குறிஞ்சாக்குளம் புத்தாண்டு! கடுமையாக எதிர்த்த இடைநிலை சாதி! எஸ்.சி பிரிவினர் விழா நடத்த கட்டுப்பாடு
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள குறிஞ்சாக்குளம் கிராமத்தில் பட்டியலின பிரிவு மக்களால் நடத்தப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு இடைநிலை சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடுமையான போலீஸ் பாதுகாப்பிற்கு இடையே அங்கே புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
சங்கரன்கோவில் வருவாய் கோட்ட அலுவலர் (ஆர்.டி.ஓ.) ஜே.கவிதா உத்தரவின் பெயரில் கடுமையான பாதுகாப்பிற்கு இடையே இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன. குறிஞ்சாக்குளத்தில் வசிப்பவர்களுக்காக ஜனவரி 1, 2025 அன்று அரசுப் பொரம்போக்கு நிலத்தில் குழந்தைகளுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அங்கே உள்ள பட்டியலின பிரிவினரால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அதே கிராமத்தை சேர்ந்த இடைநிலை சாதியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 2019 வரை அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை எதிர்கொண்டதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த போட்டிக்கு எதிராக இடைநிலை சாதியினர் கோர்ட்டுக்கு கூட சென்றனர். இதனால் அங்கே கலவரம் ஏற்படும் சூழல், அச்சம் நிலவியது. இதையடுத்து அங்கே புத்தாண்டு விழாவை நடத்துவதற்காக 18 வழிகாட்டுதல்களை சங்கரன்கோவில் வருவாய் கோட்ட அலுவலர் (ஆர்.டி.ஓ.) ஜே.கவிதா வழங்கினார்.

கடும் போலீஸ் பாதுகாப்பிற்கு இடையே காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை விழா நடத்த அனுமதிக்கப்பட்டது. டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற அமைதிக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, புத்தாண்டு நிகழ்ச்சிக்கான நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிஞ்சாகுளத்திற்குள் சாதி அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய நபர்கள் உட்பட வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கிராமத்திற்குத் திரும்பும் குறிஞ்சாகுளத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே காவல்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக, அமைப்பாளர்கள் போட்டி பங்கேற்பாளர்களின் விவரங்களை காவல்துறைக்கு வழங்க வேண்டும். சாதி அடிப்படையிலான கொடிகள், பதாகைகள், கோஷங்கள் அல்லது பாடல்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. விளையாட்டுகளுக்கு முன்பும், போட்டியின் போதும், பின்பும் பட்டாசுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பந்தல்கள் போன்ற தற்காலிக கட்டமைப்புகள் அனுமதிக்கப்படாது.
மேலும் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்பட்ட அரசாங்க நிலத்தில் மட்டுமே விளையாட்டை நடத்த வேண்டும். ஒலி அமைப்புகளை காவல்துறையின் முன் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்த முடியும், போதையில் உள்ள நபர்கள் யாரும் மைதானத்திற்குள் நுழைய கூடாது உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கு 250 போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.
விதிமுறைகளை மீறினால், நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்து, ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., எச்சரித்தார். 2019 வரை அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை எதிர்கொண்டதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த விளையாட்டை எதிர்த்து ஆதிக்க சாதியினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினர். ஆனால், விளையாட்டு நடத்த தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications