For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி அப்படி என்ன சாதனைகள் செய்தார் என்று கேட்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்

கருணாநிதியால் கல்வி பயின்று இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர் தமிழக இளம் தலைமுறை. ஆனால் பெற்ற பலன்களை அறியாத அவர்களில் சிலர் திராவிட ஆட்சியால் பலன் இல்லை என கூறிவருகிறார்கள்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி இந்திய அளவில் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக கோலோச்சியவர். பிற அரசியல்வாதிகளை போல சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றும் இவர் பாணி இல்லை.

செய்ய முடிந்ததை சொல்வார். அதை செய்தும் முடிக்கும் அசாத்திய துணிச்சலும், உழைப்பும் அவரிடம் இருந்தன.

கருணாநிதி மிகப்பெரிய சாதனையாளர் என்று கூறுவார்கள். ஆனால் கடந்த பல வருடங்களில் அந்த சாதனைகளை மக்களிடம் திமுகவினர் சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லையோ என்ற சந்தேகம் அரசியல் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது போன்ற குரல்கள் தமிழத்தில் அதிகரிக்க, தக்க புள்ளி விவரங்களோடு மறுப்பதில் திமுக உடன் பிறப்புகள் சோர்வடைந்துவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அப்படி கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட டாப் சாதனைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

 முதல் முறை முதல்வர்

முதல் முறை முதல்வர்

தமிழகத்தில் 40 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடித்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றி 1967 பொதுத் தேர்தலிலில் முதல் முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்தது. வென்ற தொகுதிகள் 138 இடங்கள். அக்கட்சியின் பொதுச்செயலாளரான அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றார். இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்த வரலாற்று சாதனையை திமுக அப்போது படைத்தது. 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அண்ணா மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். 1969 முதல் 1971 வரையிலும் முதல்வராகப் பொறுப்பு வகித்த கருணாநிதி, அதற்கு பிந்தைய பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று 1971 முதல் 1976 வரை இரண்டாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தார். இந்த ஆட்சி காலத்தில், கருணாநிதி பல புரட்சிகர திட்டங்களை கொண்டு வந்தார்.

 கை ரிக்ஷா ஒழிப்பு

கை ரிக்ஷா ஒழிப்பு

மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் வகையிலான கைரிக்ஷாக்கள் அப்போது அதிகளவில் இருந்தன. மனிதனை மனிதனே மாடு போல இழுத்துச்செல்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால் கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன. இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்த தமிழகத் திட்டங்களில் இது. குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கருணாநிதி தொடங்கினார். இதன் மூலம் பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. இத்திட்டமும் இந்திய அளவில் முன்னோடித் திட்டம்தான்.

 தேசிய கொடி

தேசிய கொடி

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றும் உரிமையுடையவர்களாக இருந்தனர். தேசிய அளவில், சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியேற்றும் உரிமையுடையவர்களாக இருக்கும்போது, மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தலைமை வகிக்கும் முதல்வர்களுக்கு கொடி ஏற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் கருணாநிதி. இதனால், 1972ம் ஆண்டு சுதந்திரத்தின் வெள்ளி விழாவையொட்டி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினத்தில் அந்தந்த மாநில முதல்வர்கள், தலைமைச் செயலகத்தில் கொடியேற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி.

 இத்தனை திட்டங்களா?

இத்தனை திட்டங்களா?

அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, பார்வையற்றோருக்கு அறுவை சிகிச்சை செய்து கண்ணாடிகள் வழங்கும் கண்ணொளி திட்டம், பிச்சைக் காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காக இரவலர் இல்லங்கள் அமைத்தது, இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கென தனி அமைச்சரவை, நில உச்சவரம்பு சட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம் , உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி, கலப்பு மணத் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை ஆகியவை 1969 முதல் 1976 வரையிலான கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் முற்போக்குத் தன்மை கொண்ட முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள் ஆகும்.

 இலவச மின்சாரம்

இலவச மின்சாரம்

எம்ஜிஆர் ஆட்சி காலம் இடைமறித்த நிலையில், 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1989ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக தமிழக முதல்வரானார் கருணாநிதி. 1989முதல் 1991 வரையிலான இரண்டு ஆண்டுகாலம் மட்டுமே நீடித்த இந்த ஆட்சி அப்போதைய மத்திய அரசால் கலைக்கப்பட்டது. இருப்பினும் இந்த இடைவெளியிலும் நிறைய மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 1989ல் நடை முறைக்கு வந்தது.

 பெண்களுக்கு சொத்தில் சம பங்கு

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு

1989ல் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று உயர்வதற்காக தமிழகத்தில் நிலவி வந்த இடஒதுக்கீட்டு அளவை 69 சதவீதமாக உயர்த்தியது கருணாநிதி தலைமையிலான அரசு. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என 69% இடஒதுக்கீடு 1989 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

 சத்துணவுடன் முட்டை

சத்துணவுடன் முட்டை

1989ம் ஆண்டு தர்மபுரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முதன்முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டன. பெண்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் வாய்ப்பைப் பெருக்கும் இத்திட்டம் இன்று மாநிலம் முழுவதும் பெரும் வளர்ச்சி கண்டு பெண்களை தற்சார்பு கொண்டவர்களாக மாற்றியுள்ளது. சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு ஆகியவை இந்த 2 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட முக்கிய திட்டங்களாகும்.

 சென்னையாக மாறிய மெட்ராஸ்

சென்னையாக மாறிய மெட்ராஸ்

தமிழக முதல்வராக 1996ம் ஆண்டில் நான்காம் முறையாகப் பொறுப்பேற்ற கருணாநிதி மற்றொரு புரட்சிகர திட்டத்தையும் அமல்படுத்தினார். மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும் ஏனைய அன்னிய மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்ததை மாற்றி சென்னை என அனைத்து மொழிகளிலும் அழைக்கும்படி பெயர் மாற்றம் செய்தார். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளை அவர்களே சந்தையில் விற்று நேரடியாகப் பலன் பெறும் வகையில் உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தார் கருணாநிதி.

 சமத்துவபுரம்

சமத்துவபுரம்

தமிழர்கள் என்ற உணர்வை மறந்து சாதிவாரியாக மக்கள் பிரிந்திருப்பதை போக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்புகளைத் திறந்து வைத்தார். பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. குக்கிராம மக்கள் எளிதில் சுற்றியுள்ள நகரப் பகுதிகளை அடைவதற்கு வசதியாக தனியார் மூலம் சிற்றுந்துகள்/மினி பஸ்கள் இயக்கும் திட்டத்தை திமு.க அரசு நடைமுறைப்படுத்தியது.

 அசத்தும் பஸ் பாஸ் திட்டம்

அசத்தும் பஸ் பாஸ் திட்டம்

பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்காகப் பயணம் செய்வது சுமையாக இருக்கக்கூடாது என இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில்தான் இப்படி முதல் முறையாக இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பல கிராமப்புற ஏழை மாணவர்கள் இதனால் கல்வி பயின்று இன்று, நல்ல நிலைக்கு வந்துள்ளனர். ஆனால் பெற்ற பலன்களை அறியாத அவர்களில் சிலர், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கோஷத்தில் மதி மயங்கியுள்ளனர்.

 ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்

2006ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்றார் கருணாநிதி. 2006 மே 13ம் நாள் பதவியேற்பு விழா நடந்த மேடையில் வைத்தே, தனது தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக் கையெழுத் திட்டு நடைமுறைப்படுத்தினார்.

 பட்டினியில்லா தமிழகம்

பட்டினியில்லா தமிழகம்

தேர்தல் வாக்குறுதியின்படி , ரேஷன் கார்டுகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக கலர் டிவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. விறகு அடுப்பு-மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றைப் பயன்படுத்தும் ஏழைப் பெண்கள் படும் அவதியைத் தவிர்க்கும் விதத்தில் அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப் படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என ஐ.நா.மன்றம் வழிகாட்டியிருப்பதை இந்தியாவிலேயே முதன்முறையாகச் செயல் படுத்தியிருக்கும் மாநிலம் தமிழகம்தான். அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் 1 கிலோ அரிசி 1ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

English summary
A glance on Karunanidhi government's top achievements is here. You can find who is Karunanidhi and his tallness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X