For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிட்லரின் மனநிலையில் இருக்கிறார் ஜெயலலிதா: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் மனநிலையில் இருக்கிறார் ஜெயலலிதா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஆட்சி அதிகாரத்தின் அந்திமக் காலத்தில் இருக்கும் அண்ணா திமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த காலத்தில் கிடைத்த படிப்பினைகளால் தன்னைத் திருத்திக் கொள்ளவே இல்லை. அவர் ஒருக்காலும் திருந்தப் போவதும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.

காவல்துறையை நம்பி ஏமாற நாங்கள் தயாராக இல்லை. எங்கள் ஐந்து கட்சிகளின் தொண்டர் படையே தமிழகத்தின் காவல்படையாக மாறும். ஏற்படும் விபரீதங்களுக்கு முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Jaya will reap what she shown, warns Vaiko

இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

மே 16 அன்று நடைபெற இருக்கின்ற சட்டசபைத் தேர்தலில், எவ்விதத்திலும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முனைந்துவிட்ட ஜெயலலிதா, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகள் செய்து முடித்து விட்டார்.

அண்ணா திமுக ஆட்சியில் கொள்ளைப் பணத்தைப் பதுக்கி வைத்து, எஜமானியின் உத்தரவுக்கு ஏற்ப வினியோகம் செய்யும் பினாமிகள், ஊழல் பெருச்சாளிகள் வசம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டு, பட்டுவாடாவுக்குத் தயாராக இருக்கின்றது.

தமிழகக் காவல்துறை மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடுவார் தப்புக்கணக்குப் போட்டு கைகட்டிச் சேவகம் செய்து வருவதால், வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் வழங்க அனைத்து வழிகளிலும் உதவுவார்கள் என்பது ஏற்கனவே நிரூபணமாகி உள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேர்மையாளராக இருந்தபோதிலும் செயல்பட முடியாத கையாலாகாத நிலைமையில் இருப்பதால், சிறுதாவூர் பங்களாவுக்குள் கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் குறித்து உடனடியாகச் சோதனை செய்யாமல், மூன்று நாள்கள் கழித்து அம்மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகிய முதல் அமைச்சரின் எடுபிடிகள் மூலமே பதிலைப் பெற்று, கவைக்கு உதவாத அறிக்கை தந்துள்ளார்.

எனவே, தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவைத் தடுத்து விடும் என்று, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் நம்பி ஏமாற மாட்டார்கள். உரியவிதத்தில் நாங்களே பணப் பட்டுவாடாவைத் தடுப்போம்; எதையும் எதிர்கொள்வோம்.

மார்ச் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் மாநகரங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பொதுக்கூட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவதால் கலக்கமும் ஆத்திரமும் கொண்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா, வழக்கம்போலத் தனது குண்டர் படையை சேலத்தில் ஏவி இருக்கின்றார்.

சகோதரி பிரேமலதா அவர்கள் தங்கி இருந்த விடுதிக்குள் உருட்டுக் கட்டைகளோடும், அதிமுக கொடிகளோடும் நுழைந்த ஜெயலலிதா கட்சியின் காலிகள், தேமுதிகவையும், அதன் தலைமையையும் எதிர்த்துக் கூச்சல் இட்டதோடு, ‘இனியும் விமர்சித்தால் நடப்பதே வேறு' என எச்சரிக்கை விடுத்து ரகளை செய்துள்ளனர்.

தேமுதிக கட்சியையும் தலைமையையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் நினைத்து இருந்தால் இக்காலிகளை உதைத்து விரட்டியடித்து இருக்க முடியும். ஆனால் மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடு காத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் எடுபிடிக் காவல்துறை ஏன் இந்தக் குண்டர்களைக் கைது செய்யவில்லை? ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர், அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்க்கட்சியினரைக் கொடூரமாகத் தாக்கி, பல படுகொலைகளை நிகழ்த்தினார். அதிபர் ஆன பின்னரும் அதே குண்டர்களை, பழுப்புச் சட்டைப் படையினர் என்ற கொலைகாரப் படையாகவே அவ்வப்போது ஏவி வந்தார். அத்தகைய மனநிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா இருக்கின்றார்.

தேமுதிகவின் முக்கியப் பிரசாரகரான சகோதரி பிரேமலதா ஒரு பெண்மணி என்பதைக் கூடக் கருதாமல், ரவுடித்தனத்தில் அதிமுக ஈடுபட்ட காட்டுமிராண்டிச் செயலைத் தமிழகம் முழுவதும் நடத்தலாம் என்று ஆளுங்கட்சியினர் திட்டமிட முனையலாம். காவல்துறை அதற்குக் ஒத்துழைப்பு கொடுக்கலாம்.

காவல்துறையை நம்பி ஏமாற நாங்கள் தயாராக இல்லை. எங்கள் ஐந்து கட்சிகளின் தொண்டர் படையே தமிழகத்தின் காவல்படையாக மாறும். ஏற்படும் விபரீதங்களுக்கு முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நேற்று சேலத்தில் அதிமுகவினர் நடத்திய அராஜகத்திற்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், இனி இந்தச் செயல்களை ஏவி விட முதல் அமைச்சர் நினைத்தால், வினையை விதைக்கின்றார்; வினையைத்தான் அறுவடை செய்வார் என எச்சரிக்கின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK leader Vaiko has warned that CM Jayalalitha will reap what she has shown during her rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X