
டெல்டா மாவட்டத்தில் தொடரும் சோகம்.. பயிர்கள் கருகியதால் விவசாயி மரணம்
நாகப்பட்டினம்: காவிரியில் தண்ணீர் கிடைக்காமலும் மழை பொழியாமலும் பயிர்கள் கருகி வருவதைக் கண்டு மனம் உடைந்திருந்த விவசாயி, பயிருக்கான காப்பீட்டு தொகையையும் கட்ட முடியாமல் போனதால் மன நெருக்கடி அதிகமாகி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரன். விவசாயியான இவர் 8 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்திருந்தார். ஆனால், போதிய மழையில்லாமல் பயிர்கள் வாடத் தொடங்கின. காவிரியில் இருந்தும் தண்ணீர் வராததால் பயிர் கருகி போயிற்று.

இந்நிலையில், பயிர் காப்பீட்டு தொகையை கட்ட இந்த மாதம் 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், காப்பீட்டுத் தொகையை கட்ட வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பை வேளாண்துறை அதிகாரிகள் கீழையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆட்டோக்களில் சென்று ஒலிப்பெருக்கி மூலம் விளம்பரம் செய்து வந்தனர். இந்தப் பணத்தை எப்படிக் கட்டுவது என்று தெரியாமல் விழித்த ராஜகுமாரன் மன உலைச்சலுக்கு ஆளானார்.
இதனையடுத்து, காப்பீட்டைத் கட்டுவதற்கான தொகையை அவருடைய உறவினர்களிடம் ராஜகுமாரன் கேட்டுள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை அடுத்து மக்களிடம் பணப் புழக்கம் இல்லாததால் யாராலும் ராஜகுமாரனுக்கு உதவ முடியவில்லை. இதனால் மேலும், மன உலைச்சலுக்கு ஆளான விவசாயி ராஜகுமாரன் வெறும் கையோடு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்தவர்களிடம் நெஞ்சுவலிக்கிறது என்று சொல்லிவிட்டு படுக்கையில் படுத்திருக்கிறார். படுத்தவர் மீண்டும் எழவில்லை. நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காத ராஜகுமாரன் மாரடைப்பால் மரணமடைந்தது தெரிய வந்தது.
கடும் மன அழுத்தத்தின் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி மரணம் அடைந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜகுமாரின் மரணத்தை அடுத்து, தமிழகத்தில் பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகளின் மரண எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.