For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெங்கு கொசு "டங்கு"ன்னு நம் மண்டையில் அடித்து சொல்வது என்ன ??

Google Oneindia Tamil News

சென்னை: டெங்கு காய்ச்சல் பீதி தமிழகத்தில் வெகு வேகமாக பல உயிர்களை பலி வாங்கிக்கொண்டிருக்கிறது. தினம் தோறும் தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்டவர்கள் இந்த டெங்கு காய்ச்சலால் இறந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்கதை ஆகிக் கொண்டிருப்பது கவலைக்குரிய விஷயம் ஆகும்.

டெங்கு காய்ச்சலில் எல்லா வயதினருக்கும் பாதிப்பு என்றாலும் கூட இதில் அதிகம் இறப்பவர்கள் சிறுவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு பொதுவாகவே சிறு வயது முதல் ஒரு 7 அல்லது 8 வயது வரை காய்ச்சல் சளி என்று வந்து அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டிருக்கும்.

அதற்கு காரணம் அவர்களுக்கு அந்த வயதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் இருப்பதே. 8 அல்லது 10 வயதில் மெல்ல அவர்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று இந்த தொந்தரவுகள் குறையும். இதனாலேயே டெங்கு கூட அதிக அளவில் குழந்தைகளை சிறுவர் சிறுமிகளை தாக்குகிறது.

கைக்குழந்தைகளும் காவு

கைக்குழந்தைகளும் காவு

கைக்குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் காவு வாங்கி கொண்டிருக்கிறது இந்த காய்ச்சல். இந்த கொசு பகலில் கடிக்கும் கொசு என்பதால் நம் குட்டி குழந்தைகளை பகலில் தூங்க வைக்கும்போது தாய்மார்கள் கட்டாயம் கொசு வலை வைத்து அவர்களை தூங்க வைப்பது நல்லது. தொட்டில் என்றால் தொட்டிலை மூடும் நீள கொசுவலைகள் அல்லது கட்டில் என்றால் முழு கொசு வலைகளையோ அல்லது சிறு நீள சதுர வடிவ கொசு வலைகளையோ பயன்படுத்தி அவர்களை பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்துக் கொள்ளலாம்.

மக்களைக் குற்றம் சாட்டும் டாக்டர்கள்

மக்களைக் குற்றம் சாட்டும் டாக்டர்கள்

டாக்டர்கள் இன்று டெங்கு குறித்து கவலையோடு சொல்வது என்னவென்றால் மக்களின் அலட்சியம். அதாவது காய்ச்சல் வந்தவுடன் ஆஸ்பத்திரிக்கு வராமல் எதோ கடையில மாத்திரை வாங்கி சாப்பிட்டு சமாளித்து கடைசியாக மருத்துவமனைக்கு பிந்தைய கட்டத்தில் வரும்போது அவர்களால் காப்பாற்ற முடியாத நிலைக்கு மக்கள் போவதாக கவலை தெரிவிக்கின்ற்னர். இன்னும் சில நோயாளிகளை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தும்போது நோயின் தன்மை அறியாத பொது மக்கள் அணிக்கு தங்குவதை சில நேரம் தவிர்ப்பதும் சில நாட்கள் தள்ளிப்போடும் அலட்சியமும் காரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மருத்துவமனையில் தங்கும்போது platelet எண்ணிக்கையை சரிபார்த்தல் உடம்பின் நீர்ச்சத்து குறைபாடு இரண்டையும் அவர்களால் சரியாக கண்காணித்து டெங்குவை சீரியஸாக இரத்த குருதி டெங்கு என்ற நிலைக்கு தள்ளாமல் அதற்க்கு முன்னமே சாதாரண நிலையில் சரி செய்துவிடலாம் .

மக்களிடம் உள்ள கெட்டப் பழக்கம்

மக்களிடம் உள்ள கெட்டப் பழக்கம்

எந்த நாட்டிலும் இல்லாத சில வினோத பழக்கங்கள் நம் நாட்டில் இருக்கிறது. மேலை நாடுகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்தகங்கள் மருந்து தருவதே இல்லை. அனால் நமக்கு எல்லாம் மெடிக்கல் ஷாப்பில் இருக்கிறவர்தான் டாக்டர். வீட்டுக்கு போற வழியிலே அப்படியே மருந்தகம் போய் அண்ணன் ஒரு தலைவலி மாத்திரை, ஒரு காய்ச்சல் மாத்திரை, ஒரு வயித்துப்போக்கு மாத்திரை என்று ஏதாவது ஒன்னு வாங்கி மடக்குனு வாய்ல போட்டுட்டு போயிட்டே இருப்போம். இதுக்கு முக்கியக் காரணம் நமக்கு பழகிடுச்சு அல்லது டாக்டர்களைப் பார்க்க போனா நூறு அல்லது 150 ரூபாய் கொடுக்கனும்ங்கிற நினைப்பும்தான். . இப்போ டாக்டர்கள் உங்களுக்கு டெங்கு இருக்கும் பட்சத்தில் அதுபற்றி தெரியாமல் நீங்கள் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்வது உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்னு சொல்லி இருக்காங்க. அதனால மெடிக்கல் ஷாப் ல குழந்தைக்கு எதோ சாக்லேட் வாங்கிற மாதிரி மருந்து வாங்குற பழக்கத்தை நாம கண்டிப்பா விட வேண்டிய நேரம் இது .

எல்லாவற்றுக்கும் மாத்திரை எதற்கு

எல்லாவற்றுக்கும் மாத்திரை எதற்கு

எல்லாத்துக்கும் மாத்திரையை விழுங்கி விழுங்கி பழக்கப்பட்டுட்டோம். முன்னெல்லாம் தொண்டை கரகரப்பு என்று வந்தால் அம்மா சின்ன வெங்காயமும் கொஞ்சம் கருப்பட்டியும் சேர்த்து வச்சு தருவாங்க. வாய திறக்காம அத சாப்பிட்டு முடிக்கணும். ஒரு மாதிரி அந்த வெங்கயாத்தோட காட்டம் தொண்டையை அடைக்க கண்களில் கண்ணீர் கூட கொஞ்சம் கட்டினாலும் கூட பாடய்ப்படுத்தும் தொண்டை வலியை இந்த வெங்காயம் சரி பண்ணிவிடும். இப்ப அப்படி யார் சாப்பிடறோம். ஸ்ட்ரெப்சில்ஸ், ஹால்ஸ்னு போட்டு சப்பிக்கிட்டு இருக்கிறோம். மூட்டுவலிக்கெல்லாம் எண்ணெயை காய்ச்சி பூசின காலம் போய் வயதானவர்கள் கூட மூட்டு வலிக்கும் மாத்திரையை சாப்பிட்டுட்டு தூங்குறாங்க. மாறிவிட்டோம். மாற்றி விட்டோம் பழக்கங்களை. இயற்கையோடு இயைந்த வாழ்வு பக்க விளைவில்லாதது இனிமையானது என்பதை உணர வேண்டிய நேரமும் கூட இது.

இயற்கை மருத்துவத்திற்குத் திரும்புவோம்

இயற்கை மருத்துவத்திற்குத் திரும்புவோம்

இயற்கையாகவே இஞ்சி பூண்டு நல்ல மிளகு மஞ்சள் என்று அத்தனை மருத்துவ குணங்கள் பொதிந்த ரச சாதம் சாப்பிட்டு காய்ச்சலை துரத்திய நாம் இப்போது காய்ச்சல் என்றால் பிரட் பன் வாங்கி கடிக்கும் அறிவாளிகளாக மாறிவிட்டோம். அனால் இன்று இந்த டெங்குவை சமாளிக்க அரசே பப்பாளி சாறு அருந்துங்கள் என அறிவுறுத்தி எல்லா இடங்களிலும் நிலவேம்பு நீர் என மக்களுக்கு கொடுப்பது ஆகச் சிறந்தது. ஆங்கில மருந்தோடு நெடுங்காலம் பின்னி பிணைந்து விட்ட நம்மளோட பழமையான சித்த மருத்துவத்தின் பின் இந்த டெங்கு நம்மை இழுத்து வந்திருப்பது பெரும் ஆச்சரியம் தான். இது மகிழ்ச்சியான விஷயமும் கூட. ஆண்டிபயாடிக் கூடாது, பப்பாளி சாறில் இருக்குது நோய் எதிர்ப்பு சக்தி அதை குடிங்க என்று கூறுகிறார்கள். உடம்பில் பிலடெலேட்ஸ் கூடுவதற்கு உலர் திராட்சை என்று இயற்கை உணவுகளையே இதில் முன்னிறுத்துகிறார்கள். நிலவேம்பு நீர் குடிக்கும் நாம் எல்லாரும் "பாக் டு இயற்கை மருத்துவம்" என்றானால் கிரேட் தான்.

கொசுவை ஒழிக்க தேங்காய் சவுரி புகை

கொசுவை ஒழிக்க தேங்காய் சவுரி புகை

இப்போ எல்லா வீடுகளிலும் கொசுவை ஒழிக்க கொசுவர்த்தி சுருள் ஒரு காயில் அல்லது அந்த லிக்விட் டப்பாக்கள் கட்டாயம் இரவுகளில் பயன்படுத்துகிறோம். அதிலே விசித்திரம் என்னவென்றால் முதலில் இந்த வாசத்துக்கு ஓடிப்போன கொசுவெல்லாம் இப்போது இந்த மருந்து வாசத்துக்கு பழகி வழக்கம்போல வந்து நறுக்குன்னு கடிச்சுட்டு போகிறது. முன்னெல்லாம் கொசுவை விரட்ட தேங்காய் சவுரியில் புகை போடும் பழக்கம் உண்டு. பூச்சிகள் வீட்டுக்குள் அண்டாமல் இருக்க மண் தரைகளில் சாணி மொழுகும் பழக்கம் உண்டு. வீடு வாசலில் வேப்பமர காற்று உண்டு. வீட்டில் செவ்வாய் வெள்ளி என வாரம் இரண்டு தினம் வீட்டில் உள்ள எல்லோருக்கும் சாம்பிராணி காட்டி வீட்டின் எல்லா அறைகளுக்கும் எல்லா மூலைகளுக்கும் சாம்பிராணி வாசம் காட்டும் பழக்கம் உண்டு . இந்த பழக்கங்கள் எல்லாம் நாம் விடாமல் தொடர்ந்திருந்தால் கூட டெங்கு போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். இனியாவது செய்யலாம்.

சுத்தம் சோறு போடும்

சுத்தம் சோறு போடும்

சுத்தம் சோறு போடும்னு சொல்வாங்க . ஆனா இன்னைக்கு சுத்தம் உங்கள நோய்களிருந்து காத்து உயிரையும் சேர்த்துக் காக்கிறது. ஏடிஸ் என்று சொல்லப்படுகிற டெங்கு கொசுவானது, நல்ல தண்ணீரில் தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யுமாம். அதனால் நாம குளிக்க, குடிக்க என்று தண்ணீர் வைத்திருக்கும் தொட்டி , பாத்திரங்கள் என எல்லாவற்றையும் மூடி வைப்பது நல்லது. தோட்டத்தில் கூட அதிக தண்ணீர் தேக்கமில்லாமல் பார்த்து கொள்வது அவசியம். நம்ம வீட்டை சுற்றி கிடக்கிற பழைய ஷூக்கள், உடைஞ்ச வாளி, கேன் , பாட்டில் அப்புறம் நம்ம தோட்டத்தில அசால்டாக வீசி எறியும் தேங்காய் சிரட்டை, முட்டை தோடு இப்படி தண்ணி தேங்கிற எதுவா இருந்தாலும் இது தானே என்று அலட்சியம் செய்யாமல் அகற்ற வேண்டும். நம் சுற்றுப்புறத்தையும் நம் வீட்டையும் சுத்தப்படுத்துவதற்குரிய நேரம் இது. நம்ம வீட்டை மட்டும் சுத்தப்படுத்திவிட்டு அப்பாடா இனி கொசு வராது என்று கைப்புள்ள வடிவேலு மாதிரி இப்படி தூங்கிறது என்ன சுகம் என்று நீங்கள் மல்லாந்து தூங்க நினைத்தால் அதுவும் வடிவேலு காமெடி தான். நம்ம வீடை மட்டும் சுத்தமாக வைத்தால் போதாது . நம்ம வீட்ல குஞ்சு பொரிக்கிற கொசு நம்மளை மட்டுமா கடிக்க போகுது. எல்லோரையுமதான். நம் தெருவை கூட சுத்தப்படுத்த வேண்டும். நகராட்சிகாரர்களுக்கு மட்டும் அல்ல தினம் அந்த தெருவில் நடந்து போகும் நமக்கும் அதை சுத்தமாக வைக்கும் கடமை உண்டு.

நாமளே இறங்க வேண்டும்

நாமளே இறங்க வேண்டும்

சாலையில் ஒரு பாட்டில் மூடி கிடந்தா கூட அத கொஞ்சம் குனிஞ்ச எடுத்து அப்புறப்படுத்த வேண்டிய நேரம் இது. நான் ஏன் ரோட்டுல கிடைக்கிறத எடுக்கணும் னு விதண்டாவாதம் பேசாம இத செய்யலாம் தப்பில்ல. நம்ம தொப்பையும் சேர்ந்து குறையுமே. ரோட்டுல கொஞ்சம் குப்பையும் குறையும். ஒரு சின்ன பாட்டில் மூடி அளவிலுள்ள நீர் கூட போதுமாம் இந்த கொசு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய. நீங்க ரோட்டுல கண்டும் காணாம போற அந்த பாட்டில் மூடியில் கொசு முட்டையிட்டு நாளைக்கு அது உங்களை தான் வந்து கடிக்க போகுது. அதனால நீங்க யாருக்கோ நல்லது செய்யலை. உங்களுக்கு தான் நல்லது செய்கிறீர்கள் என்ற புரிதல் நமக்கு வர வேண்டிய நேரம் இது .

எதிர்பார்ப்புகள் இல்லாமல்

எதிர்பார்ப்புகள் இல்லாமல்

அரசாங்கம் என்ன தான் பண்ணுகிறது என்று கேள்வி எல்லாம் எழுப்பாமல் எப்படி சென்னையில் வெள்ளப்பெருக்கு என்று வந்ததும் யார் என்ன என்று பார்க்காமல் முழு மனித நேயத்தோடு இறங்கினோமோ அப்படி நாம எல்லாரும் இந்த டெங்குவை ஒழிப்பதற்கு சேர்ந்து இறங்க வேண்டிய நேரம் தான் இது. எல்லோரும் வீட்டை சுத்தப்படுத்துவோம். வேலை செய்கின்ற அலுவலகத்தை சுத்தப்படுத்துவோம். விடுமுறை நாட்களில் அல்லது மாலை வேளைகளில் நம் தெருவை, பக்கத்துல காலியா குப்பை மூடி கிடக்கிற கிரௌண்டை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சுத்தப்படுத்தலாம். மாற்றம் எங்கயோ இருந்து கட்டாயம் வராது நம்ம ஒவ்வொருவர் கிட்ட இருந்து தான் வரணும். இந்த தொடர் டெங்கு மரணங்கள் நம் குப்பைகளின் முடிவுரைகளாககவும் நம் அழுக்குககளின் மரணங்களாவும் இருக்கட்டும். "இனியாவது கொஞ்சம் மாறுங்கடா" இது தான் அந்த டெங்கு கொசு நம்மை டங்குன்னு கடிச்சு சொல்லிட்டு போவது போலத்தான் நமக்குத் தோன்றுகிறது.

Inkpena சஹாயா

English summary
Let us unite to defeat the menace of Dengue fever from Tamil Nadu and the Author Inkpena Sahaya calls for the unity among the people to keep their environment neatly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X