''Shift time Over'' பாதி வழியில் கிளம்பிச் சென்ற பாகிஸ்தான் பைலட்! கூச்சல்போட்டு கத்திய பயணிகள்!
ரியாத்: பாகிஸ்தான் விமானி ஒருவர், தன்னுடைய வேலை நேரம் முடிவடைந்துவிட்டது என்று, பாகிஸ்தான் வரை வரவேண்டிய விமானத்தை மற்றொரு நாட்டிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
விமானி இப்படி புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விமானி பாதியிலேயே சென்றதால் பயணிகள் கூச்சல் போட்டு கத்த ஆரம்பித்துள்ள பகீர் சம்பவமும் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தேசிய விமான நிறுவனம் சொந்தமாக விமானங்களை இயக்கி வருகிறது.இந்நிலையில், பாகிஸ்தான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் (PK-9754 ) சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து இஸ்லாமாபாத் திரும்ப வேண்டும். சில தொழில்நுட்ப கோளாறால் விமானம் தாமதமாகவே புறப்பட்டது.
நீங்கதான் உ.பி. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரா? நமட்டு சிரிப்புடன் பிரியங்கா காந்தி சொன்ன அடடே பதில்!

வானிலை
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. ரியாத்தில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத் நகரை அடைவதற்குள், மோசமான வானிலை என்று அவசர அவசரமாக சவுதி அரேபியாவின் தம்மம் நகரவிமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. வானிலை மோசமாக இருந்ததால், கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் தம்மம் விமான நிலையத்திலேயே பாகிஸ்தான் விமானம் நின்றிருந்தது.

விமானி
பின்னர் வானிலை சரியானதும், ஆறு மணி நேரத்துக்குப் பிறகு இஸ்லாமாபாத்துக்கு விமானம் புறப்படும் என நினைத்த பயணிகளுக்கு விமானி அதிர்ச்சியளித்தார். தனது வேலை நேரம் (Flying Hours) நிறைவடைந்துவிட்டதாக கூறி, மேற்கொண்டு விமானத்தை தன்னால் இயக்க முடியாது என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பயணிகள் அதிர்ச்சி
வானிலை காரணமாக ஏற்கனவே பல மணி நேரங்கள் விமானம் தாமதமாகி இருந்தது. தற்போது விமானியும் விமானத்தை இயக்காமல் அங்கிருந்து சென்றது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பொறுமையிழந்த பயணிகள் விமானத்தை இயக்கச் சொல்லி கூச்சல் போட்டனர். விமான நிலைய அதிகாரிகள் வந்து சமாதானத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் விமானத்தை விட்டு இறங்க முடியாது என போராட்டத்தில் குதித்தனர் பயணிகள்.

மாற்று விமானி
விமானத்தில் இருந்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அங்கிருந்த அனைத்து பயணிகளும் தற்காலிகமாக ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் மாற்று விமானி வரும்வரை ஹோட்டலிலேயே தங்கவைக்கப்பட்டனர். மாற்றுவிமானி வந்ததும் விமானம் இயக்கப்பட்டு இஸ்லாமாபாத் வந்தடைந்தது.

விதிமுறை
சர்வதேச விமான இயக்க விதிகளின்படி குறிப்பிட்ட மணி நேரங்கள் ஒரு விமானத்தை இயக்கியபிறகு விமானி கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும். விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கான இந்த விதி கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதைக் காரணமாக காட்டி விமானி பாதியிலேயே சென்றிருக்கிறார்.