For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்ருதாவுக்கு நீதி கிடைக்க இணைந்து போராடுவேன்: கெளசல்யா

By BBC News தமிழ்
|

"தெலங்கானாவில் நிகழ்ந்த பிரனாயின் படுகொலையை கேட்டவுடன், அது என் சங்கரைதான் எனக்கு நினைவுப்படுத்தியது. ஏனென்றால் சங்கரையும் அதேபோலத்தான் கழுத்தில் வெட்டினார்கள். சங்கரின் நினைவும், அந்த சம்பவமும்தான் என் கண் முன்வந்து நின்றது" என்று வருத்தத்துடன் கூறுகிறார் கௌசல்யா.

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கை யாரும் மறந்திருக்க முடியாது. தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கரை கொலை செய்ததற்காக கௌசல்யாவின் தந்தை உள்ளிட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு நடந்த இந்த ஆணவக்கொலை இந்தியாவையே உலுக்கியது. அடுத்த இரண்டாம் ஆண்டில் தெலங்கானாவிலும் இதே மாதிரியான சம்பவம் தற்போது நடந்தேறியுள்ளது.

ஆதிக்க சாதியை சேர்ந்த அம்ருதா, தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரனாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எட்டு மாதம் கழித்து பிரனாய் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அம்ருதாவிற்கு நான் துணை நிற்பேன்…

"அம்ருதாவிற்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு அது சிறிய வலி இல்லை. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் அதை மனம் ஏற்றுக் கொள்ளாது. ஆனால், அவர் இதிலிருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எல்லோரையும் விட எனக்கு அதிகமாகவே உள்ளது" என்கிறார் கௌசல்யா.


தொடர்புடைய செய்திகள்:


அம்ருதாவின் காதல் அவரை தைரியமாக இருக்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிரனாய்க்கு நீதி கிடைக்க அவர் போராடவும், சாதியை எதிர்த்து நிற்பேன் என்று கூறியதற்கும் அவருக்கு நாங்கள் துணை நிற்போம்.

பெரியாரையும் அம்பேத்கரையும் படிக்க படிக்க அம்ருதாவுக்கு நிச்சயம் தைரியம் வரும் என்று நம்புகிறேன்.

எங்களுக்கு வலி தர வேண்டும் என்பதே நோக்கம்…

ஒரு பேட்டியில் அம்ருதா கூறும்போது, குழந்தையை மனதில் வைத்துத்தான் தன் கணவர் பிரனாயை தனது தந்தை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதில் பெற்றோரின் சாதியம்தான் தெரிகிறது என்கிறார் கௌசல்யா.

பிற சாதியை சேர்ந்த ஒருவரின் குழந்தை தன் மகள் வயிற்றில் வளர்ந்தால் நம் சாதியின் மானம் போய்விடுவதாகவே அவர்கள் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் இந்த கொலையையும் அவர்கள் செய்துள்ளார்கள்.

தங்களை மீறிச் சென்ற மகளுக்கு வலியை தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதனை செய்துள்ளார்கள் என்றும் கௌசல்யா தெரிவிக்கிறார்.

அம்ருதா
BBC
அம்ருதா

இன்னொரு கௌசல்யாவோ அம்ருதாவோ வேண்டாம்

சமூக கட்டமைப்பில் சாதி என்ற விஷயம் பின்னிப்பிணைந்துள்ளது. நானும், அம்ருதாவும் தெருவில் வந்து போராடினால் மட்டும் சாதி ஒழிந்துவிடுமா என்ற கேள்வி வருகிறது. ஆனால், எங்களுக்கான நீதியை நாங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

இந்த வலிகளை நாங்கள் அனுபவித்துள்ளதால் இன்னொரு கௌசல்யாவோ அல்லது இன்னொரு அம்ருதாவாகவோ யாரும் ஆகிவிடக்கூடாது என்ற கவலை எங்களுக்கு அதிகமாகவே உள்ளது.

வலுவான சட்டம் வேண்டும்

இந்தியாவில் ஆணவப்படுகொலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த வலுவான சட்டமும் இல்லை. இந்த கொலைகள் குறைய வேண்டும் என்றால் உரிய சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் கௌசல்யா.

இதே மாதிரியான சம்பவம்தான் எனக்கு நடந்தது. இதனை அம்ருதாவின் பெற்றோர் கட்டாயம் படித்திருப்பார்கள். சங்கரை கொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை என்றும் தெரிந்து கொண்டிருப்பார்கள். தெரிந்தும் இப்படி கொலை செய்துள்ளார்கள்.

கொலை செய்யப்பட்ட பெருமாள பிரனாய்
BBC
கொலை செய்யப்பட்ட பெருமாள பிரனாய்

இன்னொரு சங்கரா பிரனாய்?

பிரனாய்க்கும் அம்ருதாவுக்கும் எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும். அம்ருதா கர்ப்பமாக உள்ளார். குழந்தையை பெற்றெடுப்பது, அதை எப்படி வளர்ப்பது என தங்கள் வாழ்க்கையைக் குறித்து எவ்வளவு யோசித்திருப்பார்கள். அதைவிட பிரனாய்தான் எல்லாமே என்று வீட்டைவிட்டு வெளியே வந்திருப்பார் அம்ருதா. ஆனால், தற்போது அவரே இல்லை என்று ஆகிவிட்டது.

இதிலிருந்து நிச்சயம் அம்ருதா வெளியே வருவார். சாதியை எதிர்த்து நிற்பேன் என்று கூறுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். அப்படி சாதியை எதிர்க்கும் தைரியத்தை அம்ருதாவிற்கு காதல் கொடுத்துள்ளது என்று கூறும் கௌசல்யா, அவருக்குத் துணை நிற்கப் போவதாகவும் கூறுகிறார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
பிற சாதியை சேர்ந்த ஒருவரின் குழந்தை தன் மகள் வயிற்றில் வளர்ந்தால் நம் சாதியின் மானம் போய்விடும் என்று பார்க்கும் பெற்றோரின் மன நிலையை சாடுகிறார் கெளசல்யா.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X