• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

எழுத்துப் புரட்சியாளர் ஜெ.கே. என்னும் ஜெயகாந்தன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

"எனக்கு நானே கடவுள்... எனக்கு நானே பக்தன்... என் வாழ்நாள் எல்லாம் திருநாள்... மரணம் எனக்கு கரிநாள்!" என்று புரட்சிகரமாக எழுதிய எழுத்துலக சிற்பி ஜெயகாந்தன் இன்று நம்மிடையே இல்லை. உடல் நலக்குறைவினால் அவரது இறுதி மூச்சு நேற்றிரவோடு நின்று விட்டது.

ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜெ.கே என்று அழைக்கப்பட்டவர். அவருக்கு 2 மனைவிகள், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சிறிது காலமாக உடல்நலக் குறைவுடன் இருந்த ஜெயகாந்தன் நேற்றிரவு மரணமடைந்துவிட்டார்.

பன்முகத்திறமை

பன்முகத்திறமை

தமிழ் இலக்கிய உலகில் புரட்சிகர சிந்தனைகளுக்கு வித்திட்ட ஜெயகாந்தன், கடலூரில் 1934-ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், விமர்சகர் என பன்முகத் திறமை கொண்டவர்.

பள்ளிப்படிப்பு மட்டுமே

பள்ளிப்படிப்பு மட்டுமே

ஜெயகாந்தனுக்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தது. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரையே பள்ளிக்குச் சென்றார். தனது 12-ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, விழுப்புரத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு, அவரது மாமா கம்யூனிஸ கொள்கைகளையும், சுப்பிரமணிய பாரதி படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இலக்கிய காதலர்

இலக்கிய காதலர்

ஜெயகாந்தனை அவருடைய தாய் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அந்த உறவினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது இளமைக்காலத்தை கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு பரிச்சயமானார். அந்தக் கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடல்களைக் கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால், கட்சியின் அப்போதைய உறுப்பினர் ஜீவானந்தம், அவருக்குத் தமிழாசிரியர் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.

ஓய்வில் எழுதிய ஜே.கே

ஓய்வில் எழுதிய ஜே.கே

தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலை பார்த்தார். 1949-இல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், தஞ்சாவூரில் காலணி விற்கும் கடையில் தாற்காலிகமாகப் பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

எழுத்துலக சிற்பி

எழுத்துலக சிற்பி

ஜெயகாந்தன் தனது இலக்கிய வாழ்க்கையை 1950-களில் தொடங்கினார். "சரஸ்வதி', "தாமரை', "கிராம ஊழியன்', "ஆனந்த விகடன்' "அமுதசுரபி', "தினமணி கதிர்' உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. அவரது படைப்புகள் அனைத்தும் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவர் தலை சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார்.

சினிமாவில் ஜெ.கே

சினிமாவில் ஜெ.கே

எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்த அவர், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். அவரது படைப்புகளான "உன்னைப் போல் ஒருவன்', "சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற நாவல்கள் படமாக்கப்பட்டன. "உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு, சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

ஜெ.கே வின் அழியாக காவியங்கள்

ஜெ.கே வின் அழியாக காவியங்கள்

ஜெயகாந்தன், 40 நாவல்கள், 200 சிறுகதைகள் பல்வேறு வாழ்க்கை வரலாறு, குறுநாவல்கள், கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார். "வாழ்விக்க வந்த காந்தி 1973', "ஒரு கதாசிரியனின் கதை', "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', "ரிஷிமூலம்', "கருணையினால் அல்ல', "கங்கை எங்கே போகிறாள்' ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

விருதுக்கு பெருமை

விருதுக்கு பெருமை

கடந்த 2002-ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக மத்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். 2009-ஆம் ஆண்டு மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதை தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறையாகப் பெற்றார். இது தவிர, 1972-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதும், 2011-ஆம் ஆண்டு ரஷிய விருதும் பெற்றார்.

கம்யூனிஸ்ட் டூ காங்கிரஸ்

கம்யூனிஸ்ட் டூ காங்கிரஸ்

காலப்போக்கில் கம்யூனிஸ கொள்கைகளிலிருந்து மாறுபட்ட ஜெயகாந்தன், காமராஜரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் அவரது தொண்டனாக மாறி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

தனது சிறந்த படைப்புகளால் காலத்தை வென்ற ஜெயகாந்தன் உடல் நலக்குறைவினால் நேற்று மரணமடைந்தார். இறுதிச் சடங்குகள் சென்னை வடபழனி ஏவிஎம் மயானத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. ஜே.கே மறைந்தாலும் அவர் படைத்த காவியங்கள் என்றும் அழியாத புகழ் பெற்றவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

English summary
Jayakanthan has written around 40 novels and 200 short stories and used his pen effectively against social injustices and economic inequality. His popular novel, 'Sila Nerangalil Sila Manithargal', which was later made into a film, won him the Sahitya Akademi Award in 1972. He was also a recipient of the Jnanpith Award in 2002.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X