For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தின் காவிரி உரிமையை கர்நாடகா தேர்தலுக்காக காவு கொடுக்கிறது மத்திய அரசு- திமுக

தமிழகத்தின் காவிரி உரிமையை கர்நாடகா தேர்தலுக்காக மத்திய அரசு காவு கொடுத்துள்ளதாக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் பாரம்பரிய உரிமையான காவிரி உரிமையை கர்நாடகா தேர்தலுக்காக மத்திய அரசு காவு கொடுத்துள்ளதாக திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கண்டனங்களும், தீர்மானங்களும் முன்வைக்கப்பட்டன.

மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையான "நீட்"" தேர்வினை எல்லா வகை எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணித்து, வேறு வழியின்றி நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், முன்கூட்டியே முறையாகத் திட்டமிடப்படாத குழப்பத்தின் உச்சகட்டமாக, கேரள மாநிலத்திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும், சிக்கிம் மாநிலத்திலும் தேர்வு மையங்களை ஒதுக்கி மத்திய இளநிலை பள்ளிக் கழகம் (சி.பி.எஸ்.இ) எதிர்பாராததொரு தாக்குதலை தமிழக மாணவர்கள் மீது தொடுத்து எவராலும் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து விட்டது. மத்திய அரசின் இந்த துரோகச் செயலுக்கு அ.தி.மு.க. அரசு எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல், மத்திய அரசின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்தது.

DMK condemns Centre for not constituting Cauvery Management board

அந்த துரோகத்தின் விளைவாகவும், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதாலும், சி.பி.எஸ்.இ விதித்த அவமானப்படுத்தும் கெடுபிடிகளாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களும், மாணவ- மாணவிகளும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். நீட் தேர்வு மன உளைச்சலின் காரணமாக திருத்துறைப்பூண்டி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி - சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன் - கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த மாணவி சுவாதியின் தந்தை சீனிவாசன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்ததை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

இவர்களது துயர மரணத்திற்கும் - அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 1

'நீட்' தேவையில்லை எனும் தமிழக மசோதாவுக்கு
உடனே ஒப்புதல் வேண்டும்

தி.மு.க. ஆட்சி காலத்தில், 2006ஆம் ஆண்டில் முறையாகச் சட்டமியற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நுழைவுத்தேர்வினை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிய தமிழ்நாட்டிற்கு, "நீட்"" தேர்விலிருந்து முழு விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும், ஏழரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை ஏளனமாகக் கருதி இழிவுபடுத்திடும் வகையில், தொடர்ந்து தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு மாறாக மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வையும் நடத்தி, இப்போது ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் கட்டாயம் என்று அறிவித்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவமிக்க சர்வாதிகாரப் போக்கை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.

ஒரு போட்டித் தேர்வுக்கு தேவையில்லாத கடுமையான கெடுபிடிகளை தேர்வு மையங்களில் வேண்டுமென்றே நடைமுறைப் படுத்தி, தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அவமானப்படுத்தித் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் சி.பி.எஸ்.இ.க்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மாணவர் உலகம் எப்போதும் கண்டும் கேட்டுமிராத சி.பி.எஸ்.இ. வாரியத்தின் பண்பாடற்ற செயலுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இன்னும் மனித உயிர்களைக் காவு கேட்காமல், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நீட் விலக்கு மசோதாவிற்கு, அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளையொட்டி மேலும், காலங்கடத்தாமல் உடனடியாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அதற்கான அழுத்தத்தை அதிமுக அரசு கொடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 2
முதலமைச்சர், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை
அழைத்துப் பேசித் தீர்வு காண வேண்டும்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய உயர்வு, ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட நிலுவையில் இருந்து வரும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்த போராட்டத்தின் இறுதி வடிவமாக தலைமைச் செயலகத்தை நோக்கி மே 8-ஆம் தேதி பேரணி என்று அறிவித்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை துறை அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை விவாதித்து சுமூக தீர்வு காண முற்படாமல், காவல்துறையை ஏவிவிட்டு நள்ளிரவிலும், சுங்கச் சாவடிகளில் பேருந்துகளைத் தடுத்து நிறுத்தியும் முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில் கைது செய்ததற்கும், சென்னை மற்றும் மாநிலமெங்கும் இன்று போராடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எல்லாம் பெண்கள் என்றுகூட பாராமல் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றும் இழுத்துச் சென்றும் கைது செய்த அராஜகத்திற்கும் அனைத்துக்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜனநாயகத்தில் அடக்குமுறை ஒரு போதும் தீர்வாகாது என்பதையும் அடக்குமுறையே தீர்வுகாண முதன்மைத் தடையாகிவிடும் என்பதையும் அதிமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். மாநில நிர்வாகம் இயங்குவதை நிறுத்தி மேலும் நிலைகுலைந்து போகாமல் இருக்க, கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக அழைத்துப் பேசி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன் வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென அனைத்துக்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3
"காவிரி மேலாண்மை வாரியம் - அடுத்தகட்ட நடவடிக்கை

2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு உரிய நீதியை வழங்காமல் அலட்சியப்படுத்திடும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதனைத் திரித்தும் திசை திருப்பும் வகையிலும் வேறு வேறு பொருள்பட அறிவிப்புகளைச் செய்து, ஏறக்குறைய மூன்று மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது மட்டுமின்றி, கர்நாடகத் தேர்தல் கணக்கை மனதில்கொண்டு, பலமுறை "கால அவகாசம்"" கோரும் மனுக்கள் தாக்கல் செய்து, ஒரு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைத் திட்டமிட்டு சவாலுக்கு அழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதலில் விதித்த ஆறுவார காலக்கெடுவும் முடிந்து, பிறகு கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி வாய்தா வாங்கி, மீண்டும் மே 3-ஆம் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது "பிரதமரும் அமைச்சரும் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதலைப் பெற முடியவில்லை"" என்று, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் அறிந்தோர் அனைவரும் நகைத்திடும் வண்ணம் "கால அவகாசம்"" கேட்டு, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், கூச்சமே இன்றி மீண்டும் பத்துநாள் அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றமும் மே 14-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பதற்கு இந்த அனைத்துக் கட்சி கூட்டம் மிகுந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறது.

நீதித்துறை சுதந்திரத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை கவலையுடனும், அதிர்ச்சியுடனும் பார்க்கும் சூழ்நிலை காவிரி இறுதித் தீர்ப்பு வழக்கில் உருவாகியிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும் நிச்சயமாக உகந்த சூழலாக இல்லை என்பதையும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தமிழக மக்கள் உச்ச நீதிமன்றத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு, பல்வேறு முறை கால அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றமும் அனுமதித்து, இறுதியில் கர்நாடகத் தேர்தல் முடியும் வரை கால அவகாசத்தைப் பெற்றிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டு விவசாயிகளையும் பொதுமக்களையும் திட்டமிட்டு வஞ்சிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பாரம்பரியமான காவிரி உரிமையை கர்நாடகத் தேர்தலுக்காக காவு கொடுத்து வருவது தமிழகத்தையே பதற வைக்கிறது.

காவிரி உரிமையை நிலைநாட்ட, நடைபெற்ற ஜனநாயக வழியிலான அறப்போராட்டங்களில் தன்னெழுச்சியாகப் பங்கேற்ற அனைத்துத் தரப்பு மக்களுக்கும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தும் இந்த துரோகம் கோபத்தையும், கொந்தளிப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ஜனநாயக வழியிலான அமைதிப் போராட்டங்களில் நம்பிக்கை இழக்கும் நிலையையும் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தியிருப்பதை இந்த அனைத்துக்கட்சி கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது. சாலை மறியல், முழு அடைப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க "ழுடி க்ஷயஉம ஆடினi"" என்ற கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம், காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம், மேதகு ஆளுநரிடம் மனு, மனித சங்கிலிப் போராட்டம் என்று அனைத்து விதமான அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வரவில்லை. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க அரசு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் அனைத்து "கால அவகாசம்"" கோரும் போக்கிற்கும் மனமுவந்து துணை போவது மட்டுமின்றி வழக்கின் முக்கியத்துவத்தை திசை திருப்பும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிருக்கிறது. "கர்நாடக மாநில அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும்"" என்று வழக்கு விசாரணையின்போது கூறிய போதிலும், மே 8-ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்ற ஆணையில் அந்த உத்தரவு இடம்பெறவில்லை.

காவிரி நதிநீர் பிரச்சினையில் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து வரும் மத்திய அரசையும் - அதற்கு துணை போகும் மாநில அரசின் நடவடிக்கையையும் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன்;

மே 14-ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்றும்; மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோரி தமிழகத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் விதத்திலும், தமிழ்நாட்டு விவசாயிகளை வேதனைத் தீயில் தள்ளி, காவிரி மண்டலத்தை வறண்ட பாலைவனப் பிரதேசமாக்கவும் முனையும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - தமிழக விரோத மற்றும் ஜனநாயக விரோதப் போக்கு தொடருமாயின், வருகிற 15-5-2018 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணி அளவில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவெடுப்பதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

English summary
DMK and its ally parties condemns Centre for killing TN's rights for Karnataka elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X