For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'இயக்குநர் சிகரம்' கே.பாலச்சந்தர் உடல் தகனம்... ரஜினி உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: உடல்நலக் குறைவால் காலமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இறுதிச் சடங்குகள் பெசண்ட் நகர் மின்மயானத்தில் இன்று மாலை நடைபெற்றது. குடும்ப வழக்கப்படி சில சடங்குகளுக்குப் பின், அவரது இளைய மகன் பிரசன்னா பாலசந்தர் சிதைக்கு தீயூட்டினார்.

மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த இயக்குநர் பாலசந்தர் நேற்று இரவு காலமானார். அன்னாருக்கு வயது 84.

Balachander's body taken to crematory

அவரது உடல் இன்று காலை முதல் மக்கள் பார்வைக்காக மைலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்தது. அவரால் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட மற்றும் அவரது படங்களில் நடித்த கலைஞர்கள் பலர் நேரில் வந்து பாலசந்தருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திரை உலகைத் தாண்டி திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் பாலசந்தருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் அவரது உடலைக் கண்டு சென்றனர்.

முன்னதாக பாலசந்தரின் உடல் நாளை இறுதிச் சடங்கு செய்யப் படுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. பின்னர் அது இன்று மதியமே நடைபெறும் என மாற்றப் பட்டது.

Balachander's body taken to crematory

அதன்படி, மதியம் இரண்டு மணி அளவில் அன்னாரது உடலுக்கு அவரது குடும்ப மரபுப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. பின்னர், மலர்களால் அலங்கரிக்கப் பட்ட ரதம் போன்ற ஊர்தியில் பாலசந்தரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.

சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்த இறுதி ஊர்வலம் 5.10 மணி அளவில் பெசண்ட் நகர் மின்மயானம் வந்தடைந்தது.

இறுதி ஊர்வலம் நடந்த சாலையின் இருமருங்கிலும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலசந்தர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், விஜயகுமார், விவேக், அமீர், பார்த்திபன், இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.கே.செல்வமணி, சேரன், பாலா, சமுத்திரக்கனி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பாலசந்தர் உடல் வைக்கப் பட்டிருந்த பெட்டி அருகிலேயே சோகமான முகத்துடன் அமர்ந்திருந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். நிற்கக் கூட இடமில்லாத அந்த வாகனத்தில் ஓரத்தில் தொத்தியபடி பயணம் செய்தார் நடிகை சுஹாசினி. இவர்கள் தவிர சேரம் உள்ளிட்ட சிலர் இறுதி ஊர்வல வாகனத்தை நடந்தே பின் தொடர்ந்து வந்தனர்.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஜினி, பாரதிராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், திருச்சி சிவா எம்பி, நடிகைகள் ரேகா, கல்கி ஸ்ருதி, சுஹாசினி உள்ளிட்டோர் நேரடியாகவே பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு வந்தடைந்தனர்.

கே.பாலசந்தரின் உடலை பாடையில் வைத்து பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் சுமந்து, தீமூட்டலுக்காக உள்ளே எடுத்துச் சென்றனர்.

பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். சிலர் மரங்களில் அமர்ந்தபடியும், கட்டிடங்களின் மேற்கூரையில் நின்றபடியும் பாலசந்தருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

K.Balachander's funeral was held at Chennai Besant Nagar crematory

கூட்டம் அதிகமாக இருந்ததால் பாலசந்தர் குடும்பத்தினரோடு ரஜினி, பாரதிராஜா, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே மின்மயான அறை வரை அனுமதிக்கப் பட்டனர். பாலசந்தரின் இளைய மகன் பிரசன்னா இறுதி சடங்களுக்குப் பின் சிதைக்கு நெருப்பூட்டினார்.

பின்னர் கனத்த மனதோடும், கலங்கிய விழிகளோடும் ரஜினி, சரத்குமார், சுஹாசினி, ஸ்ருதி உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேறினார். சிறிது நேரம் பாரதிராஜா, விக்ரமன் உள்ளிட்டோர் கதறி அழுதபடி மயான வாசலிலேயே நின்றிருந்தனர்.

K.Balachander's funeral was held at Chennai Besant Nagar crematory

பின்னர், தங்கள் வாகனங்களில் ஏறி அவர்கள் மயானத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து மயான வாசலில் மக்கள் கூட்டம் கலையாமல் இருந்ததால், திரை உலகப் பிரபலங்களின் வாகனங்கள் வெளியேறுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

தமிழ் சினிமாவின் பீஷ்மர் என அன்புடன் அழைக்கப் பட்ட பாலசந்தரின் பூவுடல் எரியூட்டப் பட்டாலும், அவரது படைப்புகள் நம்மோடு காலாகாலத்திற்கு வாழும் என்ற நம்பிக்கை அங்கு கூடியிருந்தவர்கள் முகத்தில் தெரிந்தது.

English summary
The veteran film director K.Balachander's body was taken to Besant Nagar crematory as a possession.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X