தைவானிலும் எதிரொலித்த தமிழர்களின் முழக்கம்.. காவிரிக்காக, ஸ்டெர்லைட் மூடலுக்காக!

தைபே: புலம் பெயர்ந்து வந்து தைவானில் வாழ்ந்தாலும், தைவான் வாழ் தமிழர்கள் தாய் தமிழகத்தின் மீது எப்பொழுதும் பற்றுகொண்டிருப்பர்.

தமிழகத்தில் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடைபெறும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மேலும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு போராட்டம் ஒருங்கினைக்கப்பட்டது.

தைபேயில் உள்ள தேசிய தைவான் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் முன்புறம் நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தைவான் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர், முனைவர். சங்கர் ராமன் தலைமை தாங்கினார்.

இடிமுழக்கத்துடன் கூடிய கொட்டும் மழையிலும், தைவான் வாழ் தமிழர்கள் திரளாக கூடினார்கள். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்பொழுதும் பாதுக்காக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தைவான் வாழ் தமிழர்கள் சார்பில் வைக்கப்பட்டது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!