மோசமாகும் நிலைமை.. டிராபிக் லைட்டே உருகிய கொடூரம்! பிரிட்டனை வாட்டி வதைக்கும் வெப்ப அலை!
லண்டன்: பிரிட்டனில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இத்துடன் வெப்ப அலையும் மக்களை வாட்டி எடுக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டன் நாடு குளிர் பிரதேசமாகும். நிலநடுக்கோட்டிற்கு மேலே உள்ள இந்த நாடு ஆண்டில் பெரும்பாலான நாட்கள் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது இந்த பகுதியில் சுமார் 40 டிகிரிக்கு மேல் வெப்பம் வாட்டியெடுக்க தொடங்கியுள்ளது.
இந்த வெப்பம் நமக்கு இயல்பானதாகவே தோன்றலாம். ஏனெனில் கோடைக்காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதை விட அதிக அளவு வெப்பம் பதிவாகும்.

பிரிட்டன்
ஆனால் பிரிட்டனுக்கு இது புதுசு. இந்த அதிக வெப்பம் அனல் காற்றை உருவாக்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மட்டுமல்லாது ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் பாதையில் உள்ள லெவல் கிராசிங்கில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பம் காரணமாக தண்டவாளங்கள் இளகியுள்ளன. லெவல் கிராசிங்கில் உள்ள சிக்னல் மேல் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் லேசான பிளாஸ்டிக் உருகியுள்ளது. அப்படியெனில் வெப்பம் எந்த அளவு இருக்கும் என யோசித்து பாருங்கள்.

வெப்பம்
இந்த வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏராளமான வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதில் ஒரு குடிசை வீடு தீப்பிடித்து எரிகிறது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள காடு தீப்பிடித்து எரிவதும் தெளிவாக தெரிகிறது. இதற்கிடையில் திரையரங்கு ஒன்றில் திடீரென தீப்பிடித்துள்ளது. ஆனால் அவசரக்கால அலாரம் வேலைசெய்யவில்லை. இதனால் தீயை அணைக்கும் பணியின்போது பொதுமக்களும் தண்ணீரில் நனைந்தனர்.

வெப்பமடைதல்
புவி வெப்பமடைதல்தான் இவ்வாறான நிகழ்வுகளுக்கு காரணம் என நடிகர் ஜார்ஜ் ஃபோராக்ரேஸ் ட்விட்டரில் தியேட்டரில் ஏற்பட்ட தீவிபத்தை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். திரையரங்குகள் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் அந்நாட்டு தீயணைப்பு வீரர்களை தொடர்ந்து சோர்வுக்கு உள்ளாக்கியுள்ளது. செவ்வாய் கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.

வெப்பநிலை
இதனால் மக்கள் அங்கு கடுமையாக அவதிப்பட்டுள்ளனர். அதேபோல வெப்பநிலையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பெற்றோர்களுக்கும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக பயணிகள் ரயில் நிலையங்கள் நீண்ட நேரமாக காத்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications