For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓசியில் கிடைத்த ஒரு மாநில அரசு!

By Shankar
Google Oneindia Tamil News

ஒரு மாநிலத்தின் ஆட்சியை பிடிக்க என்னென்ன செய்ய வேண்டும்? கட்சியை பலப்படுத்த வேண்டும். தொண்டர்கள் அதிக அளவில் இணைய வேண்டும். அந்த மாநில மக்களின் அடிப்படை பிரச்னைகளை புரிந்துகொண்டு அவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டும். பொது தேர்தலில் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் கைகளில் ஓசியில் ஒரு மாநில அரசு கிடைத்தால் என்ன ஆகும்? தமிழ்நாட்டில் பாஜக படும் பாடுதான் நேரும்.

தமிழ்நாட்டில் ஆட்சியை மறைமுகமாக கைப்பற்றிய பாஜகவால் தமிழ்நாட்டு அரசியலை கைப்பற்ற முடியவில்லை. அரசியலைக் கைப்பற்றுவதற்காக அந்த கட்சியின் மாநில தலைவர்கள் செய்யும் விஷயங்கள், பேசும் வார்த்தைகள் எல்லாம் அவர்களுக்கு எதிராகவே திரும்பி வருகிறது.

நிர்வாக தலையீடு

நிர்வாக தலையீடு

தமிழ்நாட்டு ஆட்சியில் பாஜகவின் நிர்வாக தலையீடு இருப்பது நேரடியாகவே தெரிகிறது. ஜெயலலிதா மறைந்ததில் இருந்து பாஜகதான் தமிழகத்தை மறைமுகமாக ஆட்சி புரிவதாக மக்களும் நம்புகிறார்கள். ஒன்று இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் தமிழக அரசை சுதந்திரமாக ஆட்சி புரிய வைக்க வேண்டும். அந்த சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும். அல்லது தங்கள் மூலம் நல்ல நிர்வாகத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரண்டுதான் பாஜகவுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும். பதிலாக நிர்வாகம் முடங்குவதற்கு காரணமாகி வருகிறது பாஜக. இந்த ஆட்சி இப்படியே நீடிக்க வேண்டும் என்று பாஜக விரும்புவது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த நிலையில்லா ஆட்சியின் தன்மையே நிர்வாகம் கடுமையாக முடங்கக் காரணம். தமிழக மக்களின் உடனடித் தேவை உள்ளாட்சித் தேர்தல். அது நடக்காததால் நகர்ப்புற கிராமப்புற வளர்ச்சி கடுமையாக பாதிக்கிறது. மக்கள் தங்கள் அடிப்படை நிர்வாகத் தேவையைக் கூடப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆனால் அந்த உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் கூட மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. ஆக, பாஜக மாநிலத்தை மறைமுகமாக ஆள்வதில் மக்களுக்கு எந்த நலனும் இல்லை. பதிலாக பாதிப்புதான் அதிகம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

மக்களிடமிருந்து விலகும் மத்திய அரசு

மக்களிடமிருந்து விலகும் மத்திய அரசு

பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லையே தவிர காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக ஓரளவுக்கு நல்ல பெயராவது இருந்தது. அதனைக் கெடுத்துக்கொள்ளும் வேலைகள்தான் தொடர்ந்து நடக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இமேஜ் வேறு. இப்போது பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள இமேஜ் வேறு. ஜெயலலிதா மரண மர்மம், சேகர் ரெட்டி ரெய்டு, ராம்மோகன்ராவ் ரெய்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் ரெய்டு, செந்தில் பாலாஜி ரெய்டு, இரட்டை இலை முடக்கம், ஆர்கே நகர் இடைதேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நீட் தேர்வு என்று தமிழகத்தின் அத்தனை அரசியல் சூழ்நிலைகளையும் உருவாக்கி தங்கள் ஆட்சியின் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்வது அப்பட்டமாக தெரிகிறது.

உளறும் தலைவர்கள்

உளறும் தலைவர்கள்

ஒரு தலைவன் எதை பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்பது மிக முக்கியம். ஆனால் பாஜக தலைவர்களிடம் மைக்கை நீட்டினாலே உளறுவதும் அது வலைதளவாசிகளுக்கு பொழுதுபோக்காகவும் அமைந்துவிடுகிறது. ஒரு குடும்பமே பற்றி எரிந்து தமிழகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கும் சூழலில் கூட அதில் ஆன்மீகத்தை இணைத்துப் பேசி வெறுப்பை வாங்கிக்கொள்கிறார்கள். அந்த சூழ்நிலையிலும் பாஜகவையும் மோடியையும் புரமோட் செய்து மக்களை எரிச்சலாக்குகிறார்கள். தமிழக பாஜக தலைவர்களின் பேச்சுகள், பேட்டிகள் அனைத்தும் அவர்களுக்கும் தமிழக மக்களின் மனநிலைக்கும் சுத்தமாக தொடர்பு இல்லாததைத் தெளிவாக காட்டுகிறது.

பாஜக தமிழக தலைவர்களுக்கு...

பாஜக தமிழக தலைவர்களுக்கு...

இப்போதுகூட பாஜக தமிழகத்தில் வெல்வதற்கான காரணத்தை நீங்கள் யோசிக்கவில்லை. எளிதில் வென்று விடலாம் அல்லது வென்றே விட்டோம் என்ற மனநிலையில் அப்படி வென்ற பின்னர் சொல்வதற்கான காரணத்தை தான் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். இது உங்களை நீங்களே மக்களிடமிருந்து விலக்கிக்கொள்ளும் செயல். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. உங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளுமே பொதுவெளியில் விமர்சிக்கப்படுகின்றன. நீங்கள் ஊடகங்களையும் உங்களை எதிர்க்கும் தலைவர்களையும்தான் பார்க்கிறீர்கள். ஆனால் மக்கள் மனநிலையை பற்றி யோசிப்பதே இல்லை.

மெர்சல் ஒரு மேட்டரா?

மெர்சல் ஒரு மேட்டரா?

மெர்சல் பட விவகாரத்தில் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு படத்தில் தவறான புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்தால் அந்த புள்ளிவிவரத்தின் சரியான தகவல்களை சுட்டிக்காட்டி வழக்கே போட்டு படத்தை தடை செய்யலாம். அந்த புள்ளிவிவரம் இடம்பெறும் வசனத்தை நீக்கச் சொல்லலாம். ஜிஎஸ்டி விஷயத்தில் இந்தியாவை சிங்கப்பூருடன் ஒப்பிட்டதும், மதுபானத்துக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்று குறிப்பிட்டதும் தவறு என்றால் அதை எடுத்துச் சொல்லி தடை வாங்கியிருக்கலாம் அல்லது நீக்க நீதிமன்றம் சென்றிருக்கலாம். அதனைவிட்டு பணமதிப்பு நீக்கத்தையும், ஜிஎஸ்டி வரிவிதிப்பையும் கிண்டலடித்து எப்படி கருத்துச் சொல்லலாம் என்று நீங்கள் கேட்டதுதான் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மிரட்டலானது. அதை சரியாக அணுக வாய்ப்புகள் இருந்தும் அதிகாரத்தை பயன்படுத்தியது தான் தவறாகப் போனது. இப்போது மெர்சல் விவகாரம் முடிந்ததாக குறிப்பிடுகிறீர்கள். வசனங்கள் நீக்கப்படாத நிலையில் எப்படி பிரச்னையை முடித்துக்கொண்டீர்கள்? மக்களுக்கு சந்தேகம் எழுமா? எழாதா?

தேசிய செயலாளர்...

தேசிய செயலாளர்...

தேசிய செயலாளராக இருப்பவர்தான் திருட்டுத்தனமாக படத்தை இணையத்தில் பார்த்தேன் என்று சொல்லிவிட்டு நான் அப்படி சொல்லவே இல்லை என்று மறுப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுதிரண்டபோது என்ன செய்தீர்கள்? ஒன்றும் செய்யாமல் இருந்திருந்தாலே கூட போதும். அதை விட்டு மாநில பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பேரணி, திருச்சியில் பொதுக்கூட்டம். இந்த இரண்டு முயற்சிகளுமே படுதோல்வியில்தானே முடிந்தன.

இறுதியாக ஒன்று...

இறுதியாக ஒன்று...

நீங்கள் இந்த ஆட்சி இருக்கும்போதே இந்த ஆட்சியை கைப்பாவையாக்கி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். முறையான அரசியல் செய்யாமல் நீங்கள் குறுக்கு வழியில் வருவதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே இதே நிலை நீடித்தால் பாஜக என்னும் கட்சி மீதான வெறுப்பு தான் அதிகமாகும். உங்களுக்கு தேவை சுயபரிசோதனையும் மனமாற்றமும் தான்...

எப்போது சரியான அரசியல், தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியலை செய்யப் போகிறீர்கள் பாஜகவே?

- க.ராஜீவ் காந்தி

பத்திரிகையாளர் - இயக்குநர்

English summary
The BJP's control over state govt and its activities are totally disappointed the public of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X