For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிசயம் நிகழும்... நிகழ்த்திக் காட்டுவார்கள் மக்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

- பேராசிரியர் சுப.வீ.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கட்சித் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். அப்படி வாழ்த்துச் சொல்வதுதான் நாகரிகம் என்றும் சொல்லப்படுகிறது. நான் கொஞ்சம் நாகரிகம் குறைந்தவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். என்னால் வாழ்த்த இயலவில்லை என்பதோடு இதனைக் கண்டிக்கின்றவனாகவும் நான் இருக்கின்றேன்.

நான் மிகவும் மதிக்கின்ற தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் கருத்திலிருந்தும் மாறுபட்டவனாகவே நான் இருக்கின்றேன்.

A political miracle will happen - Subavee

எல்லாம் சட்டப்ப்படிதானே நடந்திருக்கிறது என்கின்றனர். ஆம், அதில் எந்தக் குறையும் இல்லை. ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட மக்களைச் சந்தித்து வாக்குகளை இன்றுவரை பெறாத ஒருவர், நேரடியாக நாட்டின் முதலமைச்சராக ஆகி விடுவதற்குச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் இது அறம் சார்ந்த அரசியல்தானா என்பது மட்டுமே என் கேள்வி. மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது உறுத்த வேண்டாமா என்றுதான் உரத்துக் கேட்கிறேன்.

உடனே, 1967இல் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத அண்ணா, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லையா என்று கேட்கின்றனர். அண்ணா இறந்து 48 ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு இப்படி ஓர் அவமானம் நிகழக் கூடாது. யாரை யாரோடு ஒப்பிடுவது? அண்ணா கண்ட களங்கள் எத்தனை,கலந்துகொண்ட கூட்டங்கள் எத்தனை, சென்ற சிறைகள் எத்தனை? இந்த அம்மையார் ஒரு பொது நிகழ்வில் கலந்திருக்கிறாரா? கட்சி நடவடிக்கை ஏதேனும் ஒன்றில் பங்கெடுத்துள்ளாரா? கட்சிக்காகச் சிறை சென்றுள்ளாரா? ஒருமுறையாவது, ஒரு சிறிய தேர்தலிலாவது மக்களைச் சந்தித்து வாக்குகளைக் கோரியிருக்கிறாரா?

ஒரே ஒரு முறையேனும் தேர்தலைச் சந்தித்து மக்களிடம் வாக்குகளைப் பெற்று, அதன்பின் இந்தப் பதவிக்கு ஆசைப்பட்டிருக்கலாகாதா? அந்த நாகரிகத்தைப் பற்றி எதுவும் பேசாதவர்கள், நம் நாகரிகத்தைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

அவர் மீதான வழக்கு என்ன ஆகும், மறுபடியும் பன்னீர்செல்வம்தானா என்று சிலர் எழுதுகின்றனர். அது குறித்தெல்லாம் நமக்கு எந்தக் கவலையும் இல்லை. அது அவருடைய சிக்கல். எதிரியைக் களத்தில் சந்திப்பதே வீரம். அதற்கு அணியமாவதே அரசியல்.

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ள நம் நாட்டில், சசிகலா போட்டியிட இருக்கும் இந்தத் தேர்தலில் மட்டும் என்ன அதிசயம் நேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கின்றனர்.

குறித்துக் கொள்ளுங்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அந்த அதிசயம் உறுதியாய் நிகழும். நிகழ்த்திக் காட்டுவார்கள் நம் மக்கள்!

English summary
Prof Subaveen's comments on CM elected Sasikala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X