For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகளின் குரல் வளையை நெறிக்கிறது ஜெயலலிதா அரசு: இளங்கோவன் குற்றச்சாட்டு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: விவசாயிகளின் குரல் வளையை நெறிக்கிற அரசாக ஜெயலலிதா அரசு செயல்பட்டு வருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

'மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன் விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மத்திய காங்கிரஸ் அரசு விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கிற வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நில கையகப்படுத்துதல் சட்டத்திற்கு மாற்றாக விவசாயிகளின் உரிமைகளை பறிக்கிற வகையில் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இதற்கு பலமான எதிர்ப்பு வந்ததும், அவசர சட்டத்தை ரத்து செய்தது.

EVKS Allegation on jayalalithaa

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வந்தன. இதனால் 2003-04 இல் ரூ.83 ஆயிரம் கோடியாக இருந்த விவசாயிகள் கடன் 2014-15 இல் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

விவசாயிகள் கடன் வழங்குவதில் பல்வேறு கெடுபிடிகள் சமீபகாலமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை சீற்றம், வறட்சி போன்ற காரணங்களால் விவசாயிகள் பல்வேறு நஷ்டங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் வங்கியில் வாங்கிய கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதை மனிதாபிமான உணர்வோடு அணுகாத தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவை காவல்துறை மற்றும் குண்டர்கள் துணையோடு விவசாயிகளுடைய டிராக்டர், பம்பு செட்டுகள், உடமைகளை ஜப்தி செய்கிற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகின்றன.

கடுமையான கடன் சுமையின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள் மார்ச் மாதத்தில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த பாலன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகர், உசிலம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடப்பது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத தமிழக அரசின் போக்கின் காரணமாக இத்தகைய தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் 2432 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் நம்மை கவலையில் ஆழ்த்துகிறது.

விவசாயிகளின் குரல் வளையை நெறிக்கிற அரசாக ஜெயலலிதா அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது குறைகளை யாரிடம் சொல்வது, எப்படி தீர்வு காண்பது என்று எதுவுமே தெரியாமல் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவதற்குக் கூட தமிழக முதல்வர் ஜெயலலிதா தயாராக இல்லை என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தராத காரணத்தால் விவசாயிகள் தற்கொலை நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதன்மையிடத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் அந்த மாநிலத்தில் மட்டும் 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து கூறிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டி, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பேஷனாக மாறிவிட்டது, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு மகாராஷ்டிர மாநிலம் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கினால் இன்னொரு மாநிலம் போட்டி போட்டுக் கொண்டு ரூ.7 லட்சம் வழங்குகிறது. இந்த காரணத்தினாலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது என்று ஆணவத்தோடு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்தவர் என்பதை விவசாயிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

விவசாய கடன் வசூல், நகை ஏலம், டிராக்டர் ஜப்தி ஆகியவற்றை உடனடியாக நிறுத்தி வைத்து விவசாயிகள் தற்கொலை சாவை தடுக்குமாறு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி 5.4.2016 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தும்படி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் பி.கே. தெய்வசிகாமணி அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பில் உள்ள நியாயத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு தலைவர் பவன்குமார், சிவகாசியில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் துணைத் தலைவர் பெருமாள்சாமி ஆகியோர் பங்கேற்பார்கள். இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu Congress Committee (TNCC) president EVKS Elangovan Allegation on tn cm jayalalithaa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X