For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் அறிக்கைகளும், காதில் பூ சுற்றும் கட்சிகளும்!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

அதிமுக தேர்தல் அறிக்கை வியாழக்கிழமை வெளியாகிவிட்டது. நீண்ட சஸ்பென்ஸ்க்குப் பிறகு தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டு விட்டார். இந்த முறை தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா இலவசங்களை அள்ளி விடுவார் என்று பரவலாக ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. நன்கு திட்டமிட்டும் இந்த எதிர்பார்ப்பு கிளப்பபட்டது. ஆனால் பூமியை குலுக்கும் எந்த புதிய இலவசங்களும் இந்த முறை அறிவிக்கப் படவில்லை.

ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் இல்லை...

நூறு யூனிட் மின்சாரம் இலவசம், அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் விலையில்லா செல்ஃபோன், பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க 50 சதவிகித மானியம், பேறு கால விடுப்பு 18 மாதங்களாக உயர்வு போன்றவை தவிர பெரியதாக எதுவுமில்லை. இந்த முறை ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், இலவச ஸ்கூட்டி கிடைக்கும் என்றே வாய் பிளந்து காத்துக் கிடந்த திருவாளர் பொது ஜனத்தின் முகத்தில் அம்மா கரியை அள்ளிப் பூசி விட்டார்.

Manifestos and the cheating parties

அறிவிக்கப்பட்ட இந்த இலவசங்களை கொடுப்பதற்கே குறைந்தது 50,000 கோடி ரூபாயாவது ஆண்டுக்குத் தேவைப் படும். அதாவது வெற்றிப் பெற்று அதிமுக ஆட்சி அமைத்தால் ஐந்தாண்டுகளில் 2.5 லட்சம் கோடி செலவாகும். அடேங்கப்பா ... மாபெரும் புரட்சியை நிகழ்த்த தமிழகத்தில் அதிமுக அணி திரண்டு வந்து கொண்டிருக்கிறது.

மின் வாரியத்தின் இறுதி சடங்கு விரைவில்...

ஏற்கனவே தமிழகம் 2 லட்சம் கோடிக்கு மேல் கடனில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 100 யூனிட்டு வரை அனைவருக்கும் இலவச மின்சாரம் என்றால் அதற்கான தொகையை மாநில அரசு தமிழக மின்வாரியத்துக்கு வழங்க வேண்டும். ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் வேண்டும். எங்கேயிருந்து வரப் போகிறது இவ்வளவு பணம்?

ஏற்கனவே திவாலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தமிழக மின் வாரியத்தின் இறுதி சடங்குகளை ஜெயலலிதா விரைவுப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளில் அபத்தமான வாக்குறுதிகளுக்கும் பஞ்சமில்லை.

கிளாஸ் மட்டும் வச்சு எப்படி டீ போடுறது.. டீத் தூள் வேணுமே..

உதாரணத்திற்கு அரசு கேபிள் சேவைக்கு இலவச செட் பாக்ஸ் வழங்கப் போகிறேன் என்கிறார். அரசு கேபிள் சேவைக்கு இன்னமும் மத்திய அரசு டிஜிட்டல் ஒளிபரப்புக்கான அனுமதியைக் கூட கொடுக்கவில்லை. டிஜிட்டல் ஒளிபரப்பு செய்தால்தான் செட் பாக்ஸ் தேவைப்படும். ஆனால் தான் செட் பாக்ஸ் இலவசமாக தரப் போகிறேன் என்கிறார் ஜெ. அந்த செட் பாக்ஸை வைத்துக் கொண்டு வீட்டிலுள்ள குழந்தைகள் சொப்பு பொம்மை விளையாட்டை வேண்டுமானாலும் ஆடிக் கொண்டாடி மகிழலாம். குழந்தைகளுக்கு மற்றோர் இலவசத்தை வேறு பெயரில் ஜெயலலிதா வழங்குவதற்கு உறுதி பூண்டு விட்டார்.

இந்த குறிப்பிட்ட அறிவிப்பு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்க ஆயத்தமாகி வருகிறார்கள். ‘'டிஜிட்டில் ஒளிபரப்புக்கு உரிமம் பெறாத அரசு கேபிள் எப்படி இலவச செட் பாக்ஸ் வழங்க முடியும்? அரசு கேபிளுக்கு டிஜிட்டில் ஒளிபரப்பு உரிமம் வழங்க மத்திய அரசுக்கு உத்திரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்னமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்தச் சூழலில் இந்த இலவச அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, தேர்தல் நடத்தை விதிகளுக்கும் மாறானது. காரணம் உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்தில் நீங்கள் வாக்குறுதியை அளிக்கிறீர்கள். நாங்கள் இன்றோ நாளையோ தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு கொடுக்க இருக்கிறோம்'' என்று ஒன் இந்தியா விடம் கூறினார் சென்னையைச் சேர்ந்த, டி.சி.ஓ.ஏ கேபிள் கூட்டமைப்பின் ஆபரேட்டர் ஒருவர்.

நாங்கள் சளைத்தவர்களா.. இது திமுக வாக்குறுதிகள்

இது போன்று நடைமுறைக்கு ஒவ்வாத வாக்குறுதிகளில் கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை இல்லை ... அதாவது மக்களை திட்டமிட்டே ஏமாற்றுவதில்தான் ... திமுக தேர்தல் அறிக்கையில் கல்விக் கடன் ரத்து என்பதில் பெரிய சிக்கல் இருக்கிறது. பொதுத் துறை வங்கிகளுக்கு ரத்தாகும் கடன் தொகையை மாநில அரசு கொடுத்தாக வேண்டும். வாராக் கடன்களில் தள்ளாடிக் கொண்டிருக்கும் வங்கிகள் இதனை மாநில அரசிடம் இருந்துதான் வசூலிக்க வேண்டும். பணத்திற்கு தமிழக அரசு எங்கே போகும்?

Manifestos and the cheating parties

அனைத்து கடற்கரையோர மாவட்டங்களிலும் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் நிறைவேற்றப்படும் .... ஒரு மாவட்டத்தில் இதனை ஏற்படுத்துவதே மிகுந்த செலவாகும் எனும் போது எல்லா மாவட்டங்களிலும் என்று பேசுகிறார் தமிழினத் தலைவர். இதற்கான நிதி எங்கேயிருந்து வரும் என்பது அவருக்கு மட்டும் தான் தெரிந்த ரகசியம்...

பாஜகவை விட்டு கட்சிகள் ஓடியது ஏன்.. தேர்தல் அறிக்கையில் விளக்கம்...

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வழக்கமாக எல்லா அரசியல் கட்சிகளும் கொடுக்கும் அலப்பரைகள் இருந்தாலும் அபாயகரமான சில விஷயங்களும் இருக்கின்றன. மத மாற்றத் தடை சட்டம் கொண்டு வருவோம் என்கிறது தமிழக பாஜக. ஏற்கனவே ஜெயலலிதா 2002ம் ஆண்டில் இதனை கொண்டு வந்து விட்டு அதற்கான அரசியல் விலையை 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கொடுத்தார். தோற்றவுடனேயே மத மாற்றத் தடை சட்டத்தை வாபஸ் பெற்றார்.

Manifestos and the cheating parties

இன்று பாஜக மத மாற்றத் தடை சட்டம் கொண்டு வருவோம் என்கிறது. அடுத்தது தீவிரவாதத்தை தடுக்க தமிழகத்தில் புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என்கிறது. தனி சட்டத்தைக் கொண்டு வந்து தீவிரவாதத்தை எதிர்கொள்ளக் கூடிய அளவுக்கு தமிழகத்தில் நிலைமை அந்தளவுக்கு மோசமாக இருக்கிறதா? ஆனால் பாஜக இதற்கு தனி சட்டம் கொண்டு வருவோம் என்கிறது. தங்களுக்குள் எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், அதிமுக, திமுக, தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி, பாமக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி போன்றவை நினைத்தும் பார்க்காத விஷயங்கள் இவை. வித்தியாசமான கட்சி அல்லவா பாஜக? இப்படித்தான் யோசிப்பார்கள்... இப்போது புரிகிறதா தமிழ் நாட்டில் எந்த கட்சியும் ஏன் பாஜகவை சீண்டவில்லை என்பதன் சூட்சுமம்?

அபத்தக் களஞ்சியம் தேமுதிக...

தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை பற்றி சொல்லவே வேண்டாம். ஏற்கனவே ஒன் இந்தியா வில் இது பற்றி, ‘'அபத்தக் களஞ்சியம்'' என்று எழுதிவிட்டோம். மற்ற கட்சிகளாவது, பாஜக உட்பட, தர்க்கத்துக்கு உட்பட்டு வாக்குறுதிகளை வழங்குவார்கள். ஆனால் எந்த தர்க்கத்துக்கும் கட்டுபடாது, அடிப்படை விவரங்கள் கூட இல்லாது வாக்குறுதிகளை அள்ளி விட்டிருப்பவர் கேப்டன்.

பெட்ரோல், டீசல் விலையை 45, 35 என்று ஒரே மாதிரியே வைத்திருப்பேன் ... நல்லி, போத்தீஸ் போன்றவை தமிழ்நாட்டுக்கு வெளியே கடை திறக்க அனுமதி தரப்படும் என்பது போன்ற புல்லரிக்கும் வாக்குறுதிகளை அள்ளி விட்டு அரசியல் நடத்தும் புரட்சிக் கேப்டன் அவர்.

இது மநாகூ.....

மநாகூ தேர்தல் அறிக்கையில் கிட்டத்தட்ட அனைத்து விதமான கடன்களும் தள்ளுபடியாகின்றன... மாணவர்களின் கல்விக் கடன், விவசாயிகளின் கடன் என்று எல்லா கடன்களும் ரத்து.... எல்லா கடன்களையும் ரத்து செய்து விட்டு மாநிலத்தின் வருவாயை கொண்டு இலவசங்களையும் எப்படி தொடர்ந்து வழங்குவார்கள் என்று எந்த குறிப்பும் இல்லை. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ... அரசு வேலைகள் அசுர வேகத்தில் அறுகி வரும் சூழலில் எப்படிக் கொடுப்பார்கள் என்பது தோழர்களுக்கு மட்டுமே தெரிந்த சிதம்பர ரகசியம் தான்.

பஸ்ல ஏறலாம்.. டிக்கெட் எடுக்க வேண்டாம்.. இது பாமக

பாமகவின் தேர்தல் அறிக்கையிலும் வெத்து வேட்டு அறிவிப்புகளுக்கு பஞ்சமில்லை. சென்னையில் இலவச பஸ் சேவை. யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் ஏறி எங்கே வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். கட்டணம் ஏதுமில்லை. பொருளாரதாரத்தின் அடிப்படை கூறுகள் பற்றிய பரிச்சயம் கூட இல்லாமல் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இது என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன்.

Manifestos and the cheating parties

தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவோம்... திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்குவோம் என்றெல்லாம் முழங்குகிறது பாமக அறிக்கை ...ஒரு தலைநகரத்தை உருவாக்குவதென்பது எவ்வளவு கடினமான காரியம்? எத்தனை லட்சம் கோடி செலவாகும்? எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்? இதுபற்றியெல்லாம் எந்த விளக்கமும் பாமக தேர்தல் அறிக்கையில் இல்லை... அது சரி... ஆட்சிக்கு வர கிஞ்சித்தாவது வாய்ப்புள்ள கட்சிதானே அது பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்? பாமக வுக்கு எதற்கு அந்தக் கவலை எல்லாம்.....

தேர்தல் அறிக்கைகள் மக்கள் மன்றத்தில் வைத்து விவாதிக்கப்படுவது என்பது ஜனநாயகத்துக்கு நல்லதுதான். ஆனால் மக்களை திட்டமிட்டு ஏமாற்றுவதற்காகவே இன்று இந்த அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள் என்றால் அதனை என்னவென்று சொல்லுவது?

கழுதைகளுக்கு நல்ல சாப்பாடு...

சில வாரங்களுக்கு முன்பு ‘'துக்ளக்'' வார இதழில் அட்டைப்படத்தில் இரண்டு கழுதைகள் பேசிக் கொண்டிருப்பது போல ஒரு கார்ட்டூன் வந்தது. அதில் ஒரு கழுதை மற்றோர் கழுதையிடம் கேட்கும்...'எங்கே போயிருந்தாய், ஆளைக் காணோம்? அதற்கு இந்தக் கழுதை சொல்லும் ..''எல்லா அரசியல் கட்சி அலுவலகங்களுக்கும் ஒரு ரவுண்ட் போயிருந்தேன் ... தேர்தல் அறிக்கைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார்களாம் ....திண்பதற்கு ஏராளமான காகிதங்கள் தீனியாக கிடைக்கும் என்பதற்காக போயிருந்தேன்''. இது அவலமான, எதிர்மறையான கருத்தோட்டம்தான்... கட்சிகளின் ஜனநாயக செயற்பாடுகளை இழிவுபடுத்துவதுதான்... ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் விடுக்கும் தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கும் போது இந்தக் கார்ட்டூனை முற்றிலுமாகவும் புறந்தள்ள முடியாது.

2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த ஒரு தீர்ப்பில் அரசியல் கட்சிகள் கண்டமேனிக்கு, தங்கள் இஷ்டம் போல இலவசங்களை வாக்குறுதிகளாக கொடுக்கக் கூடாதென்று கூறினாலும் தெளிவான உத்தரவு எதனையும் இந்த விஷயத்தில் பிறப்பிக்கவில்லை.. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரண்டுங் கெட்டான் தீர்ப்பினை அளித்து விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் தள்ளி விட்டு விட்டது. அதன் பிறகு தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் சமமற்ற போட்டியை உண்டாக்கும் விதத்திலான இலவசங்களை கொடுக்க வேண்டாம் என்று கட்சிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் இது வெறும் அறிவுரை தான். உத்தரவு அல்ல.

இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் பாலாஜி என்பவர் நேற்றைய ஜெயலலிதாவின் இலவச அறிவிப்புகளுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியிருக்கும் மனுவில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். ‘'இது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் முழு அளவிலான லஞ்சம் (whole sale bribe of voters). எல்லா கட்சிகளும் இதனை செய்கின்றன. உடனே தேர்தல்களை ரத்து செய்து விட்டு, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் கணக்கில் கொண்டு அதில் பொது நலன் சம்மந்தமான இலவசங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும்'' என்று மனுவில் கூறியிருக்கிறார் சுப்பிரமணியன் பாலாஜி.

இவர் பாஜக உறுப்பினர். இவரது கருத்தை பாஜகவே எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளும் என்பது வேறு விஷயம். ஆனால் அவர் எழுப்பியிருக்கும் விஷயங்கள் மிக, மிக, முக்கியமானவை என்பதே கவனிக்கத்தக்கது.

English summary
TN political parties are cheating the people with their manifestos and the promises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X