For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ குடும்பத்தைச் சேர்ந்த நான் 2 நாளாக ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டேனே... தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி

Google Oneindia Tamil News

சென்னை : எம்ஏஎம் ராமசாமிக்கும் அவரது சுவீகார மகன் அய்யப்பனுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், சுவீகார மகன் மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.

எம்ஏஎம் ராமசாமி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

MAM.Ramasamy has told many complaints on adopted son

நான் பாரம்பரியமான நகரத்தார் சமூகத்தை சேர்ந்த செட்டிநாடு இராஜா குடும்பத்தினை சேர்ந்தவன். என்னுடைய பாட்டனார் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் மற்றும் தகப்பனார் ராஜா சர் முத்தையா செட்டியாரும், அவர்களுடைய சகோதர்களான ராமநாதன் செட்டியார் மற்றும் சிதம்பரம் செட்டியார் அவர்களும் கடந்த 100 வருடங்களாக பல தொழில்களை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள்.

எங்கள் குடும்பத்திற்கு சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பர்மாவிலும், மேலும் பர்மாவில் செட்டிநாடு வங்கியானது 100க்கு மேற்பட்ட கிளைகள் கொண்டு இயங்கி வந்தது. இதுமட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் இலங்கையிலும் அதிகப்படியான சொத்துக்கள் இருந்தது.

என்னுடைய தகப்பனார் இந்தியன் வங்கியில் தலைவராக இருக்கும் போது பல இளைஞர்களுக்கு வேலை கொடுத்து அவர்கள் குடும்பம் முன்னேற உதவி செய்திருக்கிறார்கள். மேலும் இந்தியன் வங்கியில் அதிகப்படியான பங்குகள்
எங்களுடையதுதான். இதுமட்டுமில்லாமல் பல தொழில்களையும் ஆரம்பித்து அதிகப்படியான நபர்களுக்கு வேலை கொடுத்து வருகின்றோம்.

உண்மை இவ்வாறு இருக்க இவற்றையெல்லாம் மறைந்து ஐயப்பன், இக்குழுமத்தை தானே உருவாக்கியதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்.

மகனை சுவீகாரம் எடுப்பதன் நோக்கம் வயதான காலத்தில் சுவீகாரம் எடுத்த பெற்றோரிடம் அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பதற்காகவும், குடும்ப பாரம்பரியத்தை காப்பாற்றவும், நிர்வாகங்களை கவனிப்பதற்கும் மற்றும் சொத்துக்களை
பராமரிப்பதற்கும் ஆகும்.

MAM.Ramasamy has told many complaints on adopted son

ஐயப்பன் அவர்களின் நடவடிக்கைகளில் என்னை மிகவும் பாதித்த விஷயம் என்னவென்றால் இறந்து போன எனது மனைவி திருமதி. சிகப்பி ஆச்சி அவர்களுக்கு திதி கூட கொடுப்பதில்லை.

என்னுடைய மூதாதையர்களுக்கு எங்கள் குல வழக்கப்படியும் பெரியவர்களின் திருவுருப்படங்களுக்கு பூ போடுதல், மாலை அணிவித்து மரியாதை செய்வது கூட இல்லை.

நான் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்தபோது ஐயப்பனோ அல்லது அவரது குடும்பத்தாரோ யாரும் என்னை சந்தித்து நலம் விசாரிக்கவில்லை. மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் கூட செய்ய முன்வரவில்லை.

என்னுடைய சொந்த பயன்பாட்டுக்கும், செட்டிநாடு இல்ல பயன்பாட்டுக்கும் இருந்த கார்கள் அனைத்தையும் எடுத்து சென்றுவிட்டார். நான் தற்போது சொந்த உபயோகத்திற்காக புதிய கார் வாங்கி உள்ளேன்.

நான் பயன்படுத்தி கொண்டிருக்கும் தொலைப்பேசி இணைப்புகளுக்கு பணம் கட்டாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனக்குத் தெரியாமல் என்னுடைய தொலைபேசி இணைப்பை நிரந்தரமாக துண்டிப்பதற்கு கடிதம் கொடுத்துவிட்டார்.

எனக்கும் செட்டிநாடு இல்லத்தில் வேலை பார்க்கும் வேலை ஆட்களுக்கும் உணவு தயாரிப்பதற்கு தேவையான மளிகை சாமான் பொருட்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் உணவு சமைப்பதில் தடை ஏற்பட்டது. அதனால் நாங்கள் இரண்டு நாட்கள் ஓட்டலில் இருந்து உணவு வாங்கி சாப்பிட்டு வந்தோம்.

எனது மனைவியின் அறைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் மூடி வைத்துவிட்டார். இதனால் நான் அங்கு சென்று மனைவியின் திருவுருவப் படத்திற்கு பூ போட்டு அஞ்சலி செலுத்த முடியவில்லை.

எங்களது குடும்பத்தின் விலைமதிப்பில்லா, கணக்கிடமுடியாத தங்கம், வெள்ளி, வைர நகைகள் இருக்கும் அறையை ஐயப்பன் பூட்டிச் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார்.

டெல்லி, மும்பை, பெங்களுர், கொச்சின், கோயம்பத்தூர் மற்றும் அனைத்து ஊர்களில் இருக்கும் எங்கள் இல்லங்கள் அனைத்தும் பூட்டி சென்றுவிட்டார். என்னை அங்கு தங்குவதற்கு அனுமதிப்பதில்லை.

2013 வரை நான் வசிக்கும் செட்டிநாடு அரண்மனைக்கு ஒரு வழி மட்டுமே இருந்தது. என் முன்னோர்களை போலவே நான் அரண்மனையை கோயிலாக கருதி வந்தேன். ஆனால் ஐயப்பனோ அரண்மனைக்கு பின்புறம் தனியாக ஒரு வழி (ஈஸ்ட் போர்டிகோ) அமைத்து அவ்வழியை பயன்படுத்தி வருகிறார்.

எங்கள் குல வழக்கப்படி தத்து எடுத்ததை ரத்து செய்த பிறகு இவர் எந்த அடிப்படையில் என்னை தகப்பனார் என்று பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கூறுகிறார்.

எனது அனைத்து நிறுவனங்களிலிருந்த பெரும்பான்மையான பங்குகளை என்னிடமிருந்து நயவஞ்சகமாக நடித்து, நம்பிக்கை மோசடி செய்து தானம் என்ற பெயரில் பெற்றுக் கொண்டார். என்னிடமிருந்து 1999ம் ஆண்டே அனைத்து நிறுவனங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஐயப்பன் எடுத்துக் கொண்டுவிட்டார். ஆயினும் அவரின் நிர்வாகத்தில் நான் எப்போதும் தலையிட்டதில்லை.

மேலும் எனது மனைவி சிகப்பி ஆச்சி 24.03.2006 அன்று இறந்த பிறகு அவரின் பெயரில் இருந்த செட்டிநாடு சிமெண்ட்ஸ் மற்றும் எங்களின் மற்ற நிறுவன பங்குகள் அனைத்தையும் மிகவும் சாதுர்யமாக பேசி நடித்து என்னை நம்ப வைத்து அவரது மனைவி திருமதி கீதா ஐயப்பன் அவர்களின் பெயருக்கு மாற்றி கொண்டுவிட்டார். இப்போதுதான் அவரது நம்பிக்கை மோசடி தெரிய வருகிறது.

60 கோடியிலிருந்து 4000 கோடியாக தொழில் வளர்ச்சியை கொண்டு வந்ததாக சொல்லும் ஐயப்பன், 09.09.2014 அன்று ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் 600 கோடியிலிருந்து 4000 கோடியாக உயர்த்தினேன் என்று கூறியுள்ளார். அது எப்படி
திடீர் என்று 60 கோடியாக குறைந்தது என்பதை ஐயப்பன் தான் விளக்க வேண்டும்.

1999ல் எங்கள் குழுமத்தின் மொத்த மதிப்பை மறைத்துவிட்டு, செட்டிநாடு சிமெண்ட் கம்பெனியின் மதிப்பை மட்டும் கூறுகிறார். தன்னை மிகவும் நல்லவர் என்று சமூகத்திலும் பத்திரிக்கையாளர்களிடமும் காட்டி கொள்வதற்காகவும்
ஆவணப்பூர்வமாக இருக்கும் தகவல்களையும் தவறாக தருவதற்கு தயாராகிவிட்டார்.

தான் வியர்வை சிந்தி நிர்வாகத்தை வளர்த்ததாக கூறும் ஐயப்பனுக்கு
அதற்கான மூலதனம் யார் கொடுத்தது. குழுமத்தின் மதிரப்பு 60 கோடி என்பதே தவறான தகவல். இதனை குழுமத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் அவர் வியர்வை சிந்தி லாபம் சம்பாதிப்பதாக சொல்லும் அனைத்து நிறுவனங்களும், அவர் சுவீகாரம் வருவதற்கு சுமார் 30 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பே எனது பாட்டனார், தகப்பனார் மற்றும் என்னால் துவங்கப்பட்டவை.

ஆனால் எங்கள் பணத்தை முதலீடாகக் கொண்டு அவரின் சொந்த முயற்சியால் தொடங்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி பின் மூடப்பட்டன. இது தான் அவரின் நிர்வாகத் திறமை. (உதாரணம் Chennai Container Terminal,
Chetra, Chettinad Granites, Chettinad Smart City, Kakkinada Port,
Chettinad Shipping, Chettinad Power Corporation)

எனது சொந்த பணம் ரூபாய் 55 கோடி ஐயப்பனால் நிர்வகிக்கப்படும் Chettinad Coal Washeries Pvt. Ltd., என்ற நிறுவனத்திற்கு கடனாக கொடுத்திருந்தேன். அந்த பணத்தை ஐயப்பன் அவர்கள் தன்னால் நிர்வகிக்கப்படும் செட்டிநாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு Inter Corporate Deposits என்ற அடிப்படையில் வட்டிக்கு எடுத்துக்கொண்டு போலி
ஆவணங்கள் தயாரித்து எனக்கு திருப்பி தராமல் ஏமாற்றுகிறார்.

இதுகுறித்து கம்பெனி நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கை முடிக்க விடாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டு காலதாமதப்படுத்தி வருகிறார்.

மேலும் எனது தனிப்பட்ட பெயரில் இருக்கும் சொத்துக்களின் ஆவணங்களை மற்றும் தனிப்பட்ட சொத்து பத்திரங்கள், அறக்கட்டளை மற்றும் தொழில் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அவர் வசம் வைத்துக்கொண்டு என்னை அதை விற்கவிடாமல் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற
கெட்ட நோக்கத்தோடு கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.

ஐயப்பனால் நிர்வகிக்கப்படும் செட்டிநாடு செக்யூரிட்டி நிறுவனத்தின் ஆட்கள் மூலம் என்னுடைய வேலை ஆட்களை மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கி அதுகுறித்து தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கு அல்லாமல், மூன்று புகார் மனுக்கள்
கொடுக்கப்பட்டு மேல் நடவடிக்கை ஏதும் இல்லாமல் நிலுவையில் இருக்கின்றது.

ஐயப்பன் அவர்கள் பங்குதாரர்கள் கூட்டத்தில், பங்குதாரர்களின் முடிவின்படி என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாக தவறான தகவலை தந்துள்ளார்.

நான் என் மனைவியின் பெயரிலிருந்த பங்குகளை ஐயப்பனின் மனைவி திருமதி கீதா ஐயப்பன் அவர்களுக்கு நம்பிக்கை மோசடியின் பெயரில், நயவஞ்சகத்தின் அடிப்படையில் தானமாக கொடுத்ததன் மூலமும், நான் ஐயப்பனுக்கு தானமாக கொடுத்த எனது பங்குகளின் மூலமும், அவரது பங்குகள் 72% ஆகிவிட்டது. அதன் மூலமே ஐயப்பன், என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.

South India Corporation மற்றும் Chettinad Logistics கம்பெனியில் ஐயப்பனும்,
அவர் மனைவி கீதா ஐயப்பனும் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். இந்த இரண்டு கம்பெனிகளுக்கும் Chettinad Cement Corporation-லிருந்து பல கோடிகளுக்கு கான்ட்ராக்ட் கொடுத்து Chettinad Cement Corporation-ன் லாபத்தை குறைத்து தன் சொந்த பிரைவேட் கம்பெனிகளின் லாபத்தை அதிகரித்து கொள்கிறார்கள். கம்பெனி
சட்டப்படி Related Party Transaction Violation ஒரு பெரிய குற்றமாகும்.

ஐயப்பன் அவர்கள் அரண்மனை வாழ்க்கை தர்பார்க்கு அடிமையில்லை என்றும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்வதாக கூறிக் கொள்ளும் அவர் சுமார் 14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், ஆடி மற்றும் பஜிரோ கார்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, காரின் விலைக்கு சமமாக சுங்க வரியையும் கட்டி வாங்கியுள்ளார்.

மேலும் சென்னை அருகே இருக்கும் முட்டுக்காட்டிலும், விஜிபி கோல்டன் பீச் அருகிலும் மிகப்பெரிய சொகுசு மாளிகைகளை கட்டி பராமரிப்பு செலவிற்காக பல இலட்சங்களை செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். என்னிடமிருந்து பெற்ற பணத்தில் 4000 ஏக்கர் நிலங்களை பல்வேறு இடங்களில் ஐயப்பன் வாங்கியுள்ளார்.

ஐயப்பனை ஈன்ற தகப்பனார் திரு.சேக்கப்ப செட்டியார் அவர்கள் மதுரை தமிழ்ச் சங்கத்தில் நிர்வாக அறங்காவலராக பொறுப்பில் இருந்தபோது மிகப்பெரிய ஊழல்கள் செய்து தமிழ்ச் சங்கத்தின் பணத்தை திருடியதால், அவர் அறங்காவலர் பொறுப்பு முடிந்தவுடன் திரும்பவும் தேர்வு செய்யப்படவில்லை.

திரு.சேக்கப்ப செட்டியார் அவர்கள் சுமார் 60 லட்சம் செலவில் சிவகங்கை மாவட்டம் ஓக்கூரில் ஒரு மிகப்பெரிய மாளிகையை கட்டியுள்ளார். மேலும் பல கோடி மதிப்பில் ஒரு நாச்சம்மை மஹால் என்ற பெயரில் திருமண மண்டபமும் கட்டியுள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஊழியர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைதியாகவும், சுமூகமாகவும் பேச வேண்டிய கூட்டத்தில் ஊழியர்களின் உள்ளுணர்வுகளையும், அவர்களின் பிரச்சனைகளையும் பற்றி மிகவும் தரக்குறைவாகவும், அவமானப்படுத்தும் விதத்திலும் பேசி பிரச்சனையை பெரிதாக்கி,
அரசாங்கம் தலையிட்டு கையகப்படுத்தும் அளவிற்கு கொண்டு சென்றதே ஐயப்பனின் அகந்தையும், ஊழியர்களை துச்சமாக மதிக்கும் தவறான அணுகுமுறையே ஆகும்.

ஐயப்பனின் எதேச்சியதிகார போக்கினால்தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு கையகப்படுத்தும் சூழ்நிலை உருவாகியது.என்னுடைய தனிப்பட்ட பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்பது சம்மந்தமாகவும், அறக்கட்டளை நிர்வாகங்கள் குறித்தும் ஐயப்பன் அவர்களும், அவர்களுடைய வேலை ஆட்கள் மற்றும் நண்பர்கள் மூலமாகவும் சுமார் 9 வழக்குகள் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்குகளில் ஏழு வழக்குகள் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்த்திலும், ஒரு வழக்கு பொன்னேரி சார்பு நீதிமன்றத்திலும், ஒரு வழக்கு கர்நாடக மாநிலம விராஜ்பேட் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்பொழுதும் நிலுவையில் இருந்து வருகிறது.

ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் ஒரு வழக்கோ அல்லது இரண்டு வழக்கோ போட்டதாக பொய்யான தகவல்களை அளித்துள்ளார்.

23.05.2015 அன்று மதியம் சுமார் 3 மணியளவில் ஐயப்பனிடம் வேலை செய்யும் சுப்ரமணியம் தலைமையில் செக்யூரிட்டி ஆட்கள் அழகு, தியோலால் மற்றும் சுமார் 30 நபர்கள் செட்டிநாடு இல்லத்தில் புகுந்து பணியாளர்களை தாக்கி, ஒரு அறையில் இருந்த எங்களின் பூட்டை உடைத்து, அவர்கள் வேறொரு பூட்டை போட்டுவிட்டனர்.

இதுகுறித்து நான் கேட்டபோது, நாங்கள் அப்படிதான் செய்வோம் உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போதே, மதியம் இரண்டு முறையும், இரவு மூன்று முறையும் அவசர போலீஸ் 100க்கு தகவல் தெரிவித்து எந்த ஒரு வாகனமும் வரவில்லை.

இ-5 பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டும் எந்தவிதமான மேல்நடவடிக்கையும் இதுநாள் வரையும் எடுக்கவில்லை. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எம்ஏஎம் ராமசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
MAM.Ramasamy has told many complaints on adopted son in His Statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X