நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆதரவுடன்.. ஷேபாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக இருக்கிறார். யார் இவர்? இவரின் பின்னணி என்ன என்று பார்க்கலாம்?
Recommended Video
இந்தியாவின் காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் இருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிக்கு குடியேறிய குடும்பம்தான் ஷேபாஸ் ஷெரிப் குடும்பம். பிரிவினையின் போது இவர்கள் பாகிஸ்தான் சென்றனர். இவர் வேறு யாரும் இல்லை.. பாகிஸ்தானின் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர். 69 வயதாகும் இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியாவார்.
ஆம் நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில் அவரின் தம்பிதான் அங்கு பிரதமராக போகிறார். நவாஸ் ஷெரிப் ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக மூன்று முறை இருந்தவர். 2018ல் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனில் வசித்து வருகிறார்.

யார் இவர்
1. இவர் பாரம்பரியமாக அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். அதே சமயம் இவர் குடும்பம் பல்வேறு பிஸ்னஸ்களை செய்து வந்துள்ளது.
2. இவருக்கு சொந்தமாக பல கோடி மதிப்பு கொண்ட ஸ்டீல் கம்பெனி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரைத்தான் தற்போது எதிர்க்கட்சிகள் அங்கு பிரதமராக முன்னிறுத்தி உள்ளன.
3. முன்னதாக நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் லண்டனில் அனுமதி இன்றி வசித்து வருகிறார்.

முஸ்லீம் லீக்
4. நவாஸ் ஷெரிப்பின் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சிக்கு கடந்த 2018 மார்ச் மாதம் இவர் தலைவராக அறிவிக்கப்பட்டார். அப்போதுதான் நவாஸ் ஷெரிப் பனாமா வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனால் இவருக்கு தலைவர் பதவி கிடைத்தது.
5. பாகிஸ்தான் பஞ்சாப்பின் முதல்வராக 1997, 2008 மற்றும் 2013 ஆகிய மூன்று முறை ஷேபாஸ் ஷெரிப் பதவி வகித்து இருக்கிறார்.
6. 1999ல் அங்கு நவாஸ் ஷெரிப் ஆட்சியை முஷரப் தலைமையிலான ராணுவம் கவிழ்த்தது. அப்போது ஷேபாஸ் ஷெரிப் ஆட்சியையும் பாகிஸ்தான் பஞ்சாப்பில் கவிழ்ந்தது. அப்போது இவர் ஒருவருடம் சிறையில் இருந்தார்.

துறவறம்
7. பின்னர் முஷரப் கொடுத்த மன்னிப்பால் சவுதி அரேபியாவிற்கு தப்பி ஓடினார். இவருக்கும் ராணுவத்திற்கும் அப்போது ஏழாம் பொருத்தம். அங்கு நவாஸ் மற்றும் ஷேபாஸ் ஷெரிப் இருவரும் 10 வருடங்கள் இருக்க வேண்டும் என்று கையெழுத்து வாங்கி முஷரப் அனுப்பி இருந்தார். இது கிட்டத்தட்ட வீட்டு சிறை போலத்தான்.
8. ஷேபாஸ் ஷெரிப் 2007ல் மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார்.

பின்னணி
9. இப்போது எதிர்க்கட்சி கூட்டணியை வழி நடத்தினாலும், இவர் மீதும் நிறைய பணமோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன. கருப்பு பண புகார் காரணமாக 2019ல் பாகிஸ்தானில் தேசிய கணக்காயம் இவரின் 23 சொத்துக்களை மொத்தமாக முடக்கியது. அதன்பின் 2020ல் இவரை கைதும் செய்தது. இந்த வழக்கில் அவர் சிறைக்கும் சென்றார். கடந்த 2021 ஏப்ரல் மாதம்தான் கருப்பு பண வழக்கில் இவருக்கு பெயில் வழங்கப்பட்டது.
10. இப்போது பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியோடு இணைந்து இவர் இம்ரான் ஆட்சியை கவிழ்த்து இருக்கிறார். இரண்டு கட்சிகளும் ஒரு காலத்தில் பரம எதிரிகளாக இருந்த நிலையில் இம்ரானை வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளன.

எப்படி ஆட்சி கவிழ்ந்தது?
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அங்கு 342 எம்பிக்கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை. ஆனால் இம்ரான் கானின் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்பிக்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர் என்பதால் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். எதிர்க்கட்சி கூட்டணிக்கு 174 எம்பிக்கள் உள்ளனர். இவர்கள் இம்ரானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வாக்களித்தனர்.












Click it and Unblock the Notifications