அரசு நிகழ்ச்சியில் திடீர் மின்தடை.. 15 நிமிடம் பேசாமலேயே நின்ற எம்எல்ஏ..கிருஷ்ணகிரி பரபரப்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இரு அமைச்சர்கள் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எம்எல்ஏ பிரகாஷ் பேசியபோது ஏற்பட்ட மின்தடை 15 நிமிடங்கள் நீடித்ததால் செய்வதறியாமல் திகைத்து நின்றார்
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பல்வேறு இடங்களில் பட்டுவளர்ச்சித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்..
ஒசூர் மாநகராட்சி ராம் நகர் பகுதியிலுள்ள பட்டுவளர்ச்சி அலுவலகத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 689 பட்டு விவசாயிகளுக்கு 2.15கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அரசு சார்பில் நிகழ்ச்சி
சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், கைத்தறி அமைச்சர் காந்தி ஆகிய இரண்டு அமைச்சர்கள் பங்கேற்றனர். இதேபோல் தளி,ஒசூர்,பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூர் எம்எல்ஏவுமான Y.பிரகாஷ் அவர்கள் பேச தொடங்கிய ஒரு நிமிடத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

திடீர் மின்தடை
மின்தடை உடனடியாக சீரமைக்கப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில் கிட்டதட்ட 15 நிமிடங்கள் வரை மின்தடை சரிசெய்ய தேவைப்பட்டதால் பேசமுடியாமலும், மைக் முன்பு நின்று செய்வதறியாமல் கூட்டத்தை பார்த்து திகைத்தார். பொறுமையை இழந்த பிரகாஷ் அவர்கள் மின் தடை குறித்து அவரே விசாரிக்க மேடையிலிருந்து இறங்கி சென்றபோது, மின்தடை சரிசெய்யப்பட்டது.

நிகழ்ச்சி தாமதம்
பின்னர் பேச வந்ததை சுறுக்கிக்கொண்டு பேச்சை நிறைவு செய்தார் பிரகாஷ். நிகழ்ச்சி முடிந்த பின்னர் மின்வாரிய அதிகாரிகளை அழைத்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்கள் மின் தடையால் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுரை கூறினார். இதனால் நிகழ்ச்சி சிறிது நேரம் தாமதமானது.

அமைச்சர் த.மோ.அன்பரசன்
நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் த.மோ. அன்பரசன், தமிழகத்தில் பட்டு வளர்ப்பை அதிகப்படுத்தவும், தேவையை பூர்த்தி செய்ய 3700 ஏக்கருக்கு வழங்கப்பட்ட மானியம், 5000 ஏக்கர் நிலமாக அதிகரித்தும் பட்டுப்புழு வளர்க்க செட்டு அமைக்கப்பட 87 ஆயிரம் ரூபாய் நிதியை தற்போதைய தமிழக அரசு 1,20,000 ரூபாய் வரை அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications