For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூக்கு தண்டனைக்கு இந்தியா துணை போகலாமா?: கருணாநிதி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: 18 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மனநலன் அல்லது அறிவுத்திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை உறுப்பு நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஐநாவின் தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

Karunanidhi condemns central government

மரண தண்டனை குறித்த தீர்மானம்:

கேள்வி:- மரண தண்டனை குறித்து ஐ.நா. பொதுச் சபை முன் வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளதே?

கலைஞர்:- 18 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மனநலன் அல்லது அறிவுத்திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை உறுப்பு நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என ஐ.நா. பொது மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமூக, மனிதாபிமான, கலாச்சார விவகாரங்களைக் கவனித்து வரும் ஐ.நா.வின் மூன்றாவது குழு இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தியது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 114 நாடுகளும், எதிராக 36 நாடுகளும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த 36 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இதுகுறித்து, ஐ.நா.வுக்கான இந்தியத் தூதுக் குழுவின் முதன்மைச் செயலாளர் மயங்க் ஜோஷி, "மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடனேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அது இந்தியாவின் சட்டக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. சட்ட திட்டங்களை வகுப்பதற்கும், குற்றவாளிகளை அந்தச் சட்டப்படி தண்டிப்பதற்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் முழு உரிமை உள்ளது. அந்த உரிமை இந்தத் தீர்மானத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தில் மனிதாபிமான உணர்வோ, மனித உரிமைப் பற்றிய சிந்தனையோ இருப்பதாகத் தெரியவில்லை.

முற்றிலுமாக சட்ட நூலிலிருந்து அகற்ற வேண்டும்

மரண தண்டனையை முற்றிலுமாகச் சட்ட நூலிலிருந்து அகற்றிவிட வேண்டுமென்று தி.மு.கழகத்தின் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் கேட்டுக் கொள்வதற்குப் பின்னணியாகப் பல நிகழ்வுகளை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஸ்டாக் ஹோம் சர்வதேச அம்னெஸ்டி இன்டர் நேஷனல் மாநாட்டில், ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில், இந்தியாவின் சார்பில் வி.ஆர்.கிருஷ்ணய்யரும், அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பய் அவர்களும் கலந்து கொண்டனர். தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று அனைவரும் அந்த மாநாட்டில் மன்றாடினர். "நாகரிக சமுதாயம் ஒருக்காலும் மரண தண்டனையை ஏற்காது என்று அனைவரும் வாதாடினோம்" என்று கிருஷ்ணய்யர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நூறாவது வயதை எட்டியிருக்கும் முதுபெரும் நீதியரசர் திரு.வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சமயம், "நீதிமன்றம் விதிக்கும் தண்டனையால், ஒரு மனித உயிர் பறிக்கப்பட்டு, ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் மனித உரிமைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது" என்றும்; மூன்று கொலைகள் தொடர்பான வழக்கொன்றில் தீர்ப்பளித்தபோது, வி.ஆர்.கிருஷ்ணய்யர், "ஏன் கொலைகாரன் திருந்தக் கூடாதா? நான்காவது உயிரையும் பறிக்க வேண்டுமா? இங்கிலாந்தில் மரண தண்டனையை ஒழித்திடச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், மரண தண்டனை ஒழிக்கப்பட்டது என எந்த ஆங்கிலேயரும் கழுத்தை நெரித்துக் கொல்ல வில்லை" என்று தீர்ப்பில் எழுதினார்.

மரண தண்டனை தேவையில்லை

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவரும், தத்துவ மேதையுமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள், "மரண தண்டனை தேவையில்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்ததோடு, அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலம் வரை குற்றவாளிகள் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அப்பாதுரை என்ற சமையல்காரர் தூக்கிலிடப்பட்ட தினத்தைப் பற்றி, 1922ஆம் ஆண்டு சிறையில் இருந்த மூதறிஞர் இராஜாஜி தனது நாட்குறிப்பில், "தூக்கிலிடப்பட இருந்த மனிதனின் நினைவு என்னை முன்னதாக எழுப்பியிருக்க வேண்டும். என் படுக்கையில் உட்கார்ந்திருந்தவாறே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நிமிடங்கள் ஒரு யுகம் போலத்தோன்றின. பின்னர் அப்பாதுரையின் வாழ்வு முடிந்தது என்பதை உணர்ந்து கொண் டேன். கடவுள் கொடுத்ததை மனிதன் பகிரங்க மாகப் பறித்துக் கொண்டான்; அதைச் சட்டப்படி நியாயம் என்றும் எண்ணிக் கொண்டான்" என்று படிப்போர் நெஞ்சம் கலங்கிடத்தக்க வகையில் எழுதியிருக்கிறார்.

"மனிதநேயம் மற்றும் மனித உரிமை அடிப்படையில், உலக நாடுகளில் 140 நாடுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ளன. ஆனால், இந்தியாவில் இன்னும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படவில்லை. தூக்கு தண்டனையின் மூலம் மனித உயிர்களை, மனிதாபிமானமற்ற முறையில் முடித்து வைக்க முடியுமே தவிர, குற்றங்களை ஒழிக்கவோ, குறைக்கவோ இயலாது. குற்றங்கள் ஒழிக்கப்படுவதற்கு மனமாற்றம் தேவை. அதற்குத் தூக்கு தண்டனை உரிய தீர்வாகாது" என்று, 2014 பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெற்ற தி.மு.கழகத்தின் 10ஆவது மாநில மாநாட்டில், இலட்சோப இலட்சம் மக்களின் பேராதரவோடு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் தூக்கு தண்டனை சட்டரீதியாக நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, தற்போதைய பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, தூக்கு தண்டனையைச் சட்ட நூலிலிருந்து அகற்றிட முன்வருவதோடு; "மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று தற்போது ஐ.நா. பொது மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்தது என்பதைப் போன்ற நிகழ்வு எதிர்காலத்தில் ஏற்படாத வண்ணம் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில், முடிவு மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்' என இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has condemned central government for voting against the UN resolution to stop death sentence for minors, pregnant women, mentally disordered persons etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X