For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அதிமுக என்று அழைக்கலாம்- கருணாநிதி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சை வைத்து பார்க்கும்போது, அ.தி.மு.க.வும் அங்கம் வகிக்கும் இன்றைய மத்திய அரசு என்று அழைக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையின் தொகுப்பு:

இலங்கையிலே சிறைப்பட்டிருந்த மீனவர்களையெல்லாம் விடுவிக்க அதிபர் ராஜபக்ஷே உத்தரவு பிறப்பித்த போதிலும், இலங்கை கடற்தொழில் அமைச்சர், தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசு இப்படியெல்லாம் மாற்றி மாற்றிப் பேசி இந்திய அரசுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறது.

ஏதோ தமிழக மீனவர்கள்பால் அக்கறை உள்ளவரைப் போலவும் இந்திய சுதந்திரத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவரைப் போலவும் காட்டிக் கொள்ள, இலங்கை அதிபர் மீனவர்களை விடுவிப்பதாக அறிவிக்கிறார். ஆனால் அந்த நாட்டின் கடற் தொழில் அமைச்சர் திட்டவட்டமாக, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்று அறிவித்திருக்கிறார். அந்த விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 24வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மத்திய அரசின் சார்பில், அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இந்தப் பிரச்சினை பற்றி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழக அரசு?

தூர்வாரப்படவில்லை

தூர்வாரப்படவில்லை

மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும், கடைமடைக்கு இன்னும் நீர் செல்லவில்லை. எனவேதான், நான் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே, வாய்க்கால்கள் தூர் வாரப்பட வேண்டுமென்று தெரிவித்தேன். பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் தூர் வாரும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லையாம். பெயருக்கு சில இடங்களில் தூர் வாரி விட்டு, உள் பகுதியில் தூர் வாரும் பணிகள் நடக்கவில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். இதனால்தான் மேட்டூர் அணை திறக்கப்பட்ட போதும், கடைமடைக்கு நீர் செல்ல வில்லை என்று கூறுகிறார்கள். மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி சம்பா ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் டெல்டா விவசாயிகளின் நிலை என்னவாகுமோ?

இல்லத்தரசிகள் தற்கொலை

இல்லத்தரசிகள் தற்கொலை

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவேட்டின் மூலம் இல்லத் தரசிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் தமிழக மும் இருப்பதாகத் தெரிவிக்கிறது. தென்னிந்தியா வில் தற்கொலைகள் அதிகம் நடைபெறுகின்ற மாநிலங்களின் பட்டியலிலே தமிழகம்தான் முதல் இடத்திலே இருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2013ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, தமிழகத்தில் மொத்த தற்கொலைகள் 3,545. ஆந்திராவில் இந்த எண்ணிக்கை 2,619 என்றும், கர்நாடகாவில் 2,288 என்றும், கேரளாவில் 1,437 என்றும் புள்ளி விவரம் கூறுகிறது. தற்கொலை செய்து கொண்ட இல்லத்தரசிகள் என்று பார்த்தால், கேரளாவில் 1,045 பேர்; கர்நாடகாவில் 1,674 பேர்; ஆந்திராவில் 1,912 பேர்; தமிழ்நாட்டில் 2,596 பேர். முல்லைப் பெரியாறு பாராட்டு விழாவிற்கு அடுத்து, தமிழகம் தற்கொலையில் தன்னிகரற்று (!) விளங்குவதற்காக ஒரு பாராட்டு விழாவினை வைத்துக் கொள்ளலாம்!

தம்பிதுரை பேச்சு

தம்பிதுரை பேச்சு

நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவி பெற்றிருப்பது, ஆட்சி யில் பங்கு வகிப்பது போன்றதே என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் பேசியிருப்பதாக நாளேட்டில் செய்தி வந்துள்ளது. கடந்த காலத்தில் மத்திய அரசு ஏதாவது தவறு செய்தால், உடனே ஜெயலலிதா, "தி.மு.கழகமும் அங்கம் வகிக்கும் மத்திய அரசு" என்றுதான் கூறுவார். அதுபோல் "அ.தி.மு.க.வும் அங்கம் வகிக்கும் இன்றைய மத்திய அரசு" என்று நாமும் இனி கூறலாம் அல்லவா?

சசிகலா உறவினர் பெயரில் ஏமாற்று

சசிகலா உறவினர் பெயரில் ஏமாற்று

சசிகலா உறவினர் என்று கூறிக் கொண்டு ஒருவர்; கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டோர் மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதாகச் செய்தி வந்திருக்கிறது. இப்படிப்பட்ட மோசடிகள் இப்போதுதானா நடக்கின்றன? சசிகலாவின் உறவினர் என்று கூறி, அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் மருத்துவமனைகளில் ஒப்பந்த ஊழியர்களாகப் பணிபுரிந்தவர்களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகை வாசகர் ஒருவர் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர், மோசடி செய்த நபரின் வீட்டின் முன் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

விதவிதமான ஏமாற்று

விதவிதமான ஏமாற்று

செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும்போது, ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றும் 475 பேரிடம் அவர்களை பணி நிரந்தரம் செய்து தருவதாகக் கூறி, தலா ஒவ்வொருவரிடமும் 60 ஆயிரம் முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை வசூல் செய்ததாகவும், அந்தப் பணத்தை அ.தி.மு.க. கட்சி நிதியாக அளித்துள்ளதாகவும், கோப்பு முதல்வரிடம் கையெழுத்துக்காகச் சென்றிருப்ப தாகவும் கூறி ஏமாற்றியதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கூட்டுறவு வங்கி தேர்வு

கூட்டுறவு வங்கி தேர்வு

கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கப் பணிகளுக்குத் தேர்வு பெற்ற 7,200 பேர் பணி நியமன ஆணைக்காக இரண்டாண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.
கூட்டுறவுத் துறை பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 5,389 இளநிலை உதவியாளர் பணி இடங் களுக்கு 9.12.2012 அன்று தேர்வு நடைபெற்றது. 2 இலட்சத்து 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு 28-12-2012 அன்று சென்னையில் நேர்முகத் தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றன.

தேர்வில் முறைகேடு

தேர்வில் முறைகேடு

பின்னர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் 2013 ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடைபெற்றது. இதற் கிடையே, தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக் கப்பட்டு, உயர் நீதிமன்றம் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது.

தீர்ப்பு வந்தாச்சு, வேலை எங்கே?

தீர்ப்பு வந்தாச்சு, வேலை எங்கே?

தேர்ச்சி பெற்ற 7,200 பேர் சார்பில் உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ் கே. அக்னி ஹோத்ரி, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து, நடத்தப்பட்ட தேர்வுக்கான விடைகளை கூட்டுறவுத் துறை பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட வேண்டுமென்றும், கட் ஆஃப் மதிப்பெண்களை வெளியிட வேண்டு மென்றும் ஜூலை 15ஆம் தேதி தீர்ப்புக் கூறினர். இந்தத் தீர்ப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகி யும் இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை.

மைத்ரேயனும், கொலு பொம்மையும்

மைத்ரேயனும், கொலு பொம்மையும்

நவராத்திரி நேரத்தில் கொலு பொம்மைகளில் சிலவற்றை முதல் நாள் மேல் வரிசையில் வைத்திருப்பார்கள்! அடுத்த நாள் சென்று பார்த்தால், மேல் வரிசையிலே வைக்கப்பட் டிருந்த சில கொலு பொம்மைகள் கீழ்த் தட்டுக்குப் போய் விடும். அதற்கடுத்த நாள் வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டு விடும். இந்தக் கதை தான் மைத்ரேயன் விஷயத்தில் நடக்கிறது! சில ஆண்டுகளுக்கு முன்பு பேரவைத் தலைவராக இருந்தவர் இன்று எங்கே? ஏதோ ஒரு தவறுக்காக அவர் நீக்கப்பட்டிருந்தால், தற்போது அவருக்கே வேறு ஒரு வாரியத் தலைவர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறதே, தவறு களையப் பட்டு விட்டதா? அந்த வரிசையில் மைத்ரேயன் என்ன செய்திருப்பாரோ?

நீதிபதிகள் நியமன சட்டம்

நீதிபதிகள் நியமன சட்டம்

மைத்ரேயனை நீக்கியது குறித்து "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு, நீதிபதிகள் நியமனச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, மக்களவையிலும், மாநிலங் களவையிலும் வெவ்வேறு விதமான முடிவுகள் எடுக்கப்பட்டதுதான் காரணம் என்றும், முதல் நாள் ஆகஸ்ட் 13ந்தேதி அந்தச் சட்டம் மக்களவையிலே விவாதிக்கப்பட்ட போது, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் ஈடுபடாமல் புறக் கணித்து விட்டார்கள் என்றும், ஆனால் அதற் கடுத்த நாள், அதே சட்டம் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்ட போது, மைத்ரேயன் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அந்தச் சட்டத்தை ஆதரித்ததாகவும் அதன் காரணமாகத்தான் மைத்ரேயன் மாற்றப்பட்டதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறியதாகவும் எழுதியுள்ளது.

கடைசி நேரத்தில் முடிவெடுத்த அதிமுக

கடைசி நேரத்தில் முடிவெடுத்த அதிமுக

அ.தி.மு.க.வைச் சேர்ந்த மற்றொரு தலைவர், "அந்தச் சட்டத்தை ஆதரிக்க வேண்டுமென்று பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்கள். ஆனால் முதல் நாள் இரவு வரை அந்த மசோதாவைப் புறக்கணிக்க வேண்டுமென்ற முடிவிலேதான் நாங்கள் இருந்தோம். ஆனால் அடுத்த நாள் காலையில் அந்தச் சட்டத்தை ஆதரிக்குமாறு எங்களுக்குக் கூறப்பட்டது"" என்று தெரிவித்ததாகவும் "டைம்ஸ் ஆப் இந்தியா" எழுதி யுள்ளது. எப்படியோ ஒருவரை ஒரு பதவியிலிருந்து நீக்குவதும், பதவி கொடுப்பதும் என்பது அந்தக் கட்சியின் உள்கட்சி விவகாரம். அதிலே நாம் தலையிட விரும்பவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
According to Dy Speaker Thambidurai speach, AIADMK became part of the NDA government, says DMK chief Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X