For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆவின் பால் தரமானது என்று முதல்வர் கூறுவது நகைப்புக்குரியது: வைகோ!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆவின் பால் கலப்படம், ஊழல் என்று செய்தி வரும் போது ஆவின் பால் தரமானது என்று முதல்வர் கருத்து கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

''ஆவின்பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 என்ற அளவில் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற மூன்று ஆண்டுகளில் ஆவின் பாலின் விலை 84 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

MDMK leader Vaiko demands rollback of milk price hike

2011ல் சமன்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.18.50 ஆக இருந்தது. தற்போது ரூ.34 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சாதாரண ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கும்.

ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு தரமான பால், நியாயமான விலையில் அளிப்பதை தமிழக அரசு நோக்கமாக கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. ஆவின் பாலில் கலப்படம் செய்து கோடி கோடியாக கொள்ளையடித்த ஆளும்கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளபோது, முதல்வர் ஆவின் பாலின் தரம் குறித்து சான்று தருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாகவே ஆவின் பால் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. தற்போது ஆவின் கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டில் தினமும் 21.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. கால்நடைகள் விலை, பசுத்தீவனம், உலர் தீவனங்கள் விலை உயர்வு போன்றவற்றால் பால் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டதால், பசும்பால் லிட்டருக்கு ரூ.7, எருமை பால் ரூ.9 ஆக உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கோரிவருகிறது.

ஆனால், தற்போது பசும்பாலுக்கு ரூ.5ம், எருமைப் பாலுக்கு ரூ.4ம் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக முதல்வர் கூறியுள்ளார். இது பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியாகக் கூடிய ஒன்றல்ல. பால் கொள்முதல் விலையை உயர்த்துவதை ஈடுகட்ட ஆவின்பாலின் விலையை தாறுமாறாக ஏற்றுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

இலவசத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு, பால் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கி கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமேயொழிய நுகர்வோர் மீது சுமையை இறக்குவது அநீதியாகும்.

தமிழகத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகவும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஆவின் நிறுவனம் அருட்கொடையாக திகழ்ந்து வருவதை ஒழித்துக் கட்டுவதற்கு பல அக்கறை உள்ள சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. அரசின் கட்டுப்பாடோ, கண்காணிப்போ இல்லாமல் தனியார் பால் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

ஆவின் நிறுவனத்தைவிட அதிகமாக கொள்முதல் விலையை தருவதால், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களை நாடுகின்றனர். அவை பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருவதோடு, பாலின் விலையையும் சந்தையில் அவர்கள் விரும்பியவாறு நிர்ணயம் செய்து அதிகரிக்கிறார்கள்.

ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை கட்டுபடியாகக் கூடிய வகையில் நிர்ணயிக்காததாலும், ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் நிர்வாக ஊழல்களாலும், பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் நிறுவனங்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஆவின் பால் கூட்டுறவு மையங்கள் 12 ஆயிரமாக இருந்தது. தற்போது 8 ஆயிரமாக குறைந்துவிட்டது.

தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு மானியம் அளித்தும், ஆவின் பால் கொள்முதல் விலையை அதிகரித்தும், ஆவின் நிறுவனத்தின் ஊழலைக் களைந்து அதை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களை வாட்டி வதைக்கும் ஆவின் பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

English summary
MDMK leader Vaiko today demanded withdrawal of the Rs 10 per litre hike in the price of 'Aavin' milk announced by the AIADMK Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X