கருணாநிதி இன்னும் பல காலம் வாழ்ந்து வழிகாட்ட வேண்டும்: இல.கணேசன் விருப்பம்
சென்னை: கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், கருணாநிதி பூரண நலம் பெற்று இன்னும் பல நாள் இருந்து பலருக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் 24 மணி நேரமும் அவருடைய உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, திமுக தொண்டர்கள், பொதுமக்கள் மருத்துவமனையின் முன்பு கருணாநிதியின் உடல் நலம் குறித்து அறிந்துகொள்ள திரண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று பாஜக மூத்த தலைவரும் ராஜ்ய சபா எம்பியுமான இல.கணேசன் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், "இன்றைக்கு இருக்கும் அரசியல் தளத்தில் மூத்த அரசியல் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும். அவர் இன்னும் பல நாட்கள் இருந்து பல பேருக்கு வழிகாட்ட வேண்டும். அவர் பூரண நலம் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.
மேலும், கருணாநிதியின் உடல் நலம் குறித்து பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், முரளிதர ராவ் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!