For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெட்ரோ ரயில் தொடக்க விழாவை குடும்ப விழாவாக்கிய ஜெ., கட்டணக்கொள்ளை: ராமதாஸ், இளங்கோவன் கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மெட்ரோ ரயில் தொடக்க விழாவை தமது குடும்ப விழாவைப் போல ஜெயலலிதா நடத்தியிருக்கிறார் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார் .மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே பயணிக்க ரூ.40 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பகல் கொள்ளை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெட்ரோ ரயில் சேவை வெற்றி பெற வேண்டுமென்றால் அதன் கட்டணங்கள் குறைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Metro Rail: Ramadoss, EVKS Elangovan urged to reduce fares

மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் - கோயம்பேடு இடையே பயணிக்க குறைந்த பட்சம் ரூ.10 அதிகபட்சம் ரூ.40ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னைப் பெருநகரத் தொடர்வண்டித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு செய்த அரசியல் மன்னிக்க முடியாதது ஆகும். சென்னை கோயம்பேட்டில் தொடங்கி ஆலந்தூர் வரையிலான பெருநகரத் தொடர்வண்டித் திட்டப் பாதை அமைக்கும் பணிகள் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து விட்டன. கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இத்திட்டத்தின் சோதனை ஓட்டம் தொடங்கிவிட்டது. கடந்த 6.11.2013 அன்று இந்த சோதனை ஓட்டத்தை அப்போது முதல்வராக இருந்த இதே ஜெயலலிதா தான் தொடங்கி வைத்தார். அதன்பிறகு மீதமுள்ள பணிகளும் முடிவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே வணிக அடிப்படையிலான இயக்கத்தைத் தொடங்க சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் தயாராகிவிட்டது.

8 மாதம் தாமதம்

தொடக்க விழாவுக்கான தேதியை தமிழக அரசு நிர்ணயித்தால் பாதுகாப்பு சோதனையை உடனடியாக முடித்து சேவையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசுக்கு பெருநகரத் தொடர்வண்டி நிறுவனம் கடிதம் எழுதியது. ஆனால், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான பிறகு தான் இத்திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறிவிட்டதால் இத்திட்டம் 8 மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இத்திட்டத்தின் பயன்களை கடந்த 8 மாதங்களாக பொதுமக்கள் அனுபவிக்க முடியாமல் தடுத்த பெரும் பாவத்தை அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்த காலத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கபட்டதாக தெரிவித்துள்ளார்.

பெருநகரத் தொடர்வண்டித் திட்டத்தின் தொடக்க விழாவைப் போல தமது குடும்ப விழாவைப் போல ஜெயலலிதா நடத்தியிருக்கிறார். பெருநகரத் தொடர்வண்டித் திட்டம் தமிழக அரசின் திட்டம் இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தான் பெருநகரத் தொடர்வண்டி நிறுவனம் என்ற சிறப்பு பயன்பாட்டு அமைப்பை ஏற்படுத்தி இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன. எனவே, இதுபோன்ற விழாக்களில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் உள்ள மாநிலங்களவை, மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மாநாகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர்களையும் அழைத்து தொடக்க விழாவை நடத்துவது தான் சரியானதாக இருக்கும். ஆனால், அனைத்தும் தாம் தான் என்ற தன்முனைப்பில் உள்ள ஜெயலலிதா தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்தி இந்த திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தியுள்ளார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இதற்கெல்லாம் மேலாக பெருநகரத் தொடர்வண்டி சேவைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையிலான 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகளுக்கு ரூ.80 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பகல் கொள்ளைக்கு இணையானதாகும்.

டெல்லி - சென்னை ஒப்பீடு

இந்தியாவில் பெருநகரத் தொடர்வண்டி சேவைக்கெல்லாம் தாயாக கருதப்படுவது டெல்லி பெருநகர தொடர் வண்டி சேவையாகும். கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான அதே 10கி.மீ தொலைவு கொண்ட டெல்லி கரோல்பாக்கிலிருந்து விதான் சபா செல்வதற்கு டெல்லி பெருநகர தொடர்வண்டி சேவையில் ரூ.16 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஏழைகள் பயணிக்க முடியாது

டெல்லியை விட சென்னை பெருநகர தொடர்வண்டியில் 250% அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், டெல்லியில் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.8 வசூலிக்கப்படும் நிலையில் சென்னையில் ரூ.10 வசூலிக்கப்படுவது முறையல்ல. குளிரூட்டி வசதி கொண்ட சென்னை மாநகரப் பேருந்துகளில் இதே தொலைவுக்கு 30 ரூபாயும், புறநகர் தொடர்வண்டிகளில் 5 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், பெருநகரத் தொடர்வண்டியில் ரூ.40 வசூலித்தால் இத் தொடர்வண்டிகளில் ஏழைகள் பயணம் செய்வது தடுக்கப்பட்டுவிடும்.

கட்டணத்தை குறைக்கலாம்

பெருநகரத் தொடர்வண்டி என்பது சேவையாக இருக்க வேண்டுமே தவிர வணிகமாக இருக்கக் கூடாது. இதை உணர்ந்து பெருநகரத் தொடர்வண்டிக் கட்டணங்களை டெல்லி பெருநகரத் தொடர்வண்டிக் கட்டணங்களுக்கு இணையாகக் குறைக்கும்படி சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் உடனடியாக கட்டணக் குறைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

முட்டுக்கட்டை போட்டவர்

அன்று மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர், மோனா ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக கூறினார். ஆனால் கடந்த நான்காண்டுகால ஆட்சியில் இதுவரை மோனோ ரயில் திட்டத்திற்காக என்ன முயற்சி எடுத்தார் என்று தெரியவில்லை ? மெட்ரோ ரயிலையும் எதிர்த்து, மோனோ ரயிலையும் செயல்படுத்தாக ஜெயலலிதாவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை வீடியோ கான்பரென்சிங் மூலம் தொடங்கி வைப்பதற்கு எந்த உரிமையோ, தகுதியோ இல்லை என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

English summary
Opposition political parties like PMK and Congress termed fares of Chennai Metro Rail, which was inaugurated by chief minister J Jayalalithaa on Monday, as very high. They demanded that Chennai Metro Rail reduce the fares.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X