உதகை அரசு ஊழியர்கள் குடியிருப்பில் சட்டவிரோத குடியேற்றம்.. ஆட்சியருக்கு பறந்த அதிரடி "ஆர்டர்"
நீலகிரி: உதகை நகராட்சி ஊழியர்களுக்கான அரசு குடியிருப்பில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணிக்கம்மாள் உள்ளிட்ட 7 பேர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "துப்பரவு பணியாளர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு அரசு பணியாளர் குடியிருப்பு வீடு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை உதகை நகராட்சி நிர்வாகத்திடம் அளித்தோம். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. அந்த குடியிருப்புகளில் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களும், நகராட்சி பணியில் இல்லாத வெளியாட்களும் வாடகை கொடுத்து வசித்து வருகின்றனர். அவர்களை வெளியேற்றி எங்களுக்கு குடியிருப்பை ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை அரசு வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், உதகையைச் சுற்றி நகராட்சி பணியாளர்களுக்காக 376 அரசு குடியிருப்புகள் இருப்பதாகவும், இதில் 106 குடியிருப்புகளில் தற்போதை பணியாளர்களாக இருப்பவர்கள் குடியிருந்து வருவதாகவும், மீதமுள்ள 270 குடியிருப்புகளில் மற்றவர்கள் சட்டவிரோதமாக குடியிருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, உதகை நகராட்சிக்கு உட்பட்ட அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றி, 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.