For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்சேவுக்கு வலிக்கக் கூடாது என்று நினைக்கிறார் மன்மோகன்- ராமதாஸ் கடும் தாக்கு

Google Oneindia Tamil News

Dr Ramadoss slams Manmohan Singh for his letter to Rajapakse
சென்னை: காமன்வெல்த் மாநாட்டுக்குத் தான் போகவில்லை என்று முடிவெடுத்து விட்டு, ராஜபக்சேவுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார் பிரதமர். இதைப் பார்க்கும்போது ராஜபக்சே உள்ளிட்ட இலங்கைக் கொலையாளிகளுக்கு வலிக்கக் கூடாது என்பதே அவரது எண்ணம் என்று புரிகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்து உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்சே, இதற்கான சர்வதேச நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் காமன்வெல்த் மாநாட்டை தமது நாட்டில் நடத்தி, அதன் தலைவராக தம்மை முடிசூட்டிக் கொள்ளத் துடிக்கிறார்.

இதைத் தடுக்கவே காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் வலியுறுத்தினர். இதன் மூலம் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வைக்க முடியும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

ஆனால், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்பது தான் தமிழர்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை என்பது போன்றும், பிரதமர் பங்கேற்காவிட்டால் ஈழத்தமிழர்களின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்பது போன்றும் ஒரு தோற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது.

இப்போது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டவுடன், அது ஆறுதல் அளிப்பதாக ஒரு பிரிவினரும், தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று இன்னொரு பிரிவினரும் கூறி கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாததால் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டு விடப்போவதில்லை. அதுமட்டுமின்றி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த 10 காமன்வெல்த் மாநாடுகளில் ஐந்தில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை.

அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர்களோ அல்லது குடியரசுத் துணைத் தலைவரோ தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் தான் இப்போதும் பிரதமருக்கு மாற்றாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்கிறார். இதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்னையில் இலங்கைக்கு எந்த நெருக்கடியையும் நம்மால் தர முடியாது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களைக் கண்டித்து காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் என்று பிரதமர் அறிவித்திருந்தாலாவது அது இலங்கைக்கு குறைந்த பட்ச நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால், தமக்கு பதில் வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது மட்டுமின்றி, அம்மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? என்பதை விளக்கி அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமர் கடிதம் எழுதியிருக்கிறார். தமிழர்கள் என்ன தான் வேதனையில் துடித்தாலும், இந்தியாவின் நடவடிக்கைகள் இலங்கையின் கொலைகாரர்களுக்கு வலிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் பிரதமரின் நோக்கமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

இன்னொரு புறம் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததால் இலங்கையுடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இலங்கையுடனான உறவையே முறித்துக் கொள்ள வேண்டும் என தமிழர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கையின் உறவுக்காக சல்மான் குர்ஷித் உருகுகிறார்.

இவர்களைப் போன்றவர்கள் இலங்கையிடம் வலியுறுத்தி தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பதும் இலவு பழுக்கும் என்று காத்திருப்பதும் ஒன்று தான்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மாறாக காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்திருப்பதன் மூலம் மத்திய அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறது. இதை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்; சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று சாடியுள்ளார் ராமதாஸ்.

English summary
PMK founder Dr Ramadoss has slammed PM Manmohan Singh for his letter to Rajapakse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X