For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேனர் கலாசாரத்தை வேரறுக்க வேண்டும்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவினர் பேனர் கலாச்சாரத்தைக் கைவிடவேண்டும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடம்பரங்கள், அலங்காரங்களைத் தவிர்த்து எளியமுறையில் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணை நிற்பதே நமக்குள்ள முக்கியப்பணி என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மக்களுக்கு மனதளவில் எரிச்சலூட்டும் செயல்களைத் தவிர்க்க வேண்டியது பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள கட்சியினரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

Avoid banners, Stalin tells DMK cadre

திமுக என்பது சுயமரியாதையுள்ள அரசியல் இயக்கம். இங்கே காலில் விழுந்து காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்கிற அடிமை மனோபாவம் இருக்கக்கூடாது என்பதால் காலில் விழும் கலாச்சாரத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதையும், அவரவர் பெற்றோர் உள்ளிட்ட மூத்தோர் மீதான அன்பின் காரணமாக கால்தொட்டு வணங்குவதைத் தவிர, அரசியல் லாபக் கண்ணோட்டத்தில் அந்தச் செயலை செய்யக்கூடாது என்பதையும், அதற்குப் பதிலாக திராவிட இயக்கம் கற்றுத்தந்த கம்பீரமான வணக்கத்தினைத் தெரிவித்து, வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தேன்.

என்னுடைய இந்த வேண்டுகோளை ஏற்று, தொண்டர்கள் பலரும் காலில் விழும் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டனர். ஒருசிலர் அன்பின் மிகுதி காரணமாகவும், தொடர்ந்து மேற்கொண்ட பழக்கத்தின் காரணமாகவும் என் காலில் விழ எத்தனித்தபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, இனி இப்படிச் செய்வதாக இருந்தால், என்னைச் சந்திக்க வரக்கூடாது என உரிமையுடன் கோபத்தை வெளிப்படுத்தினேன். இதன் காரணமாக, காலில் விழும் கலாச்சாரம் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது.

கட்சியின் செயல் தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும், என்றும் உங்களில் ஒருவனான இந்த எளியவனின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து, சுயமரியாதை உணர்வை வெளிப்படுத்தும் வகையில், காரிய நோக்கத்தில் காலில் விழும் அடிமைத்தனத்தை நிறுத்தி, வளையாத முதுகுடன் நிமிர்ந்து நின்று, நேருக்கு நேராகக் கரம் குவித்து, புன்னகையுடன் தெரிவித்த வணக்கத்தால் உள்ளம் மகிழ்ந்தேன். கலைஞரின் உடன்பிறப்புகள் கட்சித் தலைமைக்குப் பெருமை சேர்ப்பவர்கள் என்பதை உணர்ந்தேன்.

திராவிட இயக்கத்தின் தொடர் வெற்றிப் பயணத்திற்குத் துணைநிற்கும் கட்சியினரிடம் வெற்று ஆடம்பரத்தைத் தவிர்ப்பதற்கான மற்றொரு அன்பு கோரிக்கையையும் முன்வைத்தேன். பொது நிகழ்ச்சிகளிலும், நேரில் சந்திக்கும் போதும் பயன்தராத பொன்னாடைகளை அணிவிப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதில், அறிவு வளர்ச்சிக்குப்

பயன்படும் நல்ல புத்தகங்களைப் பரிசளிக்கும்படி, என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதினேன். அந்த கோரிக்கையை ஏற்று, என்னுடைய பிறந்தநாளான மார்ச் 1-ம் தேதி தொடங்கி, இன்றைய நாள் வரை பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், கட்சியினருடனான சந்திப்புகளிலும் பொன்னாடைக்குப் பதில் புத்தகங்களையே பலரும் வழங்கி வருகின்றனர்.

அன்புப் பரிசாகக் குவிந்த ஆயிரக்கணக்கானப் புத்தகங்களை தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கி, எதிர்காலத் தலைமுறையினர் பயன்பெறுகின்ற பணியினை திமுக சார்பில் மேற்கொண்டு வருகிறோம். இப்போதும் ஒரு சிலர் பழைய பழக்கத்தின் காரணமாக பொன்னாடைகளைப் போர்த்துகின்றனர்.

அவர்களிடமும், அடுத்தமுறை புத்தகங்களுடன் வரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். இதன் காரணமாக, திமுக நடத்துகின்ற நிகழ்வுகள் பலவற்றிலும் புத்தகங்களைப் பரிசளிப்பதும், அவை கழகத்தின் சார்பிலான படிப்பகங்களில் அறிவு வளர்ச்சிக்குத் துணைநிற்பதுடன், உள்ளூர் நூலகங்களை நாடி வருவோரின் அறிவுப்பசியைத் தணிக்கின்றன.

பயனற்ற ஆடம்பரமான செயல்பாடுகள் மக்களிடம் வெறுப்பை உண்டாக்கி, நம்மை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தி விடும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதில் முக்கியமாக நான் குறிப்பிடுவது, ஆடம்பரமும் அருவருப்பும் கலந்த பேனர் கலாச்சாரத்தைத்தான். வெற்று ஆடம்பரத்தைத் தவிர வேறெதுவும் இந்த பேனர் கலாச்சாரத்தில் இருப்பதில்லை. தேவையற்ற ஆடம்பரமான இத்தகைய செயல், பொதுமக்களிடம் கடும் வெறுப்பையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளன.

மக்களின் வெறுப்புக்கு கட்சியினர் இடம் கொடுக்கவோ, அவர்களின் வெறுப்புக்கு ஆளாகவோ கூடாது என்பதற்காக, ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், அடிக்கு அடி பேனர் வைக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். முழுமையாகத் தவிர்த்தால், திமுக நடத்தும் விழா பற்றிய விவரம் பொது மக்களுக்குத் தெரியாது என நினைத்தால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் சுட்டிக்காட்டும் வகையில் ஒருசில இடங்களில் மட்டும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பேனர்களை கவனத்துடன் வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அந்த பேனர்களில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் படங்கள் இடம்பெறவேண்டும் எனவும், என்னுடைய படங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். காலில் விழுவதை நிறுத்தவேண்டும் என்றபோதும், பொன்னாடைகளுக்குப் பதில் புத்தகங்கள் தரவேண்டும் என்ற போதும் அதன் உடனடி விளைவுகளைக் கண்டு பெருமிதம் கொள்ள முடிந்தது. ஆனால், ஆடம்பர பேனர்களைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பல மாதங்களான நிலையில் அதனை அலட்சியப்படுத்துவது போல அண்மைக்காலமாக சில நிகழ்ச்சிகளிலும் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியிருப்பது வேதனையளிக்கிறது.

அதிக அளவில் பேனர் வைப்பதும், அதிலும் தங்களுக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் வகையில் கட்சி நிர்வாகிகள் பேனர் கலாச்சாரத்தை வளர்ப்பதும், தலைமையின் முடிவுக்கு எதிரானதும், மக்கள் மனதில் வெறுப்பை வளர்க்கின்ற செயலுமாகும் என்பதை உணர்த்த விரும்புகிறேன். உங்களில் ஒருவன் என்ற முறையில், இந்த பேனர் கலாச்சாரத்தைக் கைவிடவேண்டும் என மீண்டும் ஒருமுறை அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த வேண்டுகோள் பயனளிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இனியும் கட்சியினர் யாரேனும் பேனர் கலாச்சாரத்தைக் கடைப்பிடித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். பேனர் கலாச்சாரத்தை வேரறுக்க உறுதியெடுப்போம். மக்களுக்காக நாம் மேற்கொள்கின்ற பணிகளும் அதன் மூலம் கிடைக்கின்ற ஆதரவும்தான் நிலையானது. ஆடம்பர விளம்பரங்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். கவர்ச்சி மாய வலையில் விழாமல், கடமைகளை நிறைவேற்றி மக்களின் மனங்களை வெல்வோம். இவ்வாறு ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK Working President MK Stalin on saturday requested his party cadre to Avoid banners
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X