• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குருவி கூட்டில் எழுதி குவித்தோமே..நானும் தமிழ் சினிமாவும்... நினைவலைகளில் மூழ்கிய கருணாநிதி

By Mathi
|

சென்னை: 95 வயதை எட்டும் திமுக தலைவர் கருணாநிதி பன்முகத் தன்மை கொண்ட ஆற்றலாளர், அரசியல், இலக்கியம், சினிமா என அத்தனை துறைகளிலும் கோலோச்சியவர்.

கடந்த 2013-ம் ஆண்டு பிரன்ட்லைன் ஆங்கில இதழ் சினிமா நூற்றாண்டு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் தமது தமிழ் சினிமா பயணம் பற்றி கருணாநிதி எழுதிய நீண்ட கட்டுரை இது:

பின்னோக்கிச் சென்றால்

பின்னோக்கிச் சென்றால்

நூற்றாண்டுகளில் தமிழ் சினிமா என்ற தலைப்பில் என்னுடைய நினைவுகளை எழுபதாண்டு காலத்திற்கு பின்னோக்கி எடுத்துச் சென்றால், "பேசாத படம்" என்ற நிலையிலிருந்து "பேசும் படம்" தொடங்கப்பட்ட காலம் என்று வைத்துக் கொள்ளலாம். திரைப்படத்தில் தோன்றும் நடிகர்கள் எல்லாம் உரையாடல் எதிலும் ஈடுபடாமல் ஊமைப் படங்களாக இருந்த மிகப் பழைய நிலை மாறி, திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கும்போதே, அந்தப் படத்திற்கேற்ற வசனங்களை "ஒலிபெருக்கி" வாயிலாக ஒருவர் முழங்கிக் கொண்டிருக்கும் அடுத்த நிலைக்கு உயர்ந்தது.

நடனவல்லிகளின் மத்தியிலே நாடாள்வோரின் தர்பாரிலே!

நடனவல்லிகளின் மத்தியிலே நாடாள்வோரின் தர்பாரிலே!

நாரதர் தம்புராவுடன் வந்து வந்து போவார், நடனவல்லிகளின் மத்தியிலே நாடாள்வோரின் தர்பாரிலே! வேலன் வள்ளியை இணைத்து வைப்பார், சிவனுக்கும் சக்திக்கும் சிறு குழப்பம் உண்டாக்குவார், பின் சிக்கல் தீர்ப்பார். "கோ"வெனக் கதறும் சந்திரமதி, துடித்துத் துவளும் துயிலுரியப்படும் திரௌபதி - இப்படியெல்லாம் தெய்வ லோகத்திலே திருவுலா வந்த "கேமிரா" மனிதர்களைப் படமெடுக்க ஆரம்பித்து, வயதேறித் தளர்ந்து போன பழமைச் சரக்கிற்கு, இளமை மெருகேற்றும் கதைகளைக் குமுறி வரும் மறுமலர்ச்சி அலைகள், அடித்துக் கொண்டு போய் விட்டன.

மறுமலர்ச்சி தந்த மாறுதல்கள்

மறுமலர்ச்சி தந்த மாறுதல்கள்

திரையுலகில் மறு மலர்ச்சி தந்துள்ள மாறுதல்கள் ஏராளம். நடிப்பிலே மட்டுமல்ல, காட்சியமைப்பு, படப்பிடிப்பு ஆகியவற்றில் மட்டுமல்ல, கதையிலே, வசனத்திலே, பாட்டிலே புதுமை பூத்துவிட்டது இப்போது! அப்போதெல்லாம் திரையரங்குகள் இப்போதுள்ள அளவிற்கு மிகவும் வசதியாக நவீன மயமாக குளிர்பதன வசதி செய்யப்பட்டு இருக்காது. அதிலும் கிராமங்களில் கேட்கவே வேண்டியதில்லை. பார்வையாளர் பகுதி முழுவதும் வெறும் மணல் தான் குவிக்கப்பட்டு, அவற்றின் மேலே அமர்ந்து தான் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும்.

நன்றாக மென்று திரளும் எச்சிலை அப்படியே துப்பி...

நன்றாக மென்று திரளும் எச்சிலை அப்படியே துப்பி...

நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பக்கத்திலே உள்ள ஒருவர் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டே, வாய் நிறைய வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு, நன்றாக மென்று திரளும் எச்சிலை அப்படியே தனக்கு முன்னால் உள்ள மணலிலே துப்புவார். துப்பி விட்டு, அதற்கு மேலே அவரே பக்கத்திலே இருக்கும் மணலை அள்ளிப் போட்டு எச்சிலை மூடி விடுவார். அடுத்த காட்சிக்கு வருவோர் அந்த மணலைப் புரட்டினால் அவ்வளவு தான்! இந்த "அழகில்" தான் அப்போதெல்லாம் திரையரங்குகள் இருக்கும்.

வயது 90 ஆனாலும்.. கலைப் பணிக்கு வயது 66

வயது 90 ஆனாலும்.. கலைப் பணிக்கு வயது 66

எனக்கு வயது 90 என்ற போதிலும், என்னுடைய அரசியல் பணிக்கு வயது 76 என்றும், கலையுலகப் பணிக்கு 66 என்றும் வைத்துக் கொள்ளலாம். தந்தை பெரியாரின் அழைப்பின் பேரில் ஓராண்டு காலம் ஈரோட்டில் "குடியரசு" அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது கோவையிலிருந்து திரைப்படத்திற்கு வசனம் எழுதவேண்டுமென்று அழைப்பு ஒன்று வந்தது. அதை அனுப்பியவர் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி அவர்கள். என்னுடைய நண்பர் முத்து கிருஷ்ணன் என்பாரின் துணையோடு கோவை சென்று, திரு. சாமியிடம் விவரங் களை அறிந்தேன். கோவை ஜுபிடர் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்ட "ராஜ குமாரி" என்ற படத்திற்கு நான் வசனம் எழுத வேண்டுமென்று கூறப்பட்டது. பெரியாரிடம் தெரிவித்தேன். அவரும் "போய் வா" என்று விடை கொடுத்தார்.

எம்.ஜி.ஆர்.தான் முதல் நாயகன்

எம்.ஜி.ஆர்.தான் முதல் நாயகன்

என்னுடைய அரசியல் பணிகளுக்கு இடையூறு இல்லாமலிருந்தால், அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுத ஒப்புக் கொள்வதாகக் கூறி, அதற்கு திரு. சாமி அவர்களும் ஒப்புதல் அளித்த பிறகு வசனம் எழுதத் தொடங்கினேன். அந்தப் படத்தில் தான் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதல் முதலாகக் கதாநாயகனாக நடித்தார். அதற்கு முன்பே எம்.ஜி.ஆர். ஒரு சில படங்களில் நடித்து வந்தார் என்ற போதிலும், அவைகள் எல்லாம் கதாநாயகன் பாத்திரங்கள் அல்ல. காந்தி பக்தரான எம்.ஜி.ஆர். அவர்களுடன் எனக்கு நட்பு தோன்றிய காலம் அது தான்.

அண்ணா நூல் அவருக்கு.. காந்தி நூல் எனக்கு

அண்ணா நூல் அவருக்கு.. காந்தி நூல் எனக்கு

அண்ணாவின் நூல்களை அவருக்கு நான் கொடுப்பேன்; காந்தியின் நூல்களை அவர் எனக்குக் கொடுப்பார். எங்களுக்கிடையே அடிக்கடி விவாதங்கள் நடைபெறும்; அவற்றின் விளைவாக அவர் கழக அணியில் இணைந்து கொண்டார்! கோவைக்கு அடுத்த சிங்காநல்லூரில் பத்து ரூபாய்க்கு ஒரு வீடு பிடித்துக் கொண்டு, நானும் என் மனைவி பத்மாவும் தங்கியிருந்தோம்.

குருவிக் கூட்டில் எழுதிக் குவித்தவை ஏராளம்...

குருவிக் கூட்டில் எழுதிக் குவித்தவை ஏராளம்...

அந்தக் குருவிக் கூட்டினுள்ளே உட்கார்ந்து கொண்டு நான் எழுதிக் குவித்தவை ஏராளம். "அபிமன்யூ" என்கிற புராணப் படத்திற்குப் புதுமையான வசனங்களை எழுதுகின்ற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தப் படம் வெளி வந்த போது என் மனைவியையும், நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, திரையரங்கிற்குச் சென்றேன். ஆனால் அந்தப் படத்தில் நான் எழுத்துப் பணியாற்றிய செய்தி திரையில் விளம்பரப்படுத்தப்படவே இல்லை. மறுநாளே வீட்டைக் காலி செய்து விட்டு திருவாரூருக்குத் திரும்பி விட்டேன்.

மாடர்ன் தியேட்டர்ஸுடன் தொடர்பு

மாடர்ன் தியேட்டர்ஸுடன் தொடர்பு

திருவாரூரில் இருந்து கொண்டு கூட்டங்களுக்குப் போவதும், எழுதுவது மாக இருந்த போது, என்னுடைய நண்பர் கவி கா.மு. ஷெரீப் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் பாட்டு எழுதும் பணியில் இருந்தார். அவர் ஒரு நாள் என்னைப் பார்க்க திருவாரூர் வந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் திரு. டி.ஆர். சுந்தரம் அவர்கள் என் எழுத்துக்களை விரும்புவதாகவும், திரைப்படங் களுக்கு வசனம் எழுதுவதற்கு அழைப்பதாகவும் கூறி அவரும் வலியுறுத்தி என்னை அழைத்துச் சென்றார். மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் 1949ஆம் ஆண்டில் அங்கே பணியில் சேர்ந்தேன். அங்கே தான் கவியரசு கண்ணதாசன் என் நண்பரானார்.

திறமை வாய்ந்த எல்லிஸ் ஆர் டங்கன்

திறமை வாய்ந்த எல்லிஸ் ஆர் டங்கன்

என்னுடைய "மந்திரி குமாரி" நாடகத்தைப் படமாக எடுக்க திரு. டி.ஆர். சுந்தரம் விரும்பி, நானும் ஒப்புதல் அளித்து, அதற்கான திரைக்கதை யையும், உரையாடல்களையும் எழுதி முடித்தேன். திறமை வாய்ந்த இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களின் முழுப் பொறுப்பில் வெளியான அந்தப் படம் தமிழ்நாட்டில் பெரும் புரட்சியை அப்போது ஏற்படுத்தியது. சனாதனிகளின் எதிர்ப்பும், எதிர்க்கட்சிக்காரர்களின் மேடைத் தாக்குதலும் அந்தப் படத்தின் காரணமாக நிரம்ப ஏற்பட்டன.

நான் எழுதிய மருதநாட்டு இளவரசி

நான் எழுதிய மருதநாட்டு இளவரசி

நான் எழுதிய "மருத நாட்டு இளவரசி" என்ற படத்திலும் எம்.ஜி.ஆர். கதா நாயகனாக நடித்து, அந்தப் படமும் தமிழக மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுச் சிறப்பாக ஓடியது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் அந்தப் படத்தை சேலம் "பேலஸ்" தியேட்டரில் பார்த்து விட்டு மறுநாள் காலையில் என்னைச் சந்தித்து வாழ்த்தினார். தான் எடுக்கவிருக்கும் "மணமகள்" படத்திற்கு நான்தான் திரைக்கதை, வசனம் எழுத வேண்டுமென்று வலியுறுத்தி சம்மதம் பெற்றார்.

லலிதா -பத்மினி - ராகினி

லலிதா -பத்மினி - ராகினி

1951ஆம் ஆண்டு "மணமகள்", "தேவகி" ஆகிய இரண்டு படங்கள் நான் எழுதி வெளி வந்தன. "மணமகள்" படத்தின் மூலம் தான் லலிதா, பத்மினி சகோதரிகள் முதன் முதலாக முழு பாகமேற்று தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கினர். அந்தப் படத்திற்கான பாடல்களை உடுமலை நாராயண கவி இயற்றியிருந்தார்.

வந்தது பராசக்தி

வந்தது பராசக்தி

பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட "நேஷனல் பிக்சர்ஸ்" பெருமாள் அவர்கள் "பராசக்தி" படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை நான் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இயக்குனர்கள் கிருஷ்ணன், பஞ்சு இருவரும் ஒருவராக இருந்து என்னிடம் அன்பு காட்டியவர்கள். அவர்களும் என்னை வலியுறுத்தினார்கள். அப்படத்தில் முதலில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு வேறு படங்கள் இருந்த காரணத் தால், "பராசக்தி"யில் குணசேகரன் வேடத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார்கள். அந்தப் படம் ஏ.வி.எம்., நேஷனல் பிக்சர்சாரின் கூட்டுத் தயாரிப்பு.

சிவாஜி நடிப்பில் ஏவிஎம்முக்கு அதிருப்தி

சிவாஜி நடிப்பில் ஏவிஎம்முக்கு அதிருப்தி

சிவாஜி இரண்டொரு காட்சிகளில் நடித்ததைப் போட்டுப் பார்த்து விட்டு, ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் அதிருப்தி தெரிவித்து நடிகரை மாற்ற வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். நானும், பெருமாள் அவர்களும், இயக்குநர்களும் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரின் கருத்தை ஏற்கவில்லை. ஒரு அற்புதமான நடிகரை அவசரப்பட்டு இழந்து விடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறினோம். அதன் பின்னர் "பராசக்தி"யில் சிவாஜி கதாநாயகனாக நடித்தார். பராசக்தி படம் மக்களைப் பெரிதும் ஈர்த்து எழுச்சி ஊட்டிய படமாக தமிழகமெங்கும் நடைபெற்றது.

உரையாடல்களைத் தீட்டினேன்

உரையாடல்களைத் தீட்டினேன்

பராசக்திக்குப் பிறகு 1953ஆம் ண்டு பணம், நாம், திரும்பிப்பார், ராஜாராணி ஆகிய படங்களுக்கு திரைக்கதை, உரையாடல்களைத் தீட்டினேன். இதில் மூன்று படங்களில் சிவாஜியும், ஒரு படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களும் நடித்தார்கள். 1954ஆம் ஆண்டு ரங்கோன் ராதா, மனோகரா, மலைக்கள்ளன், அம்மையப்பன் ஆகிய படங்களுக்கு நான் திரைக்கதை, உரையாடல்கள் எழுதினேன்.

ஓய்வு நேரப் பணியான கலையுலகப் பணி

ஓய்வு நேரப் பணியான கலையுலகப் பணி

என்னுடைய முழு நேர அரசியல் பணிகளுக்கிடையே கலையுலகப் பணியை ஓய்வு நேரப் பணியாகத் தான் அமைத்துக் கொண்டேன். அதிலும் கூட பகுத்தறிவுக் கொள்கைகளை, இலட்சியங்களை மக்களிடையே பரப்புவதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன். எந்தப் படத்திலும் காதல் களியாட்டங்கள், விரசங்கள் போன்றவற்றுக்கு இடம் அளிக்காமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் சுயமரியாதைக் கருத்தினை விளக்கிடும் வகையிலும், பார்ப்போர் சிந்தனையைத் துhண்டிடும் வகையிலும் எழுதுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தேன்.

கம்யூனிஸ வேகம்

கம்யூனிஸ வேகம்

நாம் திரைப்படம் முழுக்க முழுக்க தொழிலாளி வர்க்கத் தினுடைய குரலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம். அப்போதே கம்யூனிச வேகம் எந்த அளவிற்கு என் உள்ளத்தில் இடம் பெற்றிருந்தது என்பதற்கு அந்தப் படத்திலே ஒரு உரையாடல்! படத்தில் ஒரு பண்ணையாரிடம், பாட்டாளியின் சார்பில் எம்.ஜி.ஆர். வாதாடுவார். பண்ணையார் கோபமடைந்து, "என்னடா? ஆச்சரியக் குறி போடுகிறாய்? என்பார். உடனே தொழிலாளிக்காக வாதாடும் எம்.ஜி.ஆர்., "ஆச்சரியக் குறி தான் ஜமீன்தார் அவர்களே, கொஞ்சம் வளைந்தால் கேள்விக் குறியாக மாறி விடும்; ஞாபகம் இருக்கட்டும்! அரிவாளுக் கும் கேள்விக் குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை" என்று பதிலளிப்பார்!

புரையோடிய ஜாதி உணர்வு

புரையோடிய ஜாதி உணர்வு

"தாயில்லாப் பிள்ளை" திரைப்படத்தின் மூலமாக "பன்னெடுங்காலமாக சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் ஜாதி உணர்வும், பழைய பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் மனித உள்ளத்தில் எவ்வளவு ஆழமாக வேரிட்டிருக் கின்றன என்பதை பதஞ்சலி சாஸ்திரி என்ற பாத்திரத்தின் மூலமாக உணர்த்தி யிருந்தேன். அண்ணாவைப் பற்றிப் பல படங்களில் உரையாடல்கள் மூலம் பதிய வைத்த நான், திரைப்படம் ஒன்றிற்கு "காஞ்சித் தலைவன்" என்றே பெயர் சூட்டியிருந்தேன்.

இருவர் உள்ளம்

இருவர் உள்ளம்

பிரபல நாவல் ஆசிரியை "லட்சுமி"யின் "பெண் மனம்" என்ற நாவலின் கதை தான் "இருவர் உள்ளம்" எனும் திரைப்படமாக என்னால் எழுதப்பட்டு வெளி வந்தது. 1969ல் முதலமைச்சராக ஆன பின்னரும், என்னுடைய திரை யுலக ஈடுபாடும், பங்களிப்பும் தொடர்ந்தன. "எங்கள் தங்கம்", "பிள்ளையோ பிள்ளை", "பூக்காரி", "அணையாவிளக்கு", "வண்டிக்காரன் மகன்" "ஆடு பாம்பே", "மாடி வீட்டு ஏழை", "நெஞ்சுக்கு நீதி", "தூக்குமேடை" "மறக்க முடியுமா" என்று நான் எழுதிய திரைப்படங்கள் வெளி வந்து கொண்டிருந்தன.

90 வயதில் 75

90 வயதில் 75

என்னுடைய இந்த 90 வயதில் 75 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறேன். ஒருசிலப் படங்களில் நான் எழுதிய பாடல் களும் இடம் பெற்றுள்ளன. திரைப்பட உலகில் எனக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. அவர்களோடு நான் பழகிய நாட்கள் எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன. அரசியல் பணி தான் என்னுடைய முதன்மையான பணி என்ற போதிலும், கலையுலகப் பணியையும் அதற்குத் துணையாகத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

மக்களின் அறியாமையைப் போக்க

மக்களின் அறியாமையைப் போக்க

சமுதாயத்தின் அடி மட்டத்தில் இருக்கும் பாமர மக்களின் அறியாமையைப் போக்க அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற, ஏற்றத் தாழ்வை நீக்க, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை வளர்க்க தமிழனுக்குத் தன் மொழியின், மரபின், மாண்பை, வீரத்தை உணர்த்திட கலையுலகப் பணியைப் பயன்படுத்திக் கொண்டேன்.

இளைஞர்கள் கையில் திரையுலகம்

இளைஞர்கள் கையில் திரையுலகம்

தற்போது திரைப்பட உலகம் இளைஞர்கள் கைக்குப் போய் விட்டது என்றே கூற வேண்டும். ஏராளமான இளைஞர்கள் இயக்குநர்களாக வந்துள்ளார்கள். மிகவும் சிறப்பாக திரைப்படங்களைத் தயாரித்து வழங்குகிறார்கள். அவர்களை யெல்லாம் இந்தக் கட்டுரையின் வாயிலாக வாழ்த்துகிறேன். நூறாண்டுகளைக் கடக்கும் திரைப்பட உலகம் மேலும் மேலும் செழிப்பாகவும், நவீன முத்திரைகளோடும் வளர என் வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Here the Karunanidhi's Artilce on Tamil Cinema.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more