ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி குடும்பம் பாஜக தலைவருடன் சந்திப்பு: நவாப் மாலிக்
மும்பை: ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை போதை மருந்து வழக்கில் கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே குடும்ப உறுப்பினர்கள் பாஜக தலைவர் ஒருவரை சந்தித்து பேசியதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் சீனியர் தலைவருமான நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அக்டோபர் 2ம் தேதி கைது செய்யப்பட்டார். மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்கநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் ஆர்யன் கானை கைது செய்தனர்.

வலுவான ஆதாரங்கள்
இந்த நிலையில்தான், சமீர் வான்கடே மீது மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. சமீர் மீதான புகார்கள் குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் டெல்லியிலிருந்து மும்பை வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமை கண்காணிப்பு கமிஷனர் கியானேஷ்வர் சிங் அளித்த பேட்டியில், சமீர் வான்கடேவுக்கு எதிராக வலுவான ஆதாரம் கிடைக்கும் வரை ஆர்யன் வழக்கை அவரே கையாளுவார். ஆர்யன் வழக்கில் சாட்சியாகவும் இவர் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

பொய்கள்
ஆனால், ஆர்யன் கானுக்கு ஆதரவு அளிக்கும் மகாராஷ்டிராவை ஆளும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி அரசு, தன்னை குறி வைத்து பொய்களை பரப்பி வருவதாக சமீர் வான்கடே தெரிவிக்கிறார். தன்னை கைது செய்ய அனுமதிக்க கூடாது என்று, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

திரையுலகம்
இந்த நிலையில், நவாப் மாலிக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்திய விசாரணை ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்தி, இந்தி திரையுலகத்தின் பெயரை கெடுக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது. மும்பையிலிருந்து திரையுலகம் இயங்குவது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
Recommended Video

பாஜக தலைவருடன் சந்திப்பு
வான்கடே குடும்ப உறுப்பினர்களை சமீபத்தில் பாஜக தலைவர் ஒருவர் சந்தித்து பேசியுள்ளார். சமீர் வான்கடே மனைவி, மகாராஷ்டிரா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டு ஆதாயம் தேட முயன்றார். ஆனால், மாலையே மொத்த குடும்பமும், பாஜக தலைவர் கிரித் சோமையாவை சந்தித்துள்ளார். பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது.

பாஜக தலைவர்கள் பதற்றம்
போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி குறித்த விஷயங்களை நான் வெளியிடும்போது, பாஜக தலைவர்கள் ஏன் பதறுகிறார்கள். வான்கடே தந்தை மற்றும் சகோதரி, கடந்த வியாழக்கிழமை மாலை சோமையாவை சந்தித்துள்ளார். அந்த படத்தை சோமையா ட்விட்டரில் வெளியிட்டு, நவாப் மாலிக் அவர்களை தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

போலி ஆவணங்கள்
கப்பலில் போதை மருந்துடன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது போலியான நாடகம். சமீர் வான்கடே தனது ஆவணங்களை திருத்தி அரசு வேலை பெற்றவர். தனது மதம் குறித்து பொய் தகவல் கூறியுள்ளார். அவர் முஸ்லீம், ஆனால் இந்து எனக் கூறி இட ஒதுக்கீட்டில் பணி பெற்றுள்ளார்.

யோகி மீது நவாப் மாலிக் குற்றச்சாட்டு
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தி திரையுலகை தங்கள் மாநிலத்திற்கு இடம்பெயற வைக்க முயற்சிகள் செய்தார். ஆனால், அது நடக்காது. என்றுமே இது பாலிவுட்தான். உபி உட் ஆகாது. திரையுலகம் பல லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. உ.பி.க்கு வரவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் தொல்லை செய்யக் கூடாது. இவ்வாறு அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications