For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாக்கை குறை.. ஷாக்கை குறை.. சீக்கிரம் சாகாம இருக்க சில எளிய டிப்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்த உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஆசை. சிலருக்கு பணத்து மேல ஆசை, சிலருக்கு பதவி மேல ஆசை. ஆனா எல்லாருக்கும் பொதுவான ஒரு ஆசை உண்டுன்னா.. அது சீக்கிரம் சாகாம, நீண்ட காலம் இளமையா இருக்கணும்ன்றதுதான்.

எம்ஜிஆர் தங்க பஸ்பம் சாப்பிட்டாரு, அதனாலதான் சும்மா தகதகன்னு மின்னுனாரு மாதிரி கதைகள் எல்லா காலத்திலேயும், எல்லா ஊர்களிலும் உண்டு. இளமை குறையாம இருக்கவும், நீண்ட ஆயுளோட இருக்கவும் எத்தனையோ வழிமுறைகளை எத்தனையோ பேர் சொல்லி வெச்சிட்டு போயிருக்காங்க. நம்ம ஊர் சித்தர்கள் இதில் எக்ஸ்பர்ட்டுகள். ஆனால் அவர்கள் எழுதி வெச்சது எல்லாம் மறைபொருளா இருக்குறதால, அதன் உண்மையான அர்த்தம் என்னன்னு யாருக்கும் இப்போ முழுசா தெரியாது.

இது தவிர விஞ்ஞான ரீதியா நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இதுதொடர்பா வெளியாகிட்டே இருக்குது. அது எல்லாத்தையும் படிச்சு முடிக்கிறதுக்குள்ள நம்ம கதை முடிஞ்சிடும். இதுக்கு அப்ப என்னதான் வழி. வழி சொல்றதுக்கு முன்னாடி ஒரு கதை சொல்றேன், கேளுங்க. ஏன்னா, இந்த கதையை கேட்டாதான் நான் சொல்லப் போற வழியோட அருமை உங்களுக்குப் புரியும்.

how to live long

ஒரு ஊர்ல ஒரு தாத்தா இருந்தாராம். அவருக்கு வயசு 101. செஞ்சுரி போட்டும் அவுட் ஆகாத அந்த அசகாய தாத்தாவை இன்டர்வ்யூ எடுக்கிறதுக்காக ஒரு ரிப்போர்ட்டர் அவர் வீட்டுக்கு வந்தாராம். தாத்தா, நீங்க எப்படி இத்தனை வயசுலயும் இப்படி ஆக்ட்டிவா இருக்கிறீங்கன்னு கேட்டாரு நிருபர். தாத்தா தன்
இளமையின் ரகசியத்தை சொல்ல ஆரம்பிச்சாரு.

தம்பி, நான் சின்ன வயசுல இருந்தே அசைவம் சாப்பிட மாட்டேன். சிகரெட், குடின்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சரியான நேரத்துக்கு கொஞ்சமா சாப்பிடுவேன். கரெக்ட் டைமுக்கு படுக்க போயிடுவேன். தினமும் உடற்பயிற்சி தவறாம பண்ணுவேன். இப்படி தாத்தா அடுக்குகிட்டே போனாரு. இடை இடையில மாடியில இருந்து ஒரே சத்தம். யாரோ பாட்டு பாடிகிட்டே டான்ஸ் ஆடுற மாதிரி கேட்டுது. தாத்தா மாடியை பார்த்து முகத்தை சுழிச்சாரு. அப்புறம் விட்ட இடத்தில் இருந்து கன்ட்டினியூ பண்ண ஆரம்பிச்சாரு. அதேபோல, மனசுல பெரிசா அந்த கவலையும் வெச்சிக்க மாட்டேன். இதெல்லாம்தான் என் இளமைக்கு முக்கிய காரணம்னாரு. இப்போ மாடியில இருந்து வர்ர சத்தம் இன்னும் அதிகமாயிடுச்சு.

மாடியில என்ன சத்தம்னு தயங்கிட்டே கேட்டாரு நிருபர். அது ஒண்ணும் இல்லை தம்பி, என் அப்பாதான் சத்தம் போடுறாரு. அவர் இப்படிதான் தினமும் குடிச்சிட்டு பாட்டு கூத்துனு கும்மாளம் போட்டுகிட்டு கிடப்பாரு. அதைக் கண்டுக்காதீங்கன்னு கூலா சொன்னாராம் செஞ்சுரி தாத்தா.
இதுல இருந்து நமக்கு என்ன புரியுது. ஒருத்தரோட வாழ்க்கை முறையை அப்படியே காப்பி அடிச்சு நாம செஞ்சுரி அடிச்சிர முடியாது. இதுக்கு நேர் எதிரா வாழ்ற ஆட்களும் நிறைய பேர் நீண்ட ஆயுளோட இருக்கிறதையும் பார்க்கிறோம், எந்த கெட்ட பழக்கமும் இல்லாம, உணவு கட்டுப்பாட்டோட இருக்கிற நிறைய பேர் சீக்கிரம் செத்து போறதையும் பார்க்கிறோம். அப்போ, மார்க்கண்டேயனா வாழ்வற்கான ரகசியம்தான் என்ன.

இந்த கேள்விக்கு பதில் தேடி இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஜப்பானின் ஒக்கினாவா தீவுக்கு போயிருக்காங்க. ஏன்னா, இந்த தீவில் தான் உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்கள் அதிகளவில் இருக்கிறாங்களாம். ஹெக்டர் கார்சியா, ஃபிரான்சிஸ் மிராலிஸ் ஆகிய அந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களும் அந்த தீவில் போய் தங்கி, அங்கிருக்கிற செஞ்சுரி போட்ட தாத்தா, பாட்டிகளை பேட்டி எடுத்திருக்காங்க. அப்படி பேட்டி எடுக்கும்போது, நிறைய சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் நம்ம மகிழ்ச்சியையும், ஆயுளையும் அதிகரிக்க முடியும்னு தெரிஞ்சிகிட்டிருக்காங்க.
அவங்க தெரிஞ்சிகிட்ட அந்த இளமை ரகசியத்தின் சில முக்கியமான விஷயங்களை இப்போ நாமும் தெரிஞ்சிப்போம். முதல் ரகசியம் என்னென்னா, வாழ்க்கையை ஒரு திருவிழா போல நினைக்கணுமாம். ஒவ்வொரு நாளும் நாம கொண்டாடத் தான் வருதுன்னு நினைச்சு, அதை கொண்டாடித் தீர்க்கணும்னு சொல்றாங்க. இதுக்குன்னு சில வழிமுறைகளையும் அவங்க வெச்சிருக்காங்க. அடிக்கடி நண்பர்களை சந்திப்பது, அவர்களுடன் விளையாடுவது, கூட்டு சமூகமாக வாழ்வது போன்றவை அதில் சில வழிமுறைகள்.

how to live long

நாமெல்லாம் சின்ன வயசுல பொறந்தநாளைக்கு கேக் வெட்டி, சாக்லெட் கொடுத்து கொண்டாடுவோம். அப்புறம் கொஞ்சம் பெரியவங்க ஆனதும், பிறந்தநாளையும் மற்ற நாட்களைப் போல கடந்துபோக ஆரம்பிச்சிடுவோம். அன்னைக்கு மட்டும் காலையில சில பேர் கோயிலுக்கு போய் ஒரு அர்ச்சனையை பண்ணிட்டு வந்துடுவாங்க. அதோட முடிஞ்சது நம்ம பிறந்தநாள். ஆனால் ஒகினாவாவில் 90 வயசு, 100 வயசு தொட்டவர்கள் எல்லாம் அவங்க வயசுக்கேத்தபடி கிட்டத்தட்ட 100 கேண்டில் ஏத்தி அதை ஊதி அணைச்சு, கேக் வெட்டி நண்பர்கள் புடை சூழ கோலாகலமா தங்கள் பிறந்தநாளை கொண்டாடுவாங்களாம்.

நீண்ட ஆயுளுக்கு மிக மிக அவசியமான குணமா அவங்க சொல்றது, நம்ம அண்ணா சொன்ன "எதையும் தாங்கும் இதயம்"தான். எதுக்குமே பெருசா கவலைப்படாதீங்க. எல்லா பிரச்னைக்கும் ஏதாவது ஒரு வழி இருக்கும். அதனால கவலைப்படாம வாழ்க்கையை அனுபவிக்க முயற்சி பண்ணுங்க. நல்ல நண்பர்கள் புடைசூழ வாழப் பழகுங்கன்னு சொல்றாங்க. அதேபோல முடிந்த அளவு தினமும் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்ய கணிசமா நேரம் ஒதுக்குங்க என்கிறார்கள். ஒகினாவா தீவில் எல்லா தாத்தா, பாட்டியும் தோட்டம் சீரமைக்கிறது, செடி வளர்க்கிறது, படம் வரையிறதுன்னு தங்களுக்கு பிடிச்ச விஷயங்களில்தான் அதிக நேரத்தையும், சக்தியையும் செலவிடுவாங்களாம்.

நல்ல பழக்கங்களை அதிகப்படுத்திகிட்டா ஆயுளும் அதிகமாவும் என்பதை தாரக மந்திரம் போல் சொல்கிறார்கள். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பதில் தொடங்கி, உடற்பயிற்சி செய்வது, காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது என எதெல்லாம் முடியுமோ அதெல்லாம் செய்யுங்க என்கிறார்கள்.

how to live long

இன்னொரு முக்கியமான, நாம அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அட்வைஸ் இருக்கு. எதுக்கும் பதட்டப்படாதீங்க, அவசரப்படாதீங்க என்பதுதான் அது. அவசரப்படாம இருந்தா அதிக காலம் இருக்கலாமாம். அவசர அவசரமா எதையாவது செய்யும்போது மனமும், உடலும் ஒருசேர சோர்வடைகிறது. அதனால ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தை மட்டும் நிறுத்தி நிதானமா செய்யப் பழகுங்க என்கிறார்கள்.

அதேபோல அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருந்தாலும் சீக்கிரம் முதுமை வந்துவிடுமாம். அதனால அடிக்கடி எழுந்து நடங்க என்கிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இருபது நிமிடமாவது ஒருவர் நடக்க வேண்டுமாம். அடுத்தபடியா தூக்கம். நல்ல ஆழமான, அமைதியான தூக்கம்தான் ஆயுளை நீட்டிக்கும் என்கிறார்கள்.

எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தா, நல்ல மனசோட குழந்தையைப் போல இருங்க என்பதுதான் அந்த தாத்தா, பாட்டிகளின் ஒன்லைன் இளமை ரகசியம். நாமும் கொஞ்சம் முயற்சி செஞ்சுதான் பார்ப்போமே.

- கௌதம்

English summary
Here is story for how to live long and happily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X