For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எவ்வளவு பட்டாலும் ஜெயலலிதா திருந்தியபாடில்லை.. விஜயகாந்த் பேச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: ஆண்டாண்டு காலம் அழுதாலும், மாண்டார் மீண்டதுண்டோ என்பதைப்போல, எவ்வளவுதான் பட்டாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா திருந்தியபாடில்லை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

லஞ்சம், ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை பெருகியுள்ள மாநிலங் களின் வரிசைப்பட்டியலில் தமிழகமும் இருக்கிறதென ஒரு ஆய்வு கூறுகிறது. தன்னலமின்றி மக்களுக்காகவே பாடுபடும் தலைவர்கள் இருந்த தமிழ்நாடு, தற்போது முற்றிலும் மாறி, லஞ்சம், ஊழல் காரணமாக நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி, இறங்கு பவர்களையும், சிறைத்தண்டனை பெற்றவர்களையும் நாம் பார்த்துக் கொண்டி ருக்கிறோம்.

Establish Lok Ayuktha court in Tamil Nadu, says Vijayakanth

பீகார், ஒடிஸா மாநில அரசுகள் இதுபோன்ற ஊழல்களை ஒழிக்கவேண்டும் என்பதற்காக, அரசு அதிகாரிகள், எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சம்பந்தபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் கொண்டுவந்தது. அந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பீகார், ஒடிஸா மாநிலங்கள் கொண்டுவந்துள்ள சட்டம் சரியானதென்றும், ஊழல் சமுதாய முன்னேற்றத்தை தடுக்கிறது, ஊழல் என்பது பொருளாதார பயங்கரவாதம், ஊழலால் ஏற்படும் சமூக பேரழிவுகளை தடுத்து நிறுத்த, மாநில அரசுகள் இதுபோன்ற சிறப்பு சட்டங்களை நிறைவேற்றி கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றுகூறி, உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அண்மையில் வழங்கியது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அப்பாற்பட்ட நேர்மையானவர்கள் அனைவருமே வரவேற்கிறார்கள். தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இந்த சிறப்பு சட்டத்தையும், தீர்ப்பையும் வரவேற்றது. அதோடு தமிழகத்திலும் இதுபோன்று சட்டம் இயற்றப்படுமா? என்று சாதாரண, சாமான்ய மக்கள் எதிர்பார்ப்பதைப் போலவே, தேமுதிகவும் எதிர்பார்த்து கொண்டுள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

ஆண்டாண்டு காலம் அழுதாலும், மாண்டார் மீண்டதுண்டோ என்பதைப்போல, எவ்வளவுதான் பட்டாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா திருந்தியபாடில்லை. எனவேதான் தமிழகத்தில் வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க, ஊழலற்ற நிர்வாகத்தை தமிழக மக்களுக்கு உறுதி செய்திடும் வகையில், லோக் ஆயுக்தா நீதிமன்றத்தை உடனடியாக அமைக்கவேண்டும். அதற்கான முன்முயற்சியை போர்க்கால அடிப்படையில் எடுத்திடவேண்டுமென்று வலியுறுத்தி தமிழக தலைமை செயலாளருக்கும், சட்டத்துறை செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

அக்கடிதத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ள, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை லஞ்சம், ஊழல், சுரண்டல் போன்ற தடைகள் ஏதுமின்றி, அதில் ஈடுபடுகின்ற முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கும் விதத்திலும், எச்சார்புமற்ற சுயேட்சையான, அதிகாரமிக்க அமைப்பாக லோக் ஆயுக்தா நீதிமன்றம் தமிழகத்தில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் ஏறத்தாழ 22 மாநிலங்களில் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அல்லல்படுகின்ற மக்கள் குறைகளை கேட்டு, அவற்றை தீர்க்கும் வண்ணம் இந்த லோக் ஆயுக்தா அமைப்பு உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டும்.

லோக் ஆயுக்தா அமைப்பிற்கு அரசியல் சார்பற்ற, சட்ட நிபுணத்துவம் பெற்ற, சமூக அக்கறை கொண்ட, கடமை உணர்வுமிக்க, நீதிநெறிமுறையின் மீது மதிப்புகொண்ட ஒருவரை, தலைமை பொறுப்பில் அமர்த்திடவேண்டும். மேலும் அவருக்கு வருகின்ற புகார்களின் அடிப்படையில், அவர் யாரை வேண்டுமானாலும் புலனாய்வு செய்யவும், தேவைப்பட்டால் அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும், அதனடிப்படையில் நியாயமான தீர்வுகளை கண்டிடவும் அவருக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன். என் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அது இன்றைய மக்களின் பிரதிபலிப்பு, அதிலும் குறிப்பாக இளைஞர்களின் மனநிலையின் பிரதிபலிப்பு என்பதையும் உணர்ந்துகொண்டு, தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கவேண்டும் என்கின்ற அக்கறையும், ஆர்வமும் உண்மையாகவே இருக்குமேயானால், இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே அதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். அப்படி எடுக்கும்பட்சத்தில் தேமுதிக முழுமனதோடு அதை ஆதரிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, தமிழகத்தின் நலனுக்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

English summary
DMDK leader Vijayakanth has urged the govt of Tamil Nadu to establish the Lok Ayuktha court in Tamil Nadu immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X