For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோனோ ரயிலை விட மெட்ரோ ரயிலே சிறந்தது!: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மெட்ரோ ரயில் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் தான், சோதனை ஓட்டத்தின் போது முதல்வர் ஜெயலலிதா விழாப்பேருரை ஆற்றவில்லை என்று கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். மெட்ரோ ரயில் போல மோனோ ரயில் சென்னை நகருக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''சென்னையில் "மெட்ரோ ரயில்" சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருக்கிறார். 14,600 கோடி ரூபாய்க்கான திட்டம் அது. அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அந்தத் திட்டத்தைப் பற்றி அதனைத் தொடங்கி வைக்கும் விழாவிலே பேசிட வேண்டுமென்றால், அந்தத் திட்டம் எந்த ஆட்சியில், எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கூற வேண்டுமல்லவா? அதனால் அங்கே விழாப்பேருரை எதுவும் இல்லாமல் கொடி அசைத்து, மெட்ரோ ரயிலின் சோதனையோட்டத்தைத் தொடங்கி வைத்துவிட்டார். அவர் அங்கே உரையாற்றாவிட்டாலும், அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்பு தமிழக அரசினால் தரப்பட்டுள்ளது.

அதிலே அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்புகள் விவரிக்கப்பட்ட போதிலும், கவனமாக அது எந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை மறைத்து விட்டார்கள். அந்தத் திட்டம் தி.மு.க. ஆட்சியில், நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, தொடங்கப்பட்ட திட்டம்.

சென்னையில் "மெட்ரோ ரயில்" திட்டத்தைச் செயல்படுத்த தி.மு.க. 2006 ஆம் ஆண்டு எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பணி டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. இத்திட்டம் என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் "சிறப்பு முயற்சித்" திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இத்திட்டம் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது.

திட்டத்தை நிறைவேற்றுவதற்காக "சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்" என்கிற சிறப்பு வகை பொதுத் துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி, இந்தியக் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 3-12-2007 அன்று பதிவு செய்தது. இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.14,600 கோடி. திட்டச் செலவில் 59 சதவிகிதம் ஜப்பான் அரசின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவி மூலம் பெறப்படும்.

கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் மத்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே 21-11-2008 அன்று டோக்கியோ நகரில் கையெழுத்தானது. தி.மு.க. ஆட்சியில் இவ்வாறு முனைப்போடு முயற்சித்து தொடங்கப்பட்ட திட்டம்தான் "மெட்ரோ ரயில்" திட்டம்.

டெல்லி மெட்ரோ ரயில் முதல்கட்டத்தில் 65 கிலோ மீட்டரும், இரண்டாவது கட்டத்தில் 124.63 கிலோ மீட்டரும் செல்வதால் நல்ல வணிக முன் மாதிரியாக இருப்பதுடன் இதன் அடிப்படையில் ஐந்து பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்படுகிறது.

திட்டமிடப்பட்ட காலத்திற்குள் பணிகள் முடிவடையாமல் தாமதம் ஆவதும், திட்டத்தை சீர்குலைப்பதாக ஆகிவிடும். மெட்ரோ ரயில் திட்டத்தினைப் பொறுத்தவரையில் நேரம்தான் பணம். ஒருநாள் இழப்பு என்பது பல கோடி ரூபாய் இழப்பாகும்.

சென்னை தற்போது மிகப் பெரிய மாநகர் என்பதால் மெட்ரோ ரயில் போல வேறெந்த முறையும் திறமையாகவும், கட்டுப்படியாகவும் இயங்கமுடியாது. மெட்ரோ ரயிலின் நான்கில் ஒரு பங்குக்கு மட்டுமே மோனோ ரயில் பயன்படும். மேலும் மோனோ ரயிலை இயக்க மெட்ரோ ரயிலை இயக்குவதைப் போன்று 50 சதவீதம் அதிகமாகச் செலவாகும். அது மிகவும் அதிக செலவாகும் இணைப்பு சேவையாகும்.

பெருமளவு மக்கள் போக்குவரத்து முறையான மெட்ரோ ரயிலை நகர்ப்புற போக்குவரத்தின் முதுகெலும்பாகப் பார்க்க வேண்டும். மும்பையில் உருவாக்கப்படும் மோனோ ரயிலுக்கு கி.மீ.க்கு ரூ.170 கோடி செலவாகிறது. மெட்ரோ ரயிலில் பயணிகள் கொள்ளளவு அதைப்போல மேலும் மூன்று மடங்காகும். மெட்ரோ ரயில் போன்ற நகர்ப்புறப் போக்குவரத்து முறை மூலதனச் செரிவுடையவையாகும். மாநில அரசுகள் நீண்டகாலத் தேவைகளை மனதில் கொண்டு இவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் இரண்டாவது கட்டம் மற்றும் மூன்றாவது கட்டம் என பணிகளை விரிவுபடுத்த வேண்டும்.

பெருவாரியாக மக்கள் பயணம் செய்ய மெட்ரோ ரயில் திட்டம்தான் உகந்தது. மோனோ ரயில் சாதாரண ஒன்றுதான். அதில் அதிகம் பேர் பயணம் செய்யமுடியாது. மோனோ ரயில் திட்டம் வெற்றிகரமான திட்டம் இல்லை. தற்போது அந்த ரயில் பயன்படுத்தப்படும் ஜப்பானில்கூட, சிறு சிறு நகரங்களில்தான் பயன்படுத்தப்படுகிறது. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்தான் அவசியமாகும்.

அதேசமயம் மெட்ரோ ரயில் செலவும் குறைவாகும். மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடும்போது மோனோ ரயில் திட்டத்திற்கான செலவு 50 சதவிகிதம் அதிகமாகும் என்று அனுபவத்தின் அடிப்படையில் இ.ஸ்ரீதரன் தெரிவித்த கருத்தை அ.தி.மு.க. அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK Chief Karunanidhi asked TamilNadu Chief Minister Jayalalitha to clarify position on Metro rail projects
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X