மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.. பாஜகவிற்கு நற்பெயரை பெற்றுத்தர பாடுபடும் அதிமுக.. ஸ்டாலின் அட்டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் கோபத்தை திசை திருப்ப அதிமுக அமைச்சர்கள் பாடுபடுகிறார்களே தவிர, நிச்சயமாக தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடவில்லை என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் பழங்குடியின மாணவியர் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த, "மாணவியருக்கு ஊக்கத்தொகை" வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட அதிமுக அரசு அந்த மாணவிகளுக்கு வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

2004-2005 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் 36 சதவீதம் பேர் மட்டுமே பத்தாம் வகுப்புவரை கல்வி பயிலச் சேர்ந்தார்கள் என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்த "ஊக்கத்தொகை" வழங்கும் திட்டம் மத்திய அரசின் 2006-2007 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

உதவித் தொகை

உதவித் தொகை

இந்த திட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் 9 ஆம் வகுப்பில் சேர்ந்தவுடன் அவர்களது வங்கி கணக்கில் 3000 ரூபாய் வைப்புத்தொகையாக டெபாசிட் செய்யப்படும் என்றும், அந்தப் பணத்தை 18 வயதை எட்டியபிறகு அந்த மாணவியர் வட்டியுடன் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

வேதனை

வேதனை

சமூக பொருளாதாரக் காரணங்களுக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் தங்கள் உயர்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியை கைவிட்டு விடக்கூடாது என்ற சிறப்பான நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட அந்தத் திட்டத்தை அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து ஆறு வருடங்களாகியும் உருப்படியாக செயல்படுத்தவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

குளறுபடி

குளறுபடி

தமிழகத்தில் உள்ள 87 ஆயிரத்து 166 மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய 36.38 கோடி ரூபாய் நிதி, மாநில அரசின் குளறுபடிகளால் வங்கிக் கணக்கில் இருந்து, மீண்டும் மத்திய அரசுக்கே திரும்பி விட்டது என்பதிலிருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதில் அதிமுக அரசு படுதோல்வியை சந்தித்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

நிலுவைத் தொகை

நிலுவைத் தொகை

இது ஒருபுறமிருக்க 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளிலும், பதினொன்றாம் வகுப்பு முதலும் படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர் கல்வி உதவித் தொகைக்காக 2598.17 கோடி ரூபாய் இன்னும் மத்திய அரசிடமே நிலுவையில் இருக்கிறது என்று தெரிய வருகிறது. சமீபகாலமாக ஒவ்வொரு அதிமுக அமைச்சராக டெல்லி சென்று, அங்குள்ள மத்திய அமைச்சர்களை சந்தித்து "தமிழகத்திற்கு நிதி பெற்றோம்" என்று டெல்லியில் நின்றுகொண்டு பேட்டியளிப்பதை தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். மத்திய அமைச்சரை தலைமைச் செயலகத்திற்கே அழைத்துச் சென்று ஆய்வுக்கூட்டம் நடத்த அனுமதித்த முதலமைச்சரைப் பார்க்கிறோம்.

முயற்சி இல்லை

முயற்சி இல்லை

ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கான நிதியைப் பெறுவதற்காக இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டெல்லி செல்லவும் இல்லை. மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்திற்கான நிதியை கேட்டுப் பெற்றதாகவும் செய்தி வரவில்லை. அதுமட்டுமல்ல, பொதுப்பணித்துறை அமைச்சர் டெல்லி சென்று அங்குள்ள மத்திய நீர் வள ஆதாரத்துறை அமைச்சரை சந்தித்து "காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டோம்" என்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் டெல்லி சென்று லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் "நீட் தேர்வுக்கு" மத்திய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் அனுமதியை பெற்று விட்டோம் என்று அறிவிக்கவில்லை.

திசை திருப்ப..

திசை திருப்ப..

"காவேரி மேலாண்மை வாரியம்" "விவசாயிகள் கடன் தள்ளுபடி" "நீட் தேர்வு" "ஹைட்ரோ கார்பன் திட்டம்" "தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது" உள்ளிட்ட பல்வேறு தமிழகம் சார்ந்த முக்கியமான பிரச்சினைகளை மத்திய அமைச்சர்களை சந்தித்து நிறைவேற்றிவிட்டதாக அறிவிக்க முடியாத அதிமுக அமைச்சர்கள், ஒவ்வொருவராக டெல்லிக்குப் படையெடுப்பதும், அங்கு நின்றுகொண்டு "இவ்வளவு நிதி பெற்று விட்டோம்" என்று அறிவிப்பதும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் கோபத்தை திசை திருப்ப அதிமுக அமைச்சர்கள் பாடுபடுவது போல இருக்கிறதே தவிர, நிச்சயமாக தமிழக மக்களின் நலனுக்காக அல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

நிதிப் பெற..

நிதிப் பெற..

இந்நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியரின் நலன் கருதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உடனடியாக டெல்லி சென்று, மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள 2500 கோடி ரூபாய்க்கும் மேலான, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியரின் நிதியை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சமூக பொருளாதார பாதிப்புகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்கு எவ்விதத்திலும் தடையாக அமைந்து விடக்கூடாது என்பதால், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்துள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கு 3000 ரூபாய் வைப்புத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The opposition leader M K Stalin has attacked State government for not depositing Rs. 3000 cash to SC/ST students bank accounts.
Please Wait while comments are loading...