For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையின் அரசியாக முடி சூட்டப்பட்டார் மீனாட்சி.. நாளை திருக்கல்யாணம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 8ம் நாளான நேற்று இரவு 7.30 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சன்னதி அருகே உள்ள ஆறுகால் மண்டபத்தில் நடைபெற்ற பட்டாபிஷேக வைபவத்தின் போது மீனாட்சி அம்மனுக்கு வைரம், முத்து, பவளம் ஆகிய கற்களால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது.

வழக்கமான மாலைகளுக்கு பதிலாக நேற்று பாண்டிய மன்னனுக்கு உரிய வேப்பம்பூ மாலையை அணிந்து, பட்டாபிஷேகத்தை மீனாட்சி அம்மன் பெற்றுக் கொண்டார். நவரத்தின கீரிடம், நவரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட செங்கோலுடன் பட்டத்து ராணியாக வெள்ளி சிம்மாசனத்தில், மாசிவீதிகளில் அம்மன் வீதி உலா வந்தார்.

இன்று முதல் வரும் ஆவணி மாதம் வரை மதுரைக்கு அரசியாக இருந்து மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்வதாக ஐதீகம். 8வது நாளான நேற்று காலை மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் தங்கப்பல்லக்குளில் எழுந்தருளினர். பின்னர் கீழசித்திரை வீதி, தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி சாலை வழியாக மேலமாசிவீதியில் உள்ள கட்டுச்செட்டி மண்டகப் படியை வந்தடைந்தனர். மாலை அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலை சென்றடைந்தனர்.

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் மீனாட்சிசுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் மண்டகப்படிகளில் எழுந்தருளினர். அம்மன் பட்டாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 10.00 மணிக்கு கோயிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் பரிவாரங்களுடன் அம்மன் புறப்பட்டார்.

மீனாட்சிக்குப் பச்சைப் பட்டு

மீனாட்சிக்குப் பச்சைப் பட்டு

நேற்று இரவு 7.35 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேக யாக பூஜைகள் துவங்கின. கோயில் சார்பில் அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட தெய்வசிகாமணிக்கு மரியாதை செய்யப்பட்டது. அம்மன் பிரதிநிதியான தக்கார் கருமுத்து கண்ணனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. பச்சைப்பட்டு உடுத்தி மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.

மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்

மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்

பாண்டிய மன்னர்களின் வெற்றியை குறிக்கும் வேப்பம்பூ மாலை, அம்மனுக்கு சூட்டப்பட்டது. நவரத்தினக்கற்கள் பதித்த கீரிடத்திற்கு யாக தீர்த்தம்ஊற்றப்பட்டு அம்மனுக்கு சூட்டப்பட்டது.இரவு 7.40 மணிக்கு நவரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட செங்கோல், அம்மனுக்கு சாற்றப்பட்டது. தீபாராதனைகள் முடிந்து, அம்மன் பிரதிநிதி தக்கார் கருமுத்து கண்ணனிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

மதுரையின் மகாராணி

மதுரையின் மகாராணி

அம்மனுக்கு பட்டாபிஷேகம் முடிந்ததை தெரிவிக்கும் வகையில் சகல விருதுகளுடன், சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் செங்கோலுடன் தக்கார் வலம் வந்து மீண்டும் அம்மனிடம் ஒப்படைத்தார்.பட்டாபிஷேகம் முடிந்ததால் இன்று முதல் பட்டத்து மகா ராணியாக மீனாட்சி அம்மன்நான்கு மாதங்கள் ஆட்சி புரிவார்.

மீனாட்சி ஆட்சி

மீனாட்சி ஆட்சி

சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மதுரையை மீனாட்சி ஆட்சி புரிவதாக ஐதீகம், அதையொட்டி இந்த பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் நவரத்தின கீரிடம், நவரத்தின செங்கோலுடன் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி இரவு மாசி வீதிகளில் எழுந்தருளினார்.

மீனாட்சி திக் விஜயம்

மீனாட்சி திக் விஜயம்

9ம் தேதியான இன்று இரவு 7 மணிக்கு வடக்கு மாசிவீதி, கீழமாசிவீதி சந்திப்பில் உள்ள லாலா ரெங்கசத்திரம் மண்டபத்தில் மீனாட்சி அம்மன் திக்கு விஜயமும், சீர்வரிசை உலாவும் நடைபெறும். மீனாட்சி அம்மன், திக்குபாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடத்தப்படுகிறது. இதற்காக சுவாமி - அம்மன் ஆகியோர் மரவர்ண சப்பரவாகனத்திலும், இந்திர விமான வாகனத்திலும் பவனி வருகிறார்கள்.

மீனாட்சி திருக்கல்யாணம்

மீனாட்சி திருக்கல்யாணம்

10ம் நாளான நாளை காலை 9 மணிக்கு மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 8:30 மணி முதல் 8.54 மணிக்குள் நடக்கும் திருக்கல்யாணத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வடக்காடி வீதியில் இரண்டு, மேற்கு ஆடி வீதி,தெற்காடி வீதியில் தலா ஒன்று என 20 இடங்களில் அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

பக்தர்கள் அனுமதி

பக்தர்கள் அனுமதி

திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய தெற்கு கோபுரம் வழியாக முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். உபயதாரர் மற்றும் ரூ.500 நுழைவு கட்டணம் பெற்றவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும், ரூ.200 கட்டண தரிசனம் செய்ய வடக்கு கோபுரம் வழியாகவும் காலை 6.00 முதல் காலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படுவர். மொத்தம் 9500 பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

களை கட்டும் சித்திரை திருவிழா

களை கட்டும் சித்திரை திருவிழா

நாளை திருக்கல்யாணம் நடைபெறுவதை முன்னிட்டு மதுரையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், அழகர் எதிர்சேவை, வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் என்று வரிசையாக திருவிழாக்கள் வருவதால் மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டத்தொடங்கியுள்ளது.

English summary
The celestial wedding (Thirukkalyanam), a sacred event on tomorrow, as part of the 12-day annual 'Chithirai Brahmotsavam' of the temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X