For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவில் 18 மா.செ.க்கள் சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிட தடை- உறுதிமொழி வாங்கினார் கருணாநிதி!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக "குறுநிலமன்னர்கள்" போல மாவட்ட செயலாளர்களாக பதவி வகித்து வருவோரில் 18 பேர் சட்டசபை, லோக்சபா தேர்தல் மற்றும் இதர கட்சிப் பதவிகளில் தனக்கோ தன்னுடைய குடும்பத்தினருக்கோ வாய்ப்பு கேட்க மாட்டோம் என்று கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்தை எழுதிக் கொடுதிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதனால் இந்த 18 பேரும் மீண்டும் மாவட்ட செயலாளர்களாக வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு கட்சிகளில் இனி எந்த ஒரு பதவியும் கிடைக்காத வகையில் செக் வைத்துள்ளார் கருணாநிதி.

இது தொடர்பாக கருணாநிதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், போட்டியிடுகின்றவர்கள் ஒன்றை நினைவிலே கொள்ள வேண்டும்.

குறுநில மன்னர்கள்...

குறுநில மன்னர்கள்...

அதாவது கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் நாம் மிகப் பெரிய தோல்வியை அடைந்தபோது, அதற்குக் காரணமாக கூறப்பட்ட பலவற்றில் ஒன்று, மாவட்டக் கழகச் செயலாளர்களாக இருந்த ஒரு சிலர், அதிலும் அமைச்சர் பதவியிலே இருந்தவர்கள் நடந்து கொண்ட முறை தான் என்று ஏடுகள் சில எழுதின. ஏன், "குறுநில மன்னர்கள்" போல் மாவட்டக் கழகச் செயலாளர்கள் நடந்து கொண்டது தான் காரணம் என்றே எழுதியிருந்தன.

தீவிர ஆலோசனை

தீவிர ஆலோசனை

வேறு கட்சிகளில் என்றால், யார் யார் மீது குறை கூறப்பட்டதோ அவர்களையெல்லாம் எந்தவிதமான விசாரணையுமின்றி உடனடியாக நீக்கி அறிவிப்பு செய்து விடலாம். ஆனால் தி.மு.கழகம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றக் கூடியதல்லவா? சர்வாதிகார முறையை அகற்றி, ஜனநாயகத்தைக் காப்பாற்றி வருவதல்லவா? எனவே இந்தத் தேர்தலை எப்படி நடத்துவது என்று நானும், பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியரும், பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலினும் பல முறை பேசியிருக்கிறோம்.

ஒருசிலரிடம்தான் கட்சியா?

ஒருசிலரிடம்தான் கட்சியா?

எதிர்காலத்தில் தி.மு. கழகத்தை எப்படி நடத்திச் செல்வது என்று விவாதித்திருக்கிறோம். கழகத்தை எப்படிக் கட்டிக் காப்பது, எப்படி வளர்ப்பது, என்ன செய்தால் கழகத்திற்கு வலிமை சேர்க்கும் என்ற நினைவு தான் இரவும் பகலும் என் சிந்தனையில்! கழகத்தின் செயல்பாட்டினை மேலும் செம்மையாக்க வேண்டுமானால், கழகம் ஏதோ சிலரிடம் மட்டும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற ஒரு தவறான எண்ணம் ஒரு சிலரிடையே இருப்பதைப் போக்க வேண்டும்!

மா.செக்களை கறையான் அரிக்க கூடாது

மா.செக்களை கறையான் அரிக்க கூடாது

கழகக் கட்டிடத்தை வலுவோடு தாங்கும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என்ற தூண்களைக் கறையான் அரித்து விடக்கூடாது என்று தான் எண்ணினோம். அதற்காக என்ன செய்யலாம் என்று பல முறை கலந்து பேசினோம்.

34 பழைய மாவட்டங்கள்..

34 பழைய மாவட்டங்கள்..

தற்போதுள்ள 65 மாவட்டங்களில் புதிய மாவட்டங்கள் 31. அங்கே புதியவர்கள் தான் மாவட்டக் கழகச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள். மற்ற 34 மாவட்டங்களில் என்ன செய்யலாம் என்று யோசித்து அதற்காகவே மாவட்டக் கழகச் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகு, வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் முன்னாள் அமைச்சர்கள், பல முறை மாவட்டக் கழகச் செயலாளர்களாகப் பணியாற்றியவர்கள் என்று பார்த்து, அப்படிப்பட்ட 18 பேரை நேரில் வரவழைத்து நானும், பேராசிரியரும், தம்பி ஸ்டாலினும் நேரடியாகப் பேசினோம்.

உறுதிமொழிப் பத்திரம்..

உறுதிமொழிப் பத்திரம்..

ஜனநாயக முறைப்படி நடைபெறும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தேர்தலில், யாரையும் நிற்கக் கூடாது என்று தடுத்திடலாகாது என்ற வகையில், மாவட்டக் கழகச் செயலாளர்களாகப் போட்டியிட விரும்புவோர் ஒரு உறுதி மொழிப் பத்திரம் தர வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டது.

சட்டசபை, லோக்சபா தேர்தலில் வாய்ப்பு இல்லை

சட்டசபை, லோக்சபா தேர்தலில் வாய்ப்பு இல்லை

அந்த உறுதிமொழிப் பத்திரத்தில், "மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு இந்தத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்கிறவர்கள், கட்டுப்பாட்டை ஏற்றுச் செயல்பட வேண்டுமென்பதற்காக அவர்களிடத்தில் ஒரு உறுதி மொழிப் பத்திரம் பெற வேண்டுமென்று தீர்மானித்தப்படி, இந்த உறுதி மொழி அந்த வேட்பாளர்களிடத்தில் வாங்கப்படுகிறது. இதில் கையொப்பமிட்டு தலைவரிடம் ஒப்படைப்பவர்கள் அடுத்து வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ தாங்கள் கட்டாயம் போட்டியிட வேண்டுமென்றோ, தலைவர் நியமிக்கின்ற பதவிகளில் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தாருக்கோ இடம் அளிக்க வேண்டுமென்றோ வேண்டுகோள் வைக்க மாட்டோம் என்று இதன் மூலம் உறுதி கூறுகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

18 மா.செ.க்கள்

18 மா.செ.க்கள்

இந்த உறுதிமொழிப் பத்திரத்திலே கையொப்பமிட்டு கொடுத்து விட்டுத் தான் இந்த 18 பேரும் மாவட்டக் கழகத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களை எதிர்த்து சில மாவட்டங்களில் வேறு சிலர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஒரு சிலரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை.

இதற்குத்தான் உறுதிமொழி

இதற்குத்தான் உறுதிமொழி

ஆனால் கழகத்தைப் பொறுத்தவரையில் முன்பு அமைச்சர்களாக இருந்தவர்களையோ, மாவட்டக் கழகச் செயலாளர்களையோ மீண்டும் நிறுத்த வேண்டுமென்று எண்ணாமல், அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவார்களானால் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ வரவும் எண்ணக் கூடாது என்பதற்காகத் தான் அவர்களிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.

மா. செ. தேர்தல்கள்

மா. செ. தேர்தல்கள்

இந்த மாவட்ட செயலாளர் தேர்தல்களில் எந்தவிதமான ஜனநாயக விரோதச் செயல்களுக்கும் இடம் தராமல், வரும் ஐந்தாண்டு காலத்திற்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் கழகப் பணியினை யார் தலைமையிலே ஆற்றுவது என்பதற்காகத் தான் நடைபெறுகிறது என்பதை மனதிலே கொண்டு நடக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

மமதை கொள்ளாதீர்..

மமதை கொள்ளாதீர்..

வெற்றி பெறுகிறவர்கள், தாங்கள் ஏதோ யாரையோ தோற்கடித்து விட்டோம் என்ற எண்ணம் கொள்ளாமல், வெற்றி வாய்ப்பினை இழந்தவர்களும், கழக உடன்பிறப்பு தான், நாளை அவரோடு இணைந்து தான் நம்முடைய பொது எதிரியை சட்டமன்றத் தேர்தல்களில், நாடாளுமன்றத் தேர்தல்களில் சந்திக்க வேண்டுமென்ற மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டு எங்களைச் சந்திக்க வரவேண்டுமே தவிர, "என்னை எதிர்த்தா போட்டியிட்டாய்? உன்னை இருக்குமிடம் தெரியாமல் ஆக்கி விடுகிறேன் பார்!" என்றெல்லாம் மமதை கொள்ளாமல், அண்ணா கற்பித்துள்ள அன்பு வழியில், அற வழியில், அமைதி வழியில் நடந்து கொள்ள வேண்டும். வெற்றி வாய்ப்பை இழந்த உடன்பிறப்புகளும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களோடு இணைந்து பணியாற்றி, உழைப்பினால் கழகத் தோழர்களின் உள்ளங்களில் குடியேறி, அடுத்த தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டுமே தவிர, "என்னை எதிர்த்து வெற்றி பெற்று விட்டாயா, பார்க்கிறேன் ஒரு கை" என்று எண்ணுவது நல்லதல்ல.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
In a significant move to give more chances to new faces and to curb concentration of power among the old guards, DMK today got an undertaking from 18 top partymen that they would not seek tickets for Assembly or Parliament polls if they were elected as district secretaries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X