For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார் மோதி குட்டியானை பலி... காரை அடித்து நொறுக்கி... கண்ணீர் விட்டுப் பிளிறிய யானைக் கூட்டம்!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, கார் மோதி குட்டியானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற யானைகள் விபத்து ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்பு காட்டில் ஏராளமான யானைகள் உள்ளன. எனவே, அவ்வப்போது ஓசூர் -கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படும்.

Elephant calf fatally knocked down

இந்நிலையில், குட்டிகளுடன் சுமார் 20 யானைகள் கொண்ட கூட்டம் சூளகிரி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை இரவு நேரத்தில் கடக்க முயற்சித்துள்ளன. அப்போது ஓசூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்த விவேக் என்பவர் ஓட்டிவந்த கார், எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற 2 வயது மதிக்கத்தக்க குட்டியானை மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்தக் குட்டியானை, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற யானைகள் சாலையின் நடுவே நின்று ஆக்ரோஷமாக பிளிறியுள்ளன. மேலும், விபத்து ஏற்படுத்திய காரையும் அவை தாக்கத் தொடங்கின. யானைகள் காரை அடித்து நொறுக்கிய போதும், விவேக் வெளியில் வராமல் உள்ளேயே இருந்துள்ளார்.

இதற்கிடையே, சாலையின் நடுவில் கிடந்த குட்டி யானையை, அதன் தாய் யானை மற்றும் அருகில் இருந்த மற்ற யானைகள் சேர்ந்து, தும்பிக்கையால் இழுத்து, சாலையோரம் இருந்த 5 அடி ஆழ பள்ளத்திற்கு கொண்டு வந்தன.

சுமார் 20 யானைகள் மறித்து நின்றதால், வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தக் காட்சிகளை சாலையில் நின்ற வாகன ஓட்டிகளும், பஸ்களில் பயணம் செய்த பயணிகளும் நேரில் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர். அதனைத் தொடர்ந்து படுகாயத்துடன் காருக்குள் இருந்த விவேக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், ராட்சத கிரேன் மூலமாக குட்டி யானையின் உடலை மீட்டு பேரண்டப்பள்ளியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

குட்டி யானையின் மீது மோதியதிலும், யானைகள் அடித்து நொறுக்கியதிலும் சுக்குநூறாக நொறுங்கிய காரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து 2 மணி நேரத்துக்கு பிறகு அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

கண்ணீர் விட்ட யானைகள்...

இந்நிலையில், கோபசந்திரம் காட்டில் இருந்த தாய் யானை, தனது குட்டி இறந்ததால் அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டே இருந்ததை காணமுடிந்தது. பின்னர், தாய் யானையும், அதனுடன் வந்த மற்ற யானைகளும் சேர்ந்து மொத்தம் 20 யானைகள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் விபத்து நடந்த இடத்திற்கு வந்தன. அங்கு குட்டியானை முதலில் இருந்த இடத்தை தாய் யானை சுற்றி, சுற்றி வந்தது.

பின்னர் யானைகள் நீண்ட நேரமாக அந்த இடத்தில் கண்ணீர் விட்டபடி பிளிறின. அப்போது அங்கு வனத்துறையினர் இருந்ததால் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தினார்கள். சுமார் ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த யானைகள் பின்னர் அங்கிருந்து காட்டை நோக்கி சென்றன.

தீவிரகண்காணிப்பு:

கார் மோதி பலியான குட்டியானையின் உடல், கோபசந்திரம் காட்டில் நேற்று கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டது. தங்களுடன் வந்த குட்டி யானை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி பலியானதால், மற்ற யானைகள் ஆக்ரோஷமாக இருப்பதாகவும், அவை இரவு நேரத்தில் மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு வரக்கூடும் என்பதாலும் அப்பகுதியில் வனத்துறையினர் மிகவும் உஷார் நிலையில் கண்காணித்து வருகின்றனர்.

English summary
An elephant calf was fatally hit by a speeding car along Gopalchadhiram highway in Shoolagiri on Tuesday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X