For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசு சத்தமில்லாமல் செய்த ஒரு கொடுமை.. கருணாநிதி எதை சொல்கிறார் தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: "தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு 1.26 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. இதற்கான விலையை மத்திய அரசு ஒரு கிலோ ரூ. 22.54 என்று உயர்த்தியிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு சத்தமில்லாமல் செய்திருக்கும் கொடுமை இது. இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தி.மு. கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில்கள் வடிவிலான அறிக்கை:

DMK chief request union government to call back rice price raising

கேள்வி :- சென்னை மாநகரில் தண்ணீர் லாரி மோதி மூன்று கல்லூரி மாணவிகள் பலியானது பற்றி?

கருணாநிதி:- மிகப் பெரிய கொடுமை அது. தங்கள் குழந்தைகளை இழந்து வாடும் மாணவிகளின் பெற்றோருக்கும் எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. இந்த நேரத்தில் வாகனங்களை ஓட்டுவோர் மனிதாபி மானத்தோடும், மிகுந்த எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். அதுபோலவே சில மாணவர்களும் விபத்தில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். சென்னையில் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் நான்கு குழந்தைகள் பலியாகியிருக்கின்றன. இவர்களை இழந்து வாடும், பெற்றோர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் சார்பில் அந்தக் குடும்பத்தாருக்கு நிவாரண உதவித் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

கேள்வி :- தமிழகத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி?

கருணாநிதி :- பா.ஜ.கட்சிக்காக உண்மையில் நீண்ட காலமாக உழைத்து வந்த அருமை நண்பர் இல. கணேசன் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். என்னிடம் தனிப்பட்ட முறையில் என்றும் மாறாத அன்பு கொண்டவர் அவர். அவருக்குக் கிடைத்துள்ள இந்தப் பொறுப்பு மகிழ்ந்து பாராட்டப்படக் கூடியது. அவரை மனதார வாழ்த்துகிறேன்.

கேள்வி :- தமிழகத்தில் தி.மு. கழக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வை மீண்டும் கொண்டுவர பல முயற்சிகள் நடைபெறுகிறதே?

கருணாநிதி:- இதுபற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர், இளவல் வீரமணி விரிவாக ஒரு அறிக்கை விடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப் பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி சேர்க்கை நடைபெற்றது. நுழைவுத் தேர்வு 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போது, அதனை எதிர்த்து தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகளும், சிறுபான்மை அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், விக்கிர மஜீத் சென் ஆகியோர் நுழைவுத் தேர்வு கொண்டுவருவது, கல்வி நிறுவனங்களின் உரிமை களில் தலையிடுவதாகும். எனவே இந்திய மருத்துவக் கவுன்சில் இத்தகைய தேர்வினை நடத்தும் உரிமை உடையதல்ல என்றும், நீதிபதி அனில் ஆர். தவே நுழைவுத் தேர்வினை ஆதரித்தும் தீர்ப்பு வழங்கினர். பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் மறு சீராய்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தனர். அனில் ஆர். தவே தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு இந்த முறை நுழைவுத் தேர்வுக்கு அனுமதி வழங்கிவிட்டது.

தமிழக அரசு நுழைவுத் தேர்வுக்கு எதிராக இருந்த தால், இந்த ஆண்டுக்கு மட்டும் நுழைவுத் தேர்வி லிருந்து தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு அளிக்கப் பட்டது. 2017இல் நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டையும் கட்டுப்படுத்தக்கூடியது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் பொதுப் போட்டியிலேயே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் சிறப்பாகத் தேர்வு பெற்றுள்ளனர். பொதுப் போட்டிக்கான மொத்த இடங்கள் 884இல், பிற்படுத்தப்பட்டோர் 599 பேர்; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159 பேர்; தாழ்த்தப் பட்டோர் 23 பேர்; இஸ்லாமியர் 32 பேர்; அருந்ததியர் 2 பேர்; மலைவாழ் மக்கள் 1, முற்பட்டோர் 68 பேர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டதால், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர்கள் இந்த அளவுக்கு இடம் பெற்றுள்ளார்கள். இந்த அளவுக்கு இடம் பெற்றதை மாற்றிட, சமூக நீதிக்குக் குழி தோண்டிப் புதைத்திட மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நுழைவுத் தேர்வினை இப்போது முதற்கொண்டே முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டிய கடப்பாடு நமக்கும், தமிழர்கள் அனைவருக்கும், ஏன் முக்கியமாக அ.தி.மு.க. அரசுக்கும் உண்டு. வழக்கம் போல அ.தி.மு.க. அரசு முக்கியமான இந்தப் பிரச்சினையிலும் தூங்கிவிடுமானால், 2017ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் மருத்துவக் கல்வி பகல் கனவாகி விடும்!

கேள்வி :- பொது வழங்கல் திட்டத்தின்படி வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கான அரிசி விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறதே?

கருணாநிதி :- மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் அரிசியை வெவ்வேறு விலைகளில் வழங்குகிறது. பரம ஏழைகளுக்கு வழங்கப்படும் அரிசியின் விலையை ஒரு கிலோ மூன்று ரூபாய் என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கான அரிசியின் விலையை ஒரு கிலோ ரூ. 5.65 என்றும், வறுமைக் கோட்டுக்கு மேலே வாழும் மக்களுக்கான அரிசியின் விலையை ஒரு கிலோ ரூ. 8.30 என்றும் கணக்கிடுகிறது. இதில் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்காக வழங்கப்படும் அரிசியின் விலையைத்தான் ஒரு கிலோ ரூ. 8.30 என்பதிலிருந்து ரூ. 22.54 என்ற அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு 1.26 இலட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. இதற்கான விலையைத்தான் மத்திய அரசு ஒரு கிலோ ரூ. 22.54 என்று விலை உயர்த்தியிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு சத்தமில்லாமல் செய்திருக்கும் கொடுமை இது. இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தி.மு. கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

கேள்வி :- கனடா நாடாளுமன்றத்தில், "ஜனவரி மாதத்தை" தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவித்திருக்கிறார்களே?

கருணாநிதி :- நாமெல்லாம் உளமார வரவேற்கும் செய்தி அது. தமிழ் மொழியின் பழமை, இலக்கிய செழுமை ஆகியவற்றையும், கனடா சமுதாயத்திற்கு தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, கனடா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தமிழர், கேரி ஆனந்த சங்கரி, ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு தீர்மானமாக கனடா நாடாளுமன்றத்தில் வைத்து, அதன் மீது விவாதமும் நடைபெற்று, அக்டோபர் 5ஆம் தேதியன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில்தான் தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் திருநாள், திருவள்ளுவர் ஆண்டு கொண்டாடப்படுவதால், தமிழ்ப் பாரம்பரிய மாதமாக கனடா நாடாளுமன்றம் தேர்வு செய்திருப்பது எவ்வளவு பொருத்தமானது?

கேள்வி :- நீதிமன்றங்கள் எவ்வளவோ கண்டனம் தெரிவித்தும்கூட, அண்ணா நூலகத்தை அ.தி.மு.க. அரசு பராமரிக்க முன் வந்ததாகத் தெரியவில்லையே?

கருணாநிதி :- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் - அதனை தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் நான் உருவாக்கினேன் என்ற ஒரே காரணத்திற்காக - அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் இருந்தது பற்றி நடைபெற்ற வழக்கில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களும், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அவர்களும் "நீதி மன்ற உத்தரவை அரசு அமல்படுத்தாதது ஏன்? உங்களுக்கு இஷ்டம் இருந்தால் 48 மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்வீர்கள். ஜூன் 30ஆம் தேதி இறுதிக் கெடு விதிக்கிறோம். அதற்குள் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். அதற்கான புகைப்பட ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இறுதிக் கெடுவுக்குள் வசதிகளைச் செய்து கொடுக்கா விட்டால், நீதிமன்றமே அண்ணா நூலகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து, பராமரிக்கத் தொடங்கும். இதைக் கண்டனமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்கள். ஜூலை 22ஆம் தேதியன்று மீண்டும் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் வில்சன், "நூலகத்தைப் பராமரிக்க உத்தரவிட்ட போதிலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் அந்த நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்காக 32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஆறு இலட்சம் புத்தகங்கள் வாங்கப்பட்டன. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் வெறும் 1234 புத்தகங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன.

அதிலும் ஒன்றுகூட தமிழ்ப் புத்தகம் இல்லை. அந்த நூலகம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியும், அந்த நூலகத்தில் ஒரே ஒருவர்தான் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளார். அந்த ஒரு உறுப்பினர் முன்னாள் முதல்வர் எம். கருணாநிதி தான். அவரைத் தொடர்ந்து வந்த அரசாங்கம் உறுப்பினர்கள் பதிவு செய்வதையே நிறுத்தி விட்டதுதான் அதற்குக் காரணம்" என்றெல்லாம் வாதாடியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நூலகத்தை முறையாகப் பராமரித்து அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், தவறினால் நீதிமன்றமே குழு அமைத்து அந்தப் பணியை மேற்கொள்ளும் என்றும் வாய் மொழியாக எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும் அண்ணா நூலகம் இன்னமும் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றுதான் செய்திகள் வருகின்றன. போட்டித் தேர்வுப் பிரிவில் உள்ள புத்தகங்கள் மாயமாகும் அளவுக்கு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாம்.

புதிய புத்தகங்கள் வாங்காத நிலையில் பல முக்கிய புத்தகங்கள் எல்லாம் மாயமாகிக் கொண்டு வருகிறதாம். புத்தகங்களின் இருப்பு விபரம், பழைய புத்தக இருப்பு விபரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க அதிகாரிகள் இதுவரை முயற்சிக்கவும் இல்லையாம். "ஆகாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்" என்ற போக்கில்தான் அண்ணா நூலகம் பராமரிக்கப்பட்டு வருகிறதாம். அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், அண்ணாவின் திருஉருவத்தைக் கொடியிலும் வைத்துக் கொண்டு, அண்ணா பெயரிலமைந்திருக்கும் நூலகத்தைப் புறக்கணித்து வருவதுதான் மிகப் பெரிய முரண்! இவ்வாறு தெரிவித்தார்.

English summary
DMK chief request union government to call back rice price raising as it will suffer poor people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X