For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்டணக் கொள்ளையைத் தடுங்கள்.. சிபிஎஸ்இ வழியில் செயல்படுங்கள்.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடந்து வரும் பள்ளிக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க சிபிஎஸ்இ வழியில் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்தின் தனிப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது கல்விக் கட்டணக் கொள்ளை தான். மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியாக இருந்தாலும், மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியாக இருந்தாலும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

Dr Ramadoss urges TN Govt to follow CBSE

சாதாரணமான பள்ளிகளில் கல்விக் கட்டணமாக ரூ.50 ஆயிரமும், நன்கொடையாக சில லட்சங்களும் வசூலிக்கப்படும் நிலையில், சில புகழ்பெற்ற பள்ளிகளில் கல்விக் கட்டணமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இது தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்காக தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அதிரடியான நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது. பள்ளிக்கூடங்கள் சமுதாய சேவையாக நடத்தப்பட வேண்டுமே தவிர வணிக நிறுவனங்களாக நடத்தப்படக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன் தொடங்கும் சி.பி.எஸ்.இ அமைப்பின் செய்திக்குறிப்பில், ஆசிரியர்களுக்கான ஊதியம், பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட செலவுகளுக்காக மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மாணவர்களை சேர்க்க நேர்காணல் நடத்தக் கூடாது, நன்கொடை வசூலிக்கக்கூடாது; மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டத்தை மட்டுமே சி.பி.எஸ்.இ பள்ளிகளும் வசூலிக்க வேண்டும். கல்விக் கட்டணத்தில் பள்ளிச் செலவுகளை மேற்கொண்டது போக மீதமுள்ள நிதியை வேறு எந்த பணிகளுக்கும் திருப்பி விடக்கூடாது.

பள்ளி வளர்ச்சிக்காக மட்டுமே செலவிட வேண்டும்; ஆண்டு தோறும் வரவு செலவுக் கணக்குகளை சி.பி.எஸ்.இ அமைப்பின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணத்தை கல்வியாண்டின் மத்தியில் அதிகரிக்கக்கூடாது; கல்விக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

விதிகளை மீறி மாணவர்களிடம் நேர்காணல் அல்லது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் அதற்காக முதல் தடவை ரூ.25 ஆயிரமும், அடுத்தடுத்த தடவைகளில் ரூ.50,000 தண்டமாக வசூலிக்கப்படும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கப்பட்டால், அதைவிட 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ எச்சரித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க சி.பி.எஸ்.இ நிர்வாகம் விடுத்துள்ள எச்சரிக்கை போன்று மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்.

ஏதேனும் பள்ளிகளில் விதிமீறலோ, முறைகேடோ நடந்திருந்தால் அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது அப்பள்ளிகளை அரசுடமையாக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has urged TN Govt to follow CBSE to contain the school fees issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X