For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழக தலைவர்கள் ஆங்கிலத்தை எதிர்க்கவில்லையே: பெ. மணியரசன்

Google Oneindia Tamil News

Centre promoting hindi: P. Maniarasan slams TN leaders
சென்னை: இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆங்கில திணிப்பை எதிர்க்கவில்லையே என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத்திலும் எழுதிக் கொள்ளலாம் என்று நடுவண் உள்துறை கடந்த 27.05.2014 அன்று ஆணையிட்டிருந்தது.

அந்த இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்ததும், தலைமை அமைச்சர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கை கொடுத்துள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரிவோர் ஆங்கிலத்தில் எழுதிக் கொள்ளலாம் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் பணிபுரிவோர் கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும் என்றும் கட்டளையிட்டுருப்பதாகவும், எனவே இந்தி பேசாத மாநிலங்கள் இந்நடவடிக்கையை இந்தித் திணிப்பாகக் கருத வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விளக்கம் இந்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையை மூடிமறைக்கும் தந்திர விளக்கமாகும்.

இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய அலுவல் மொழி பற்றிய 1968ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம், இந்தி அல்லது ஆங்கிலத்தை அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம் என்றும், தொடர்ந்து இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக இருக்கும் என்றும் சொல்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஒன்றிய அலுவலகங்களில் இந்தி மட்டுமே கட்டாய அலுவல் மொழியாக இருக்கும் என்று அது கூறவில்லை. அச்சட்டத் திருத்தம் இந்தி பேசும் மாநிலங்களுக்கும் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி இந்தியிலும் இருக்கலாம், ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்றுதான் கூறுகிறது.

இந்தியைத் தீவிரமாக திணிப்பதற்கான முனைப்பில் காங்கிரசு அரசும் செயல்பட்டது. இப்பொழுது பாஜக அரசும் அதே திசையில் செயல்படுகிறது.

1968ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்திற்கு மதிப்பளித்து 27.05.2014 அன்று வெளியிட்ட மேற்படி கட்டளைச் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட இந்தித் திணிப்பு முயற்சியை எதிர்த்து கண்டனக் குரல்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டில் எழுந்தது பாராட்டத்தக்கது. ஆனால், பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ்வழிப் பிரிவை புறந்தள்ளும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளை திணித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் மொழியைக் காப்பதற்காக இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகவும் இந்திய அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தலைமை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது நகைமுரணாக உள்ளது.

உண்மையில் தமிழ் மொழியின் மீது தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால், சட்டப்படி தமிழக அலுவல் மொழியாக உள்ள தமிழை குறைந்தது பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலாவது கட்டாய மொழிப் பாடமாகவும், கட்டாயப் பயிற்றுமொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தித் திணிப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை புறக்கணிக்கும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளைப் பள்ளிக் கல்வியில் திணிப்பதைக் கண்டித்து, அத்திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சுட்டு விரலைக் கூட அவர் அசைக்கவில்லை; அமைதி காக்கிறார். இவரைப் போல், இப்பொழுது இந்தித் திணிப்பை எதிர்க்கும் இன்னும் சில தலைவர்களும் தமிழக பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழிப் பிரிவுகள் திணிக்கப்படுவதை எதிர்த்துப் போராடவில்லை. இவர்களுடைய இந்தித் திணிப்பு எதிர்ப்பு, எந்த வகையில் மொழிக் கொள்கையில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தும் நிலையில் உள்ளது என்பது வினாக்குறியாக உள்ளது.

எனவே, தமிழ் உணர்வாளர்கள் - தமிழ் மக்கள் வெற்று ஆரவாரமாகவும் தமிழ் மக்களைக் கவரும் ஓர் உத்தியாகவும் மட்டுமே இந்தித் திணிப்பை எதிர்க்கும் அரசியல் தலைவர்களின் போலித்தனத்தையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்து சரியான மொழிக் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் தொடக்கிக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழே கட்டாய மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதும், தமிழ்நாட்டின் இந்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதும் மட்டுமே சரியான மொழிக் கொள்கை என்பதை தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Desa Podhuvudamai Katchi chief P. Maniarasan slammed some TN political leaders who are opposing centre for promoting hindi as they didn't oppose english.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X