For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவின் தேர்தல் அறிக்கை 'மோசடியானது': கூடங்குளம் உதயகுமார் சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

இடிந்தகரை: திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மோசடியானது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான சுப. உதயகுமார் சாடியுள்ளார்.

இது தொடர்பாக கூடங்குளம் போராட்டக் குழுவின் பெயரில் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்" என்பது போல தி.மு.க. ஒரு மோசடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மீத்தேன் திட்டத்தை கொண்டுவந்தவர்களே இப்போது எதிர்க்கிறார்களாம்; சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் இப்போது அதை எதிர்க்கிறார்களாம். . மீனவர்களுக்காக சிக்கல் தீர்க்கும் மையம் அமைப்பார்களாம், அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பார்களாம், அவர்களுக்கென தனித் துறையே அமைப்பார்களாம், குமரி முதல் கடலூர் வரை கிட்டும் இடங்களில் எல்லாம் மீன்பிடித் துறைமுகங்களாம்...

அணுசக்தி- கனிமொழியின் கனவு திட்டமா?

அணுசக்தி- கனிமொழியின் கனவு திட்டமா?

ஆனால் மீனவர் வாழ்வை அழிக்கும் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் பற்றி வாயே திறக்க மாட்டர்களாம். மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என எல்லாவற்றையும் பற்றிப் பேசும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் அப்படி மவுனம் சாதிக்கிறது? கனிமொழியின் கனவுத்திட்டம் என்பதாலா?

ஸ்டாலினின் திடீர் தேர்தல் பாசம்

ஸ்டாலினின் திடீர் தேர்தல் பாசம்

மார்ச் 3, 2014 அன்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு, கூடங்குளம் பகுதி மீனவர்கள் மீது திடீர் தேர்தல் பாசம் வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி கூடங்குளம் மீனவர்கள் மீதான வழக்குகளை தமிழக அரசு ஏன் திரும்பப் பெறவில்லை என்று கேள்வி கேட்டு ஸ்டாலின் ஓர் அறிக்கை வெளியிட்டார். அப்பாவி மீனவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறாமல் கும்பகர்ண நித்திரையில் தமிழக முதல்வர் குளிர் காய்ந்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் கடுமையாகச் சாடினார்.

9 மாதமாக என்ன செய்தீர்கள்?

9 மாதமாக என்ன செய்தீர்கள்?

"மீனவர்கள் படும் துயரத்தை உணர்ந்த உச்சநீதிமன்றமே அவர்கள் மீதான எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டு ஒன்பது மாதமாகியும் இதுவரை வாபஸ் வாங்காமல் இருக்கும் ஜெயலலிதா அரசின் போக்கு வேதனையானது, நியாயமற்றது, கண்டிக்கத்தக்கது" என்று கொந்தளித்தார்.

சட்டசபையில் பேசலையே ஏன்?

சட்டசபையில் பேசலையே ஏன்?

ஆனால் அவரும், அவரது கட்சியும் ஒன்பது மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஏன் இந்தப் பிரச்சினை பற்றி இதுவரை எதுவுமேப் பேசவில்லை? சட்டமன்றக் கூட்டங்களில் வாயேத் திறக்கவில்லையே? எங்களுக்காக மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜாவாஹிருல்லா வாதாடியபோதுகூட அவருக்கு உதவவில்லையே, ஏன்?

திருச்சி மாநாட்டில் தீர்மானம் இல்லையே ..

திருச்சி மாநாட்டில் தீர்மானம் இல்லையே ..

அண்மையிலே நடந்த தி.மு.க. மாநாட்டில் கூடங்குளம் பிரச்சினை பற்றியோ, மீனவர்கள் மீதான வழக்குகள் பற்றியோ ஒரு தீர்மானம்கூடப் போடவில்லையே ஏன்?

திமுகவின் நிலைதான் என்ன?

திமுகவின் நிலைதான் என்ன?

கூடங்குளத்தில் 3, 4 அணுஉலைகள் துவங்கப்போவதாக அணுசக்தித் துறை திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டிருக்கிறதே; தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்று ஏன் பேசவேயில்லை? கூடங்குளம் கழிவுகள் கூடங்குளத்திலேயேப் புதைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி அறிவித்தபிறகும் தி.மு.க. பாராமுகமாகவே இருக்கிறதே ஏன்? கல்பாக்கத்தில் அணுக்கழிவு செயலிழக்கச்செய்யும் நிலையம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவை குடியரசுத் தலைவர் மும்பையிலிருந்து வீடியோ கான்ஃபிரான்சிங் மூலமாக நடத்தினாரே; ஏன் தி.மு.க. பேசவில்லை?

எல்லவற்றுக்கும் அனுமதி கொடுத்தது யார்?

எல்லவற்றுக்கும் அனுமதி கொடுத்தது யார்?

மதுரையிலே வடபழஞ்சி கிராமத்தில் அணுக்கழிவு ஆய்வு மையத்திற்கு அனுமதி கொடுத்ததே தி.மு.க. அரசுதானே? தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கொடுத்ததும் தி.மு.க. அரசுதானே? இவற்றைப் பற்றி தி.மு.க. பேசுவதே கிடையாதே ஏன்? 940 நாட்களாக நடக்கும் போராட்டத்தைப் பற்றியும், போராட்டக் கோரிக்கைகள் பற்றியும், போராளிகள் பற்றியும் ஒரு வார்த்தைக்கூட பேச மனம் வரவில்லையே ஏன்? பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நினைக்கிற கதைதான் நினைவுக்கு வருகிறது.

கனவு காணாதீர்கள்..

கனவு காணாதீர்கள்..

மீனவர்கள் மீது தி.மு.க.வுக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் வந்திருப்பது தேர்தல் பாசம். இந்தப் பாசம் திடீரென வரும், தேர்தல் முடிந்ததும், பதவி கிடைத்ததும், அந்தப் பாசம் வந்த வேகத்தில் போய்விடும். இப்படியே தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று கனவு காணாது, உங்கள் கட்சியின் உண்மையான அணுசக்திக் கொள்கை பற்றிச் சொல்லுங்கள். உங்கள் கட்சிக்கும் அணுசக்தித் துறைக்கும் என்ன கள்ள உறவு என்று தமிழ் மக்களுக்குத் தெரிவியுங்கள்.

கனிமொழி கொள்கைதான் திமுகவினுடையதா?

கனிமொழி கொள்கைதான் திமுகவினுடையதா?

அணுசக்தி ஒன்றே இந்தியாவின் சுபிட்சத்துக்கு வழி என்று மனசாட்சிக்கு எதிராக தனது நாடாளுமன்ற கன்னிப் பேச்சில் பேசி, பிரதமர் மன்மோகன் சிங்கையும், சோனியா காந்தியையும் கவர்ந்து, மத்திய அமைச்சரவையில் பதவி பெற முயற்சித்தாரே உங்கள் அன்புத் தங்கை...அந்தப் பேச்சுத்தான் தி.மு.க.வின் கொள்கையாக இன்னும் நீடிக்கிறதா என்று தெளிவுபடுத்துங்கள்.

பாசாங்கு திமுக

பாசாங்கு திமுக

மக்களை மதிக்காத, சனநாயகப் பண்புகளற்ற, பிரதமர் கனவில் மிதக்கும் அ.தி.மு.க.வும் கூடங்குளம் பற்றியோ, அணுசக்தி பற்றியோ பேசவில்லைதான். ஆனால் தமிழினத்துக்காக தலையைக் கொடுப்பதுபோல பாசாங்கு மட்டுமே செய்யும் தி.மு.க.வுக்கு அவர்களை விமர்சிக்கும் தகுதி இல்லை. மொத்தத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழரும் அறிந்த உண்மை. உண்மையைச் சொல்லி, நன்மையைச் செய்தால்தான் நீங்கள் இரண்டு பேரும் இனி தமிழகத்தில் அரசியல் நடத்த முடியும். தமிழ் மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்.

இவ்வாறு அதில் உதயகுமார் கூறியுள்ளார்.

English summary
People's Movement Against Nuclear Energy leader S P Udayakumar slams DMK Manifesto for Lok Sabha elections which was released on yesterday by DMK leader Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X