For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் முடிவுக்கு வருமா மா.செக்கள் எனும் 'குறுநில மன்னர்களின்' சாம்ராஜ்யம்?!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக மாவட்டங்களில் சாம்ராஜ்யம் நடத்தி வரும் மாவட்ட செயலாளர்கள் என்ற குறுநில மன்னர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் திமுக வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. தேர்தலில் ஒரு இடத்தில் கூட திமுக வெல்லவில்லை.

இதற்கு முன்னர் திமுக 2 முறை இப்படி ஒரு இடத்தில் வெல்லாத நிலையையும் லோக்சபா தேர்தலில் எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் அப்போது அரசியல் சூழ்நிலைகளால் அந்த தோல்வியைத் தழுவ நேரிட்டது என்பதை திமுகவினர் உணருவார்கள்.

திமுக தோல்விக்கு காரணம் என்ன?

திமுக தோல்விக்கு காரணம் என்ன?

இப்போதைய தோல்விக்கு அப்படி ஒன்றும் மிகப் பெரிய அரசியல் காரணம் எதுவும் இல்லை.. நாடு முழுவதும் வீசியடித்த மோடி அலை தமிழகத்தில் எட்டிப் பார்க்க முடியவில்லை. அதிமுகவுக்கு எதிர்ப்பான வாக்குகள் எளிதாகப் பிரிந்து போனதுதான் பிரதான காரணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

வாக்காளர் மனநிலையும் இதுதான்..

வாக்காளர் மனநிலையும் இதுதான்..

மேலும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு ஏற்படும் என்பதும், தேவைப்பட்டால் மோடி அரசுக்கு ஜெயலலிதா ஆதரவு தருவார், இதன்மூலம் தமிழகத்துக்கு நன்மைகள் கிடைக்கலாம் என்பதும் மக்களின் கருத்தாக இருந்தது. அதே நேரத்தில் திமுக வென்றால் மத்தியில் யாரை ஆதரிக்கும், திமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியாததால் திமுகவை மக்கள் நிராகரித்ததாகவும் கருதப்படுகிறது.

மாற்று அணியால்...

மாற்று அணியால்...

அதே நேரத்தில் அதிமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்கும் அளவுக்கு பாரதிய ஜனதா தலைமையில் வலுவான ஒரு மாற்று அணி உருவானது. அப்படி ஒரு மாற்று ஒரு அணியை திமுகவால் ஏன் உருவாக்க முடியவில்லை?.

அழகிரிதான் உடைத்தாரா?

அழகிரிதான் உடைத்தாரா?

உடனேயே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள், அழகாக தேமுதிக எங்களுடன் வந்திருக்கும்.. ஆனால் அழகிரிதான் கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டார் என்று குமுறலை கொட்டுவார்கள்.. உண்மை அதுதானா? என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் மனசாட்சிக்குதான் தெரியும்.

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை ..

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை ..

ஏனெனில் தேமுதிக என்ற தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியுடன் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்திய திமுக பெருந்தலைவர் யார்? பேராசிரியர் அன்பழகனா? ஆர்க்காடு வீராசாமியா? துரைமுருகனா? அல்லது "தளபதி" ஸ்டாலினா? இல்லையே. யார் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது? மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன்தானே பேச்சுவார்த்தை நடத்தினார்.

சபரீசன் முதுபெரும் தலைவரா?

சபரீசன் முதுபெரும் தலைவரா?

சபரீசன் என்ன திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரா? "பேரங்கள்" பேசுவதாலேயே கூட்டணியில் ஒரு கட்சியை வெல்ல முடியும்.. தேர்தலில் வாக்குகளை அள்ளிவிட முடியும் என்று கணக்குப் போட்ட ஸ்டாலினின் முடிவு அபத்தத்தின் உச்சம் என்பதா? இம்மெச்சூரிட்டியின் மொத்த வடிவம் என்பதா? என்கின்றனர் திமுகவினர்..

விஜயகாந்த் வைத்த நிபந்தனை என்ன?

விஜயகாந்த் வைத்த நிபந்தனை என்ன?

வெளிப்படையாக சொல்வதானால் "பேரங்களுக்கு" அப்பால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்வைத்த முதன்மை நிபந்தனை "ஸ்டாலினை பேச சொல்லுங்கள்" அல்லது "கலைஞரை பேச சொல்லுங்கள்" என்பதுதானே.. பேரங்களுக்கு அப்பால் விஜயகாந்த் முன்வைத்த இந்த எளிதான நிபந்தனைகளைக் கூட ஸ்டாலின் ஏற்க மறுத்தாரே.. என்று அங்கலாய்க்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.

மா.செ.க்கள் மீதான நம்பிக்கை

மா.செ.க்கள் மீதான நம்பிக்கை

ஸ்டாலின் இப்படி மெத்தனமாக அல்லது முழுநம்பிக்கையோடு இருந்ததற்கு காரணமே எப்படியும் நம்ம மாவட்ட செயலர்கள் நம்மை வெல்ல வைத்துவிடுவார்கள் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கை மட்டும்தான் என்பதை அடித்துச் சொல்ல முடியும்.

உண்மைதான் மு.க.ஸ்டாலினின் அபரிதமான நம்பிக்கை யதார்த்தமானதுதான்.. ஸ்டாலினைத்தான் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மைதான்..

உண்மை நிலமை என்ன?

உண்மை நிலமை என்ன?

அதே நேரத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த மாவட்டச் செயலர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் அத்தனை லட்சோப லட்சம் தொண்டர்களும் நம் பக்கம்தானா நிற்கிறார்களா? என்ற கள உண்மையை ஸ்டாலின் புரிந்து கொண்டாரா என்பது கேள்விக்குறிதான்..

ஒரு மா.செ.வை மீறி கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு இம்மி அளவுக்கு கூட கட்சியில் முன்னேற முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் அத்தனை லட்சம் தொண்டர்களும் எப்படி மனமுவந்து தேர்தல் பணியாற்றுவார்கள்? என்பதை ஸ்டாலின் உணர்ந்ததாகவும் தெரியவில்லை.

தொண்டர்கள் முன் உள்ள வாய்ப்புகள்

தொண்டர்கள் முன் உள்ள வாய்ப்புகள்

அந்த லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு முன்பு இருக்கும் முதல் வாய்ப்பு தேர்தலில் பணியாற்றுவது போல் பாசாங்கு செய்வது.. அல்லது அழகிரி அணிக்கு போய்விடுவது என்ற இரண்டைத்தவிர கட்சி வெல்ல வேண்டும் என்ற முனைப்பு எப்படி முளைவிடும்? என்பதுதான் திமுகவினர் கேள்வி.

மா.செ.க்களின் மெத்தனம்

மா.செ.க்களின் மெத்தனம்

திமுகவைப் பொறுத்தவரையில் தோற்றாலும் வென்றாலும் நம் பதவிக்கு வேட்டு வராது என்ற திடநம்பிக்கையில்தான் இதுநாள் வரை இருக்கின்றனர் மாவட்ட செயலாளர்கள்.. அதனாலேயே கட்சி வென்றுதான் விசுவாசத்தைக் காட்டியாக வேண்டிய தேவையெல்லாம் திமுக மாவட்ட செயலாளர்களுக்கு இருப்பதும் இல்லை.

ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரையில் வென்றாலும் தோற்றாலும் எந்த நிமிடத்திலும் வேட்டு காத்திருக்கிறது என்ற வெலவெலப்பு இருக்கிறது என்பதையும் திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறுநில சாம்ராஜ்யங்கள்..

குறுநில சாம்ராஜ்யங்கள்..

திமுகவின் படுதோல்விக்கு நிச்சயமாக பலமில்லா கூட்டணி, வாக்கு சிதறல் போன்ற அற்ப காரணங்களுக்கு அப்பால் மாவட்ட செயலாளர்கள் என்ற ஒற்றை மனிதர்களின் குறுநில சாம்ராஜ்யங்கள்தான் காரணம் என்பதை அடித்துச் சொல்ல முடியும்.

அருளாசிகள்

அருளாசிகள்

கட்சியில் ஒன்றியத்திலும் பேரூரிலும் இருக்கிற கடைகோடித் தொண்டன் கட்சிப் பணியை செய்வதற்குப் புறப்படுவதற்கு பதிலாக "அண்ணன்" "அமைச்சர்" "சிங்கம்" எனப்படுகிற மாவட்ட செயலரின் கண்ணில் பட்டுவிடுவோமா இல்லையா? என வீட்டு வாசலில் தேவுடு காத்திருப்பதும், இந்த மாவட்ட செயலர்கள் ஏதோ மன்னாதி மன்னர்கள் போலவும் இவர்கள் வீட்டு பிள்ளைகள் ஏதோ இளவரசர்கள் போலவும் அப்படியே வெளியே வந்து "அருளாசி"புரிந்துவிட்டு போவதும்தானே இன்றளவும் திமுகவின் மாவட்டங்கள் நிலை.. இதை எப்படி மறைக்க முடியும்? என்ற கேள்வியையும் திமுக உடன்பிறப்புகள் எழுப்புகின்றனர்.

அத்தனை குமுறல்கள்..

அத்தனை குமுறல்கள்..

இதனால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திமுக தலைமைக்கு மாவட்ட செயலர்களை மாற்றியே தீர வேண்டும் என்று அத்தனை குமுறல் கடிதங்கள்.. கண்ணீர் கதறல்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. .இந்த கதறல்கள் ஸ்டாலின் காதுகளுக்குப் போனாலும் அவர் கண்டுகொள்வதாக இல்லை..

ஸ்டாலினின் உள்ளூர உதறல்..

ஸ்டாலினின் உள்ளூர உதறல்..

ஏனெனில் இந்த மாவட்ட செயலர்களை மாற்றிவிட்டு உண்மையான செல்வாக்குள்ள கட்சித் தொண்டர்களை மதிப்பவர்களைப் போட்டுவிட்டால் எங்கே தமது ஆதரவு "எண்ணிக்கை பலம்" குறைந்துவிடுமோ என்ற உள்ளூர உதறல்தான் அவருக்கு இருக்கிறது.

என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்?

என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்?

ஸ்டாலின் முன் இருப்பது இப்போது அக்னி பரீட்சைதான்.. தமது கட்டுப்பாட்டில் கட்சி இருக்க வேண்டும்! தாம் ஒரு கட்சித் தலைவராக இருக்க வேண்டும்.. அதனால் மாவட்ட செயலர்களை மாற்றக் கூடாது என முடிவு செய்தால் ஏழேழு ஜென்மத்துக்கும் திமுக வெல்லவே முடியாது என்ற யதார்த்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுகவுக்காக நான்.. திமுகவின் எதிர்காலத்துக்காக நான்.. திமுக வெல்ல வேண்டியதுதான் என் லட்சியம் என்பதற்காக குறுநில மன்னர்களை விரட்டியடித்து கட்சியின் தொண்டர்களை மதித்து அவர்கள் சொல்பவர்களை மா.செ ஆக்கினால் மட்டுமே வரும் சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களை திமுக பெற முடியும்.

சட்டசபை தேர்தலில்..

சட்டசபை தேர்தலில்..

இல்லையெனில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையான 10-12 இடங்களில் திமுக வெல்வதற்கே பெரும்பாடு பட்டு கட்சியை இயக்கமாக நடத்த வேண்டிய நிலைமைதான் உருவாகும் என்ற உண்மை தொண்டர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் திமுகவினர்.

விதிவிலக்கு மா.செ.க்கள்

விதிவிலக்கு மா.செ.க்கள்

இதில் சில யதார்த்த நிலை புரிந்த, கட்சி நலனை மட்டுமே நினைக்கும் மா.செக்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். தென் சென்னை மாவட்ட திமுக தலைவர் ஜெ.அன்பழகன் மாதிரியானவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவும் கூட தயார் என்று தலைமையிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் மற்ற மா.செக்களையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், நானும் விலகுகிறேன், கட்சித் தேர்தல் நடத்தி மா.செக்களை தேர்வு செய்வோம். தொண்டர் ஆதரவு இருப்பவர்கள் பதவிக்கு வரட்டும் என்று ஸ்டாலினிடமும் கருணாநிதியிடமும் நேரடியாக கூறியிருக்கிறார்கள்.

அதோகதியாகப் போகும் திமுக

அதோகதியாகப் போகும் திமுக

ஆனால், இவர்கள் போட்டியிட்டால் மீண்டும் வென்றுவிட முடியும். காரணம், தொண்டர்கள் ஆதரவு. ஆனால், தொண்டர்கள் ஆதரவே இல்லாமல் வெறும் ஸ்டாலினின் ஆதரவு மட்டும் கொண்ட தலைகள் எப்படி மீண்டும் வெல்வார்கள். இதனால் தான் பதவி விலக அவர்கள் தயாராக இல்லை. சட்டசபைத் தேர்தலில் எப்படியும் ஜெயிச்சுறலாம் என்று ஸ்டாலினுக்கு பொய்க் கணக்கு கூறி வருகின்றனர். இவர்களை நம்பினால் திமுக கதி அதோ கதி தான் ஆகும்.

மா.செ.க்களின் வலதுகர கவுன்சிலர்கள்..

மா.செ.க்களின் வலதுகர கவுன்சிலர்கள்..

இன்னொரு விஷயமும் உண்டு. திமுக ஆட்சியை இழக்க முக்கியக் காரணம் கவுன்சிலர்கள் எனப்படும் கமிஷன் பார்ட்டிகள் தான். இவர்களது அட்டூழியத்தையும் டயோடா பார்ச்சூனர் படாடோபங்களையும் பார்த்த மக்களும் திமுக தொண்டர்களும் கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பினர். இவர்களது ஆட்டத்துக்கு பக்க பலமாக இருந்தவர்கள் மா.செக்கள் தான்.

மா.செக்களுக்கு முடிவு அவசியம்

மா.செக்களுக்கு முடிவு அவசியம்

இதனால் மக்களிடம் இருந்து விலகி நிற்கும் மாவட்டச் செயலாளர்களை வீட்டுக்கு அனுப்பினால் திமுக தப்பிக்கும். அனுப்பாவிட்டால் ஸ்டாலினுக்கு துதிபாடிகள் மட்டுமே மிஞ்சுவார்.

English summary
In an attempt to rejuvenate the party after what is arguably the worst ever debacle in the Lok Sabha elections, the DMK high command is likely to replace district secretaries and other senior functionaries soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X