ரேஷன் பொருள் ஒருபக்கம்.. தடுப்பூசி மறுபக்கம்.. பிரதமர் மோடியின் சாதனையை லிஸ்ட் போட்ட உ.பி. யோகி
லக்னோ: நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஏராளமான ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹரிஹர்பூரில் புதியதாக தொடங்கப்பட உள்ள இசைக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்திருந்தார். இந்த விழாவில் சிறப்புரையாற்றிய யோகி ஆதித்யநாத், "நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஏராளமான ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக" கூறியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசியதாவது,

"நாடு ஒரு காலத்தில் சாதி மற்றும் மதம் எனும் அடையாள அரசியலில் சிக்கியிருந்தது. ஆனால் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் இந்த நிலை மாற தொடங்கியது. உதாரணத்திற்கு உத்தரப் பிரதேசத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு உள்ள அசம்கர் பகுதிக்கு அடையாள நெருக்கடி இருந்தது. ஆனால், கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அசம்கரிலிருந்து பூர்வாஞ்சால் வரை எக்ஸ்பிரஸ் சாலைக்கு அடிக்கல் நாட்டினார். அவரைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்கு புதிய பல்கலைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதன் காரணமாக இந்த பகுதி பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இப்பகுதியில் உள்ள கலைஞர்கள் வெளி மாநிலத்திற்கு எளிதாக பயணிக்கின்றனர். இவர்களின் திறமை வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இப்படி நாட்டின் ஒவ்வொரு இடத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஒட்டுமொத்த நாட்டையையும் வளர்ச்சியடைய செய்துள்ளனர். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில்தான் சுதந்திரம் பெற்றது.

ஆனால் அங்குள்ள 22 கோடி மக்களுக்கு ஒரு வேளை ரொட்டி கூட கொடுக்க முடியாமல் அந்நாட்டு அரசு தவிக்கிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா காலத்தில் ஏராளமான மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் ரேஷன் மூலம் கொடுக்கப்பட்டது. இதுதான் வலுவான தலைமை. இதற்கு இன்னொரு உதாரணம் காஷ்மீரின் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட சம்பவம். இப்போது ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் நீரோட்டத்துடன் முழுமையாக இணைந்திருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றுகிறது.
ஆக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் நமது நாட்டை முன்னேற்ற முடியாது. எனவே 2024ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடிதான் வெற்றி பெறுவார். அவரது ஆட்சியின் கீழ் உத்தரப் பிரதேசம் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications