இரவு பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர்.. காலை நடைபயிற்சி சென்றபோது திடீர் மரணம்..சேலத்தில் அதிர்ச்சி
சேலம்: சேலத்தில் அதிகாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் நான்கு ரோடு நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் வினித்குமார் (வயது 19).
வினித் குமார் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

மயங்கி விழுந்த வினித் குமார்
வினித்குமார் தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் காந்தி ஸ்டேடியத்தில் தினமும் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை நண்பர்களுடன் காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சியில் வினித்குமார் ஈடுபட்டுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து நடைபயணம் சென்று கொண்டிருந்தார். அப்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்த வினித் குமார் திடீரென மயங்கி கிழே சுருண்டு விழுந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
இதை பார்த்த சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே என்ன செய்வது என்று தெரியாமல் அவரை எழுப்ப முயன்றனர். அந்த நேரத்தில் காந்தி ஸ்டேடியத்தில் மருத்துவர் ஒருவரும் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவர் வினித்குமார் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து வினித்குமாரை பரிசோதித்து பார்த்தார். எனினும் வினித்குமார் கண் விழிக்கவில்லை. இதன் பின்னர் வினித்குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

கதறி அழுத நண்பர்கள்
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வினித்குமார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வினித்குமாரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். இதில் வினித்குமார் இறந்தது தெரியவந்தது. இதனால் அவரது நண்பர்கள் கதறி அழுதனர். நடைபயிற்சியின் போது வினித்குமார் மயங்கி விழுந்து இறந்தது அவரது நண்பர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்தாரா?
வினித்குமார் மாரடைப்பால் உயிரிழந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அஸ்தம்பட்டி போலீசார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முந்தைய நாள் இரவு வினித் குமார் பரோட்டா சாப்பிட்டு தூங்கியுள்ளார். எனினும், இதற்கும் உயிரிழப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இதேபோல் அதிகப்படியான உடற்பயிற்சி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதா? என்பது தொடர்பாகவும் போலீஸ் தரப்பில் விசாரிப்பதாக தெரிகிறது.

அச்சுறுத்தும் இளம் வயது மாரடைப்பு
சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை பயன்பாடு மற்றும் குடிப்பழக்கம் மாதிரியானவை இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. இளைம் தலைமுறையினரின் வாழ்க்கை முறையும் இருதய பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதய நோய் பாதிப்புகளால் ஒவ்வோர் ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் உலக அளவில் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. இந்த உயிரிழப்புகளில் ஐந்தில் ஒரு பங்கு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications