For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே நாளில் அதிக மழை கொட்டித் தீர்க்கும் போது பாதிப்புகளை தவிர்க்க முடியாது: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நாளில் மிக அதிக அளவு மழை கொட்டித் தீர்க்கும் போது பாதிப்புகள் தவிர்க்க இயலாததாகி விடுகின்றன. எனது தலைமையிலான அரசு எடுத்த தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தான் பாதிப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

வட கிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் பற்றியும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச்செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் வளர்மதி, தங்கமணி, கோகுல இந்திரா, ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைச்செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தான் மழை, வெள்ள பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மழை, வெள்ளம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவர் வெளியிட்ட விரிவான அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்னரே கன மழை பெய்யும் போது பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், ஒரே நாளில் மிக அதிக அளவு மழை கொட்டித் தீர்க்கும் போது பாதிப்புகள் தவிர்க்க இயலாததாகி விடுகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

எனது தலைமையிலான அரசு எடுத்த தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தான் பாதிப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. பெருமழை காரணமாகவும், ஏரிகள் நிரம்பி மழைநீர் உட்புகுந்ததன் காரணமாகவும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினை அனுப்பி நிவாரணப் பணிகளை விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டிருந்தேன். அதனடிப்படையில், துரிதமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்டன.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 683 கிராம ஊராட்சிகளிலும் மின் விநியோகம் முழுவதும் சரிசெய்யப்பட்டு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டு சாலைப் போக்குவரத்து சீரான முறையில் நடைபெற்று வருகிறது. 70 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,34,750 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம்

பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 180 வீரர்கள் உள்ளிட்ட 673 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறைகளைச் சார்ந்த 1,673 அலுவலர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மீட்பு பணிகள்

மீட்பு பணிகள்

வெள்ளத்தில் சிக்கியிருந்த 16,613 பேர் மீட்கப்பட்டனர். இதற்கென 133 படகுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 116 சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 34,426 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

உணவு, குடிநீர்

உணவு, குடிநீர்

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளிலேயே தங்கியுள்ள நபர்களுக்கு 1,01,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,50,000 அம்மா குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன. 37 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 48 மருத்துவர்களும், மருத்துவ சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 11,756 நபர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதால் அவர்களது வீடுகள் மற்றும் உடைமைகளுக்கு காவல் துறை மூலம் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம்

கன மழையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கனமழையால் பூண்டி நீர்த் தேக்கத்திற்கு அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து, இந்நீர்த் தேக்கத்திலிருந்து 25,000 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மணலி புதுநகர், எழில் நகர், விச்சூர், சடையன்குப்பம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புக்குழு

தேசிய பேரிடர் மீட்புக்குழு

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் உதவியுடன் 276 தாழ்வான பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் கரை உடைப்பு ஏற்பட்ட ஏரிகள் கண்டறியப்பட்டு அவை போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டன. 117 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 26,448 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 77,962 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது பூண்டி ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 800 கன அடியாக குறைந்துள்ளதால், இன்று மாலைக்குள் நீரால் சூழ்ந்துள்ள பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.

சென்னையில் மழை நீர்

சென்னையில் மழை நீர்

சென்னை மாநகரில் நேற்று வரை மழைநீர் வெளியேற்ற இயலாத மவுண்ட் மற்றும் தில்லை கங்கா நகர் சுரங்கப் பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
மழைநீர் அகற்றும் பணியில் 470 டீசல் பம்புகள், 56 சூப்பர் சக்கர்கள், 49 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 74 ஜேசிபிக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கியிருந்த 789 பகுதிகளில் 331 பகுதிகளில் நீர் வெளியேற்றப்பட்டு எஞ்சிய பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.

ஆற்றில் வெள்ளநீர்

ஆற்றில் வெள்ளநீர்

நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்த 25,595 நபர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சென்னை மாநகரில் 76 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 9,091 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மையங்களில் 6,69,540 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 199 மருத்துவ முகாம்கள் மூலமாகவும, 17 நகரும் மருத்துவ குழுக்கள் மூலமாகவும் 36,040 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரம் நிறுத்தம்

மின்சாரம் நிறுத்தம்

சென்னை மாநகரில் மழை நீர் அதிகமாக தேங்கி இருந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்ட இடங்களில் மின்சாரம் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, நங்கநல்லூர் மற்றும் மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள ஒரு சில தெருக்கள் தவிர மற்ற பகுதிகளில் மின்சாரம் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் நகரத்தில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் மக்களின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்பொழுது மழை நீர் வடியத் தொடங்கியுள்ளதால் மழை நீர் வடிந்த பகுதிகளில் படிப்படியாக மின்சாரம் மீண்டும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 500 மின்வாரிய பணியாளர்கள் இப்பகுதிகளில் போர்கால அடிப்படையில் மின்சார சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

முழுவீச்சில் நிவாரணம்

முழுவீச்சில் நிவாரணம்

சுகாதாரத் துறை மூலம் சென்னை மாநகரட்சிப் பகுதிகளில் 216 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 106 மருத்துவ முகாம்கள் மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தில் 89 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

வெள்ள சேதம் கணக்கீடு

வெள்ள சேதம் கணக்கீடு

வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கும் என 500 கோடி ரூபாய் ஒதுக்கி நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்கும்படி நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆய்வின் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கான இழப்பீடுகள் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கப்படும்.

நிவாரணத் தொகை

நிவாரணத் தொகை

மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போன்று கால்நடை இழப்பு, படகுகள் இழப்பு ஆகியவையும் கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்த இழப்புகளுக்கான நிவாரணத் தொகையை விரைந்து வழங்கிட நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
Tamil Nadi Chief Minister Jayalalitha has listed out the action taken by her government in rain flood relife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X